இஷாந்த் சர்மாவைத்தான் ஒரு வேளையிலும் நம்ப முடியாது. புவனேஷ் குமார் அப்படியல்ல என்றுதான் அறிந்திருந்தோம். ஆனால் நியூசீலாந்தின் பவர் ஹிட்டர்ஸ் கோரி ஆண்டர்சன், ராஸ் டெய்லரைப் பார்த்தவுடன் புவனேஷுக்கும் சறுக்கல் ஏற்பட்டது. 37வது ஓவரை புவனேஷ் நேற்று தொடங்கும்போது அவர் 5 ஓவர்களில் 20 ரன்களையே கொடுத்திருந்தார். பிறகென்ன சாத்துப்படிதான். காரணம் அந்த ஓவரில் 4புல்டாஸ்களை தொடர்ந்து வீசினார் புவனேஷ். ஒரு புல்டாஸை கோரி ஆண்டர்சன் போனால் போகட்டும் என்று மன்னித்து சிங்கிள் எடுத்தார். ஆனால் அடுத்த 3 புல்டாஸ்களையும் டெய்லர் பவுண்டரிகளாக வெளுத்துக் கட்டினார்.
(
அ)கோரி ஆண்டர்சனும் 'உஷ்'வினும்!
டெய்லருக்கு வெறி பிடித்தால் போதுமா அடுத்தது கோரி ஆண்டர்சன் நான் என்ன வேடிக்கைப் பார்க்கவா இறங்கியிர்க்கிறேன் என்று அஷ்வினை 'உஷ்'வின் ஆக்கினார். எப்படியிருந்தாலும் ஒரு ஸ்லாக் ஸ்வீப் சாத்து விழப்போகிறது என்று தெரிந்தே அஷ்வின் ஒரு பந்தை வேகமாக வீசினார் ஆனால் அவரையும் விட வேகௌம், ரிஃப்ளெக்சும் அதிவேக கரங்களும் உடையவர் அல்லவா கோரி ஆண்டர்சன், ஒரே அடி பளார்... அவ்வளவுதான் பந்து காணாமல் போனது. மீண்டும் அதே பந்து அதே ரிசல்ட். பிறகு தோனிக்கு இஷாந்த் மீது என்ன கடுப்போ கோரி ஆண்டர்சன் இஷாந்த் சர்மாவை டர்ர் ஆக்கி விடுவார் என்று தெரிந்தும் பந்து வீச அழைத்தார். கோரிக்கு பவுலிங் போட பயந்து போய் வைடு கிரீஸிற்கு வெளியே இரண்டு பந்துகளை வீசினார். இரண்டும் வைடு. அடுத்த பந்து சற்றே உள்ளே வீசினார் அவ்வளவுதான் 'டமால்'... லாங் ஆஃபில் சிக்ஸ், பிறகும் ஒரு பந்தை உள்ளே வீச மீண்டும் சிக்ஸ்... கடைசியில் தோனி வந்து ஏதோ காட்டமாக கூற ஸ்லோ ஷாட் பிட்சை வீசினார் அதுஏதோ குருட்டாம் போக்கில் பவுண்டரி அருகே கேட்ச் ஆனது. அது லாங் பவுண்டரி என்பதால் கேட்ச் ஆனது. இல்லையெனில் அதுவும் ஒரு சிக்ஸ்தான். சில பவுலர்கள் வீசும்போது ஏனோ சில பேட்ஸ்மென்களுக்கு குரோதம் வந்து விடுகிறது. இஷாந்த்தை பார்த்தால் கோரி ஆண்டர்சன் அகோரி ஆண்டர்சன் ஆகிவிடுகிறார். இந்த ஒருநாள் தொடர் முடிவதற்குள் இஷாந்த்திற்கு அவர் முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்! ஏனெனில் அவர் முடிவு கட்டினால்தான் உண்டு. தோனி இஷாந்த் பவுலிங்கை பவர் ஹிட்டர்ஸ் அடிக்கிறார்கள் என்ன செய்ய முடியும்? என்று நம்மையே கேள்வி கேட்பார்.
கோலிகிட்ட முடியுமா?
சில வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து அடக்கி ஒடுக்கி வீழ்த்த முடியும், ஆனால் கோலியிடம் இது நடக்காது இந்த விதத்தில் இவர் சச்சினை விடவும் பாண்டிங்கை அதிகம் நினைவு படுத்துகிறார். நேற்று சவுதீ வீசிய பந்து ஒன்று எதிர்பாராத விதமாக மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஏறக்குறைய சவுதீயிடமே கேட்சாகியிருக்கும்போல் சென்றது. ஆனால் நல்லவேளையாக கேட்ச் பிடிக்க முடியவில்லை. சவுத்தீ அதனை பிடித்து விடலாம் என்று டைவ் அடித்தார் ஆனால் முடியவில்லை. சில பல வார்த்தைகள்,பார்வைகள் என்று கோலியை அன்செட்டில் செய்யப் பார்த்தனர். ஆனால் கோலி எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா? அடுத்த பந்தே, சவுதீ ஓடி வர கோலி இறங்கிவர எக்ஸ்ட்ரா கவர் திசையில் பயங்கரமான சிக்ஸரை விளாசினார் கோலி.