பர்மா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் நமது நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர். இவற்றில் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கதார் இயக்கம் மிக முக்கியமானதாகும். லாலா ஹர்தயாள், ராஷ் பிஹாரி போஸ் (இந்திய தேச ராணுவத்தை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்காலே, ஷோகன் சிங் வாக்னா, தோஹி கத்தார் சிங் ஆகியோர் இந்திய விடுதலைக்காக இவ்வமைப்பைத் துவக்கி அங்கிருந்தபடியே பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 400 கதார் வீரர்களைச் சுமந்துகொண்டு கொல்கத்தா துறைமுகம் வந்த கோம்காதா மாரு என்ற கப்பலிற்கும், வெள்ளையப் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. இதில் கதார் வீரர்கள் வீரமரணம் எய்தினர். சிலரே தப்பித்தனர்.
இதனால் கதார் இயக்கம் சளைத்துவிடவில்லை. 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை துவக்குவதற்கு நாள் குறித்து அதற்கான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஏராளமான நிதி திரட்டி ஆயுதங்களை வாங்கிக் குவித்த கதார் இயக்கம், தெற்காசிய நாடுகளின் ராணுவத்தில் இருந்த இந்திய சிப்பாய்களை பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டியது.
ஆனால், அதன் ரகசியத் திட்டங்களை கிர்பால் சிங் என்பவர் வெள்ளையர் ஆரசிடம் போட்டுக் கொடுக்க லாகூர் சதி வழக்கில் பல கதார்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.