Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள்!

சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள்!

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:37 IST)
வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நாம், சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.

சும்மா வரவில்லை இந்த சுதந்திரம்...! எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடி உயிர்த் தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தது ஆண்கள் மட்டுமல்ல. பல்லாயிரக்கணக்கான பெண்களும்தான். இந்த வீரமங்கைகளில் ஒரு சிலரையாவது இந்த சுதந்திரத்தினத்தில் நினைவு கூறவேண்டியது நமது கடமை.

புயலாய் மாறிய ஜான்சிராணி லெட்சுமி பாய் :

webdunia photoFILE
‘பூ ஒன்று புயலான கத’ தான் ஜான்சி ராணியின் வீவரலாறு. இளமவயதிலேயே விடுதலை வேட்கையுடன் வளர்ந்த ஜான்சி ராணி, கணவரின் மரணத்துக்குப் பின்னர் தனது நாட்டைக் காக்க, புயலாக மாறி இறுதிவரை போராடி போர்க்களத்திலேயே உயிர் நீத்தார்.

புண்ணியத் தலமான காசியில் 1828ல் பிறந்த லட்சுமி பாய், 1842ல் ஜான்சி மகாராஜாவுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டதால் ஜான்சி ராணி லட்சுமி பாய் ஆனார்.

இல்லற வாழ்க்கைக்கு பரிசாக 1851ல் ஒரு ஆண்குழந்தை பெற்றெடுத்தார்.
4 மாதத்தில் அந்த குழந்தை இறந்ததால் துக்கம் தாளாமல் மகாராஜாவும் மரணம் அடைந்துவிட்டார்.

‘ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த ராஜ்ஜியம் எங்களுக்கே சொந்தம’. என உரிமை கொண்டாடி வந்த பிரிட்டிஷார், இதனால் மிகவும் மகிச்சியடைந்தனர்.

ஆனால், ஜான்சி ராணி பிரிட்டிஷாருக்கு அடிபணிய மறுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரிட்டிஷார், அரண்மனையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்தனர். ஜான்சி ராணியையும் விரட்டியடித்தனர்.

இதனால் கொதித்தெழுந்த ஜான்சிராணி, பிரிட்டிஷாருக்கு எதிராக படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் சுதந்திரப் போரில் தீவிரமாக குதித்தார்.
தனது வளர்ப்பு குழந்தையை மடியில் சுமந்தபடியே ஆண் வேடம் பூண்டு பிரிட்டிஷாருடன் கடுமையாக மோதினார். எனினும், பிரிட்டிஷார் நவீன போர்க்கருவிகள் மூலம் தாக்குதல் நடத்தியதால், போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார் இந்த வீர பெண்மணி.

தனது கணவர் உயிரோடு இருந்தால், ஒரு மன்னராக தனது நாட்டைக் காப்பாற்ற எந்த அளவு போராடுவாரோ, அதற்கும் சிறிதும் குறைவில்லாமல் போராடி உயிர் நீத்ததாலேயே, சுதந்தரப் போராட்ட வரலாறில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளார் ஜான்சிராணி லெட்சுமி பாய்.

வாரிசு உரிமைக்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை :

மயிலாடுதுறை அருகேயுள்ள ஜானகி தம்பதியினர் வறுமையால் தென் ஆப்பிரிக்கா சென்றபோது, 1898ல் பிறந்தார் வள்ளியம்மை. சிறுமியாக இருந்த போது, அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை கண்டு பொங்கினார்.

அப்போது அங்கு வந்த காந்தி, இந்தியர்களின் அடிமை நிலை கண்டு, அங்கேயே தங்கியிருந்து தனது போராட்டத்தை தொடங்கினார். அந்த இளம் வயதிலேயே காந்தியின் போராட்டங்களில் பங்கு கொள்ள தொடங்கினார் வள்ளியம்மை.

இந்நிலையில், கிறிஸ்தமத முறையில் அல்லாத திருமணங்கள் செல்லாது என திடீர் சட்டம் கொண்டு வந்தனர் பிரிட்டிஷார்.

இதனால், இந்துக்களின் திருமணம் செல்லாமல் போனது, இதன் காரணமாக பெண்கள் தங்களது மனைவி என்ற அந்தஸ்தை இழந்தனர். வள்ளியம்மை தனது வாரிசு உரிமையை இழந்தார்.

இதை எதிர்த்து காந்தியுடன் இணைந்து கடுமையாக போராட தொடங்கினார் வள்ளியம்மை.

1923ம் ஆண்டு ஜோஹனஸ்பர்க் நகரிலிருந்து வள்ளியம்மை தலையிலான ‘பெண் சத்தியாகிரகப் பட’ நியகாசில் நகருக்குச் சென்றது.

இதனால் பிரிட்டிஷார் வள்ளியம்மையை கைது செய்து 3 மாத கால கடுங்காவல் சிறையில் அடைத்தனர். சிறையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த அவர், 1914ம் ஆண்டில் மரணம் அடைந்தார். அப்போது வள்ளியம்மையின் வயது 16.

மிக இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று, போராடிய வள்ளிம்மையின் தியாகம் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரையும் பெரிதும் பாதித்தது.

இதனாலேயே, ஜோஹனஸ்பர்க் நகரில் வள்ளியம்மை நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டது.

அவருடைய போராட்டத்தின் காரணமாக பிரிட்டிஷார் கொண்டு வந்த சட்டமும் திரும்பப் பெறப்பட்டது.

வள்ளியம்மை செய்த இந்த உயிர்த் தியாகம் தான், இன்று நாம் சட்டப்படி வாரிசுரிமை பெற முக்கியக் காரணம்.

பழிக்கு பழி வாங்கிய வேலநாச்சியார்:

தனது கணவரை கொன்றவர்களை பழிக்குப் பழி தீர்த்து, தனது நாட்டையும் மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார்.

ராநாதபுரம் மன்னராக இருந்த முத்துவிஜய ரகுநாத செல்லத்துரை சேதுபதியின் ஒரே மகள் வேலநாச்சியார்.

சிறுவயதிலேயே வீரம் பொங்க திகழ்ந்த வேலநாச்சியார் வாள் வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் மற்றும் யானையேற்றம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார்.

1746ல் சிவகங்கை மன்னர் வடுகநாதன், வேலு நாச்சியாரை விரும்பி திருமணம் செய்துகொண்டார்.

பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதில் உறுதியாக இருந்த வடுகநாதன், வீரத்தில் சூரனாய் திகழந்தார். இவரது போர்ப்படை தளபதிகளான சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள் பலமுறை ஆற்காடு நவாப் படைகளை புறமுதுகிட்டு ஓடச்செய்தனர்.

இந்நிலையில், ஒருமுறை நவாப் நயவஞ்சமாக நடத்திய திடீர் தாக்குதலில் காளையார் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த வடுகநாதன் கொல்லப்பட்டார். செய்தி கேட்டு அலறி துடித்த வேலு நாச்சியார், கணவரின் உடலைக் காண ஓடோடி வந்தார்.

ஆனால் அவரை பாதி வழியில் மடக்கி கைது செய்ய முயன்றது நவாப் படை. கொலை வெறி கொண்டு வேலு நாச்சியார் வாள்வீச்சில் இறங்க, சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர் நவாப் வீரர்கள்.

பின்னர், வடுகநாதனின் உடலை கண்டு கதறிய வேலு நாச்சியார், “எனது கணவரை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்கியே தீருவேன” என சபதம் செய்தார்.

இதையடுத்து, ஆண் வேடம் பூண்ட அவர், மருது சகோதரர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பி ஹைதரஅலியிடம் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்தபடியே, தனது படைகளைத் திரட்டினார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் போர் வியூகம் வகுத்தார்.

அதன்படி, அரண்மனைக்குள் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோயிலுக்கு செல்லும் பெண்கள் போல, தனது படைகளுடன் மாறுவேடத்தில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இவரது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாத நவாப் படைகள் அங்கிருந்து புறமுதுகிட்டு ஓட்டம் பிடித்தது. வேலு நாச்சியாரின் வாளவீச்சில் நவாப் படை வீரர்கள் பிணங்களாக சரிந்தனர். இதன் மூலம் தனது கணவரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கி தனது சபதத்தை நிறைவேற்றினார் வேலு நாச்சினார்.

பின்னர் தனது அரண்மனையை மீட்டு ராணியாக முடிசூட்டிய அவர், தனது 64வது வயதில் மரணம் அடைந்தார்.

தேவதாசி முறையை ஒழித்த ராமாமிர்தம் அம்மையார் :

அந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்துடன் சேர்த்து சமுதாய விடுதலைக்காகவும் போராட வேண்டியிருந்தது. அப்படி போராடியவர்களில் மிக முக்கியமானவர் ராமாமிர்தம் அம்மையார்.

இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட இனத்து பெண்களை, உண்டு கொழுத்த பணக்காரக் கூட்டம் ஒன்று அதிகாரப்பூர்வமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது. இந்த அடிமைப்பிரிவை சேர்ந்த பெற்றோருக்கு மகளுக்கு பிறந்தார் ராமாமிர்தம் அம்மையார்.

தேவதாசி முறையை எதிர்த்ததாலேயே, ராமாமிர்தம் தந்தைக்கு பலரும் இன்னல் கொடுக்க விரக்தியில் அவர் திடீரென மாயமானார். இதனால் கடும் வறுமையில் சிக்கிய, ராமாமிர்தம் தாயார், இவரை பத்து ரூபாய் மற்றும் ஒரு பழைய சேலைக்கு ஒருவரிடம் விற்றார்.

வளர்ந்து பருவப்பெண்ணான ராமாமிர்தம் அம்மையாரை திருமணம் என்ற போர்வையில் வேட்டையாட காத்திருந்தது 80 வயது கொழுத்த கிழம். ஆனால், அதை எதிர்த்து கடுமையாகப் போராடிய ராமாமிர்தம் அம்மையார், அந்த காலத்திலேயே தான் விரும்பியவரையே துணிச்சலாக கரம் பிடித்தார்.

அதோடு ஓய்ந்துவிடாமல் தேவதாசி முறையையே ஒழித்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, 1917ல் தேவதாசி எதிர்ப்பு போராட்டத்தை துவக்கினார். இதற்கு பணக்காரர்கள், அரசியல்வாதிகள், ரவுடிகள் மட்டுமின்றி சொந்த இனத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், காங்கிரசில் இணைந்து அப்போது அந்த கட்சியில் இருந்த பெரியார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோருடன் இணைந்து போராட்டத்தை தொடங்கினார்.

ஆனால் சொந்த கட்சியிலேயே தேவதாசி முறைக்கு ஆதரவாளர்கள் இருந்ததால் அந்த கட்சியிலிருந்து பெரியாருடன் வெளியேறி போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.

இறுதியில், தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் முதுபெரும் தலைவர் ஒருவர், “தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும” என்று கொதித்தார்.

அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும” என்றார்.

இதனால் சரவமும் ஒடுங்கிப்போனார் அந்தத் தலைவர். டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாக பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்தான்.

இதன் பின்னர், 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே பெண்கள் விடுதலைக்காவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய ராமாமிர்தம் அம்மையார் 1962ம் ஆண்டு தனது 80வது வயதில் மரணம் அடைந்தார்.

தனது போராட்டங்களின் போது, ஆதிக்வர்க்கம் இவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தியது. மேடையில் தலைமுடியை அறுத்தும் சித்ரவதை செய்தது. விஷம் கொடுத்தும் கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால், உயிரை துச்சமாக மதித்து அனைத்து சதிவலைகளையும் முறியடித்ததால் தான், இன்றைய சமூகத்தில் அனைத்து பெண்களும் சமமாக பாவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகதான் தமிழக முதல்வர் கருணாநிதி, தான் அறிவித்துள்ள ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம’ என பெயர் சூட்டியுள்ளார்.


ஜான்சி ராணி லட்சுமி பாய், வீர நாச்சியார், ராமாமிர்தம் அம்மையார் வரிசையில், அஞ்சலை அம்மாள், அசலாம்பிகை அம்மையார், பெரியாரின் சகோதரி கண்ணம்மையார், மனைவி நாகம்மையார், கே.கே.எஸ். காளியம்மாள், எஸ்.என்.சுந்தராம்பாள், பாரதியாரின் மனைவி செல்லம்மா, பத்ம ஸ்ரீ அம்புஜம்மாள், அப்போதே தலித் மக்கள் மற்றும் பெண்கள் விடுதலைக்காக போராடிய அன்னை மீனாம்பாள், பிராமணக் குடும்பத்தில் பிறந்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை தூக்கியெறிந்துவிட்டு ‘பாப் கட்டிங’ வெட்டி, கதர் சட்டை, தோளில் துண்டு என வலம் வந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய மணலூர் மணியம்மா என எத்தனையோ பெண்மணிகள் இந்திய விடுத்லைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடி உயிர் தியாகம் செய்துள்ளார்.

வெளியுலகிற்கு அடையாளம் தெரியாமலேயே போராடி மறைந்த இந்த வீர பெண்மணிகளை இந்த சுந்திரதின நாளில் போற்றுவோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின் நல்வாழ்த்துக்கள்!

Share this Story:

Follow Webdunia tamil