Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோன்பின் முக்கியத்துவம்!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (12:57 IST)
நோன்பானது நமக்கு மட்டும் கடமையான ஒரு நடைமுறையல்ல. நமக்கு முன் தோன்றி மறைந்த அனைத்துச் சமுதாயத்திற்கும் இது விதியாக்கப்பட்டுள்ளது. நோன்பு என்பது ஒரு மகத்தான வழிபாடு என்றிருக்காவிடில், இறைவன் எல்லா சமுதாயத்திற்கும் கடமையாக்கி இருக்க மாட்டான்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன எ‌ன்று ந‌‌பி (‌ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூ‌றினா‌ர்க‌ள்.

ரமலான் மாதத்தின் சிறப்பு என்னவெனில் இந்த மாதத்தில் நோன்பாளிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தீமைகள் மறைக்கப்படுகின்றன. அதாவது, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், தன் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைத் திருப்திப்பட்டவராகவும் - அதற்கான நன்மையை - நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் யார் நோன்பு நோற்கிறாரோ, மேலும் அது கடமையாக்கப்பட்டதை வெறுக்காமலும் அதன் நற்கூலியில் சந்தேகம் கொள்ளாமலும் யார் நோன்பு நோற்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் எ‌ன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஐங்காலத் தொழுகைகளும், ஜும்ஆத் தொழுகைகளும் ரமலான் மாத நோன்புகளும் - அவ்வப்போதைய காலத்தின் பாவங்களைப் போக்கி விடுகின்றன. பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில் ..! (முஸ்லிம்)

நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியாது. மாறாக நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது! மேலும், இறைவன் கூறுகின்றான்: மனிதனின் எல்லா நடைமறைகளும் அவனுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக! அது எனக்குரியது. உங்களில் யாரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள் பேச வேண்டாம். கூ‌ச்சலிட்டுப் பேச வேண்டாம். யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று கூறி விடட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை கொண்டதாகும்.

நோன்பாளிகளுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று: நோன்பு திறக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி, இரண்டாவது: தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி!.

முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் - மனிதனின் ஒவ்வொரு கடைபிடிப்பிற்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.

நோன்பின் சிறப்புக்கள்!

முதல் சிறப்பு: நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும். நோன்பின் பொழுது சிறுகுடல் இரப்பை உணவின்றிக் காலியாகக் கிடக்கும் பொழுது, வாயில் எழும் இயல்பான வாடை, மனிதர்களிடத்தில் மிகவும் வெறுப்புக்குரிய ஒன்று. ஆனால் இறைவனிடத்திலோ இது கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும்.

இரண்டாவது சிறப்பு : மலக்குகள் நோன்பாளிகளுக்காக - நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத, இணை வைக்காதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். அவர்கள் பிரார்த்தனை செய்தவதன் நோக்கம் அல்லாஹ் அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதும், அதன் மூலம் நோன்பாளிகளின் அந்தஸ்த்தைப் பிரகடனப்படுத்துவதும், அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்ற நோன்பின் சிறப்பை விளக்குவதுமாகும்.

மூன்றாவது சிறப்பு : அல்லாஹ் ஒவ்வொரு நாளும் சுவனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றான். மேலும், கூறுகின்றான் : (சுவனமே) என் நல்லடியார்கள் கஷ்டத்தையும் சிரமத்தையும், பொருட்படுத்தாமல் உன் பக்கம் வருவதற்கு மிகவும் நெருங்கி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் தனது சுவனத்தை அலங்கரிப்பதன் நோக்கம், அவனுடைய நல்லடியார்களை உற்சாகப்படத்துவதும் சுவனம் புகவதில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதுமாகும்.

நான்காவது சிறப்பு : மூர்க்கத்தனமான சைத்தான்கள் சங்கிலிகளாலும், விலங்குகளாலும் பிணைக்கப்படுகிறார்கள். ஆதலால், அவர்களது விருப்பப்படி நல்லடியார்களைச் சத்தியத்திலிருந்து வழிகெடுக்கவோ அல்லது நல்லனவற்றைச் செய்ய விடாமல் அவர்களைத் தாமதப்படுத்தவோ முடியாது. இது நல்லடியார்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியாகும். அவர்களின் விரோதியை விட்டும் அவர்களைத் தடுத்தும் விட்டான். அந்த விரோதி எப்படிப்பட்டவன் எனில், தன்னைப் பின்பற்று பவர்களை நரகத்தில் கொண்டு செல்லக் சேர்க்க் கூடியவன். இந்த நல்லுதவியால் தான் நல்லோர்கள் ஏனைய நாட்களை விட அதிகமாக இம்மாதத்தில் நல்லமல்கள் செய்வதிலும், தீமைகளை விட்டு விலகுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்கள்.

ஐந்தாவது சிறப்பு : இம்மாதத்தின் கடைசி இரவில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றார். இது நோன்பையும், தொழுகைகளையும் அவர்கள் முறையாக நிறை வேற்றியிருக்கும் பட்சத்தில் தான்! நோன்பு செய்து முடித்தவுடன் அதற்கான கூலியை இந்தச் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் முழுமையாக வழங்குவதென்பது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

- குளச்சல ் சாதிக்

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!