Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!

இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:24 IST)
webdunia photoFILE
"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தனையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 107 வது பிறந்த நாள் இன்று.

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.

அமைதியான, சாத்வக போராட்டங்களால் மட்டுமின்றி, ஆயுதம் தாங்கிய வீர வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் (போர்களால்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்களால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதே வரலாறு நமக்கு காட்டிவரும் உண்மையாகும்.

இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்!

webdunia
webdunia photoFILE
தனது 23-வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது சாத்வீக வழியில் போராடும் பாதையில் அடுத்த 20 ஆண்டுகளை செலவிட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை (41 வயதிலேயே) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சாத்வீகம் வெள்ளையருக்கு புரியாத மொழி என்பதை புரிந்து கொண்ட சுபாஷ் சந்திர போஸ், 1941 -ஆம் ஆண்டு தன்னை வீட்டுச் சிறை வைத்திருந்த வெள்ளை அரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கல்கட்டாவில் இருந்து தப்பினார்.

ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொணடிருந்த அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஜெர்மன்- இத்தாலி உதவியுடன் (ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டது) ஆயுத போரை துவக்க திட்டம் வகுத்தார்.

இந்திய தேசிய ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர்!

1943-ஆம் ஆண்டு அவருடைய கனவு நிறைவேறியது. ஜெனரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு ஆனால் செயல்படாமல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுணங்கி கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர்கொடுத்தார்.

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி பர்மா தலைநகர் ரங்கூனில் இருந்து இந்தியாவின் கிழக்கு எல்லையை நோக்கி புறப்பட்டது இந்திய தேசிய ராணுவம்.

அடுத்த இரண்டு மாதங்களில் கொஹிமா கோட்டையையும், திம்பாம்பூர் - கொஹிமா சாலையையும் பிடித்தது. இந்திய தேசிய ராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின் வாங்கி ஓடின.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இம்பால் நகரை இந்திய தேசிய ராணுவம் சுற்றிவளைத்து தாக்கியது. ஒரு மாதம் இம்பாலை கைப்பற்ற கடும் போர் நடந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது. பொத்துக் கொண்டு கொட்டிய பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் இந்திய தேசிய ராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. ஜூன் 27 ஆம் தேதி இம்பால் முற்றுகை கைவிடப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. இந்திய தேசிய ராணுவத்தின் முதல் படையெடுப்பு தோல்வியடைந்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் படைபலம் அல்ல, பெருமழையும், வெள்ளமும், சேறும், சகதியும் இந்திய தேசிய ராணுவனத்தின் முதல் முயற்சியை முறியடித்தன.

ஆனால் தாக்குதல் தொடரும் என்றார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். "இம்பாலை மீண்டும் தாக்குவோம். ஒரு முறை, இரண்டுமுறையல்ல பத்து முறை... தொடர்ந்து தாக்குவோம்" என்று அறிவித்தார்.

ஆனால் அது நிறைவேறாமல் முடிந்தது. போரின் போக்கு மாறியது. ரங்கூனை நோக்கியும், சிங்கப்பூரை நோக்கியும் பிரிட்டிஷ் படைகள் நெருங்கின. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தேசிய ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்த ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்தது.

நேதாஜி சிங்கபூரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது படைகளுக்கும், தெற்காசியாவில் தம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட இந்தியர்களுக்கும் சிறப்பு வானொலி வாயிலாக நேதாஜி இவ்வாறு உரையாற்றினார் :

"நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளையிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல... விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்."

சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப்பற்றை ஊட்டிய ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது.

1897-ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 23-ஆம் நாள் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். தந்தை ஜானகிநாத், தாயார் பிரபாவதி போஸ்.

