கோரி ஆண்டர்சனின் விக்கெட்டை வீழ்த்திய போது, அது இஷாந்த் ஷர்மா வெளிநாட்டு மண்ணில் பதிவு செய்த 100-வது விக்கெட்டாக பதிவானது. இந்த மைல்கல்லை எட்டிய 8-வது இந்தியர் இஷாந்த் ஷர்மா ஆவார். மொத்தத்தில் அவர் 55 டெஸ்டில் விளையாடி 164 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த தொடரில் இஷாந்த் ஷர்மா இதுவரை 15 விக்கெட்டுகளை தன்வசப்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் நியூசிலாந்து தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரமாகாந்த் தேசாய், ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தலா 13 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேக கூட்டணி இஷாந்த் ஷர்மாவும் (6), முகமது ஷமியும் (4) இணைந்து கைப்பற்றியதும் ஒரு வகையில் சாதனை தான். அதாவது இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் முடக்குவது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு இவ்வாறு 1983-ம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கபில்தேவும் (9), பல்விந்தர் சந்தும் (1) சேர்ந்து 10 விக்கெட்டுகளையும் சாய்த்து இருந்தனர்.