இஸ்லாமிய மாதங்களிலேயே ரமலான் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தை, மற்ற எல்லா மாதங்களுக்கும் தலைமையான மாதம் என்று அருளியுள்ளார்.
webdunia photo
WD
இதற்குக் காரணம் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன என்று ஹதீஸ் கிதாபுகளில் கூறப்பட்டுள்ளன.
ஒருமாத காலம் மேற்கொள்ளப்படும் ரமலான் நோன்பானது, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க கடைப்பிடிக்கப்படுவதால், அதற்கான கூலியை நோன்பை மேற்கொள்பவருக்கு அல்லாஹ்வே நேரடியாக வழங்குகிறார் என்பதே இந்த மாதத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது.
மற்ற மாதங்களில் செய்யும் நன்மைகளை அல்லாஹ், மலக்குகளின் வாயிலாக வழங்கச் செய்கிறார்.
அல்லாஹ், நோன்பாளிகள் மீது "ஜக்காத்' என்ற ஏழை வரியைக் கடமையாக்கி உள்ளார். ஜக்காத் யார் மீது கடமை என்பதையும், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
நோன்பாளி, "லைலத்துல் கத்ர்' என்ற நாளிலோ அல்லது அதற்கு முன்போ, தன்னிடம் உள்ள சொத்து, தங்கம், மற்ற வருவாய்களில் இரண்டரை விழுக்காட்டைக் கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியான ஏழைகளுக்கு கொடுத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோன்பாளிகள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போலவே, ஏழை எளியவர்களும் அந்தப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஜக்காத் குறித்து நபிகள் நாயகம் அருளியது:
`` எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. வாய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனும் ஏழைகளுக்கு உதவியை கொடுக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்''.
" நெருப்பை தண்ணீர் அழித்து விடுவது போன்று, செய்கின்ற தர்மங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன; தர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடுகின்றது; துர்மரணத்தையும் தடுக்கின்றது''.
இன்னும் இது போன்ற பல சிறப்புகள், ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதில் இருக்கின்றன. எனவே ஆண்டுக்கு ஒரு முறை "ஜக்காத்' என்ற கட்டாயக் கடமையை நாம் இப்புனித மாதத்தில் நிறைவேற்றி, ஏழைகளும் வறியோர்களும் ஈத் பெருநாளில் மகிழ்ச்சியடையும்படி செய்வோமாக.