இளம் வயதிலிருந்தே கல்வி ஆர்வம் மிக்க சிறந்த மாணவராகத் திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆன்மீக அழைப்புக்களால் ஈர்க்கப்பட்டார். சன்யாசத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். `மக்கள் சேவையில் இறைவனை காண்' என்ற விவேகானந்தரின் அறிவுரையால் ஈர்க்கப்பட்டு அவ்வாறே பணியாற்றியும் வந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்கள் சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப் பற்றை ஊட்டியது மட்டுமின்றி, தேச சேவையிலும் நாட்டத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட, ஸ்ரீ அரவிந்தர், ஆர்யா எனும் தனது பத்திரிகையில் எழுதிவந்த கட்டுரைகளே காரணமாக அமைந்தது.

"உங்களில் சிலரை உன்னத மனிதர்களாக காண விரும்புகிறேன்; உங்களுக்காக அல்ல, இந்திய திருநாட்டை உன்னத நாடாக உயர்த்தும் உன்னத மனிதர்களாகவே காண விரும்புகிறேன். உங்களுடைய தாய்நாட்டின் சேவைக்காக உங்களை அர்ப்பணியுங்கள். அவளுடைய வளத்திற்காக செயலாற்றுங்கள், அவளுடைய இன்பத்திற்காக நீங்கள் துயரத்தை தாங்குங்கள்" என்ற ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகள் சுபாஷின் உள்ளத்தில் தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற தீயை வார்த்தது.

1919 ஆம் ஆண்டு, தத்துவ பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின், ஐ.சி.எஸ். படிப்பிற்காக சுபாஷ் சந்திர போஸ் இங்கிலாந்து சென்றிருந்தபோது, பஞ்சாப் மாநிலம் அமிரித்சரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. ஆனால் அந்த படுகொலை குறித்த செய்தி கூட உலகத்தின் காதுகளுக்கு எட்டாதவாறு பத்திரிகை தனிக்கையின் மூலம் செய்திகளை இரட்டடிப்புச் செய்தது பிரிட்டிஷ் அரசு. சுபாஷும் அதனை அறியவில்லை.

காங்கிரஸில் இணைந்தார்!

ஐ.சி.எஸ். முடித்து 1921 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் மீண்டும் இந்தியா வந்த சுபாஷ் சந்திர போஸ், ஐ.சி.எஸ். அதிகாரியாக பணியில் சேரவில்லை. ஆனால் தேச விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.

ஜூலையில் இந்தியாவிற்குள் காலடி பதித்த சுபாஷ், ஆறே மாதத்தில் முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். வேல்ஸ் இளவரசரின் இந்தியா வருகையை புறக்கணிக்குமாறு காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தனது அரசியல் குருவான சித்தரஞ்சன் தாஸுடன் (சி.ஆர். தாஸ்) நேரடி போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சுபாஷ் சந்திர போஸ். அடுத்த 20 ஆண்டுகளில் 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல் ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது.

டிசம்பர் திங்கள் 1928 ஆண்டு கல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், `முழு சுதந்திர'த்திற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தீர்மானத்தை சுபாஷ் கொண்டுவந்தார். ஆனால் மகாத்மா காந்தியின் எதிர்ப்பு காரணமாக அந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவரானார்!

ஆனால் அடுத் த ஆண்டு (1929) லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸை நியமித்தார் ஜவஹர்லால் நேரு.

அடுத்த ஒன்பது ஆண்டுகள் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பணி இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் அவரை மாபெரும் தலைவராக உயர்த்தியது.

இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி 1938 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

41-வது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், 1939 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மகாத்மா காந்தி நிறுத்திய பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து, மீண்டும் தலைவரானார்.

பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி என்று காந்தி கூறினார். இது நேதாஜியை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிளால் அத்தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது. காந்திஜிக்கும், நேதாஜிக்கும் இடையே இவ்வாறு ஏற்பட்ட பல மோதல்களின் விளைவாக காங்கிரஸ் தலைவர் பதவியை கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் போது

துறந்தார் நேதாஜி. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஃபார்வர்ட் பிளாக் (முற்போக்கு அணி) தொடங்கினார்.

ஃபார்வர்ட் பிளாக்கிற்கு காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு பெருகியது. காங்கிரஸ் கட்சிக்குள் மோதலும் முற்றியது. காங்கிரஸ் கட்சியில் நேதாஜி எந்த பொறுப்பும் அடுத்த மூன்று ஆண்டுகள் வகிக்கக் கூடாது என தலைமை ஆணையிட்டது.

இதற்கிடையே, முன்கூட்டியே நேதாஜி குறிப்பிட்டது போல, செப்டம்பர் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டது. வெள்ளையர் அரசை எதிர்த்து ஃபார்வர்ட் பிளாக் கடுமையாக பிரச்சாரம் செய்தது.

ஜெர்மனியில் நேதாஜி!

1940 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும், இல்லையேல் பட்டினி கிடந்து சாவேன் என்று நேதாஜி எச்சரிக்கை விடுத்தார். தங்கள் சிறையில் நேதாஜி உயிர்விடுவதை விரும்பாத வெள்ளையர் ஆட்சி அவரை விடுவித்து, கொல்கட்டாவில் உள்ள அவரது வீட்டில், வீட்டுக்காவலில் வைத்தது.

அவருடைய வீட்டைச் சுற்றி கடும் கண்காணிப்பு போடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி போட்ட கட்டுக்காவலையும் மீறி, 1941 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நேதாஜி தப்பினார்.

வீட்டுக் காவலில் இருந்து தப்பிய நேதாஜி எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த 12 வாரங்கள் சாலை வழியாகவும், ரயில் வழியாகவும், கார் வழியாகவும், இந்தியாவைக் கடந்து ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யா சென்ற நேதாஜி, ஆர்லாண்டோ மஸ்ஸோட்டா என்ற இத்தாலிய பெயரில் கடவுச் சீட்டுப் பெற்று பயணம் செய்து ஏப்ரல் மாதம் ஜெர்மன் தலைநகர் பெர்லினை அடைந்தார்.

ஜெர்மனியில் இருந்த `இந்தியாவின் நண்பர்கள்' துணை கொண்டு, சுதந்திர இந்தியா மையம் ((Freedom India Centre) என்ற அமைப்பினை பெர்லினில் நேதாஜி தொடங்கினார். அதற்கு குறைந்தபட்ச அரசு அங்கீகாரத்தையும் (Semi Diplomatic Status)ஜெர்மனி அரசிடமிருந்து பெற்றார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராணுவ ரீதியிலான போராட்டம் நடத்த வேண்டும் என்ற தனது திட்டத்திற்கு வடிவம் கொடுக்கும் களமாகவே பெர்லினை பயன்படுத்தினார் நேதாஜி.

ஜெர்மன் அயலுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஆடம் வான் டிராட் ஸு சோல்ஸ் என்பவர் நேதாஜிக்கு ஜெர்மன் அரசிடமிருந்து எதையெல்லாம் பெறமுடியுமோ, அத்தனையையும் - இந்திய விடுதலைக்காக பெற்றுத்தந்து உதவினார்.

(3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாஜி எதிர்ப்பாளர், ஹிட்லரை கொலை செய்ய நடந்த முயற்சி தொடர்பாக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.)

சுதந்திர இந்தியா வானொலியை(Azad Hind Radio)பெர்லினில் இருந்து நேதாஜி துவக்கினார். ஆசாத் முஸ்லீம் ரேடியோ, தேசிய காங்கிரஸ் ரேடியோ என்ற பெயர்களிலும் வானொலிகளை நேதாஜி துவக்கினார். ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும், உலக போர் குறித்த செய்திகளையும் தான் இந்த வானொலிகள் ஒலிபரப்பின. நாஜி கொள்களை பாராட்டியோ, ஹிட்லரின் நடவடிக்கைகளை ஆதரித்தோ எந்த செய்திகளையும் பரப்பும் கருவிகளாக இந்த வானொலிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் அயலுறவுத்துறை அமைச்சர் வான் ரிப்பன் டிராப்பை சந்தித்து பேசிய நேதாஜி, இந்திய தேசிய ராணுவம் அமைப்பதற்கு தேவையான நிதி, ஆயுத உதவிகளை ஜெர்மன் அரசு செய்யவேண்டும் என்றும், அதனை சுதந்திர இந்தியாