வெள்ளையரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனில் அவர்களின் வணிக பலத்தை உடைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இரண்டு கப்பல்களை வாங்கி அவர்களை கதிகலங்கடித்தவர் கப்பலோட்டிய தமிழர் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளையாவார்.
வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவருக்கு கடலாதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீதும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்று திட்டமிட்டேன் என்று கப்பல் விடுவது குறித்த தனது திட்டத்தை குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.
சுதேசி கப்பல் கம்பெனியைத் துவங்க தனது சொத்துக்களை எல்லாம் விற்றுத் தீர்தத் வ.உ.சி.க்கு பாண்டித்துரைத் தேவர் ரூ. 1 லட்சம் நிதியளித்தார். சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று இந்திய விடுதலைக்கு குரல் எழுப்பிய பாலகங்காதர் திலகர் உதவிட, காலியோ, லாவோ என்ற இரண்டு கப்பல்களை வாங்கி வந்து தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தை நடத்தினார் வ.உ. சிதம்பரம் பிள்ளை.
வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் தனது நிறுவன கப்பல்களின் பயணக் கட்டத்தை பிரிட்டிஷ் - இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி குறைத்தது. ஆயினும் அந்த சதி நிறைவேறவில்லை. வ.உ.சி. இயக்கிய கப்பல் நிறுவனத்தால் பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு மாதத்திற்கு ரூ.40,000 வரை நட்டம் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கப்பலோட்டியது மட்டுமின்றி, சுப்ரமணிய சிவாவுடனும், பாரதியாருடனும், பத்மநாப ஐயங்கருடனும் இணைந்து வெள்ளையர் ஆட்சியை அகற்ற பலப் போராட்டங்களை நடத்திய வ.உ.சி.யை வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு.
சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும் சுதந்திர உணர்ச்சி குன்றாத சிதம்பரம் பிள்ளை, விடுதலைக்குப் பின்னர் வறுமையில் உழன்றாலும் வெள்ளையரை எதிர்ப்பில் முனைப்புடனே போராடினார்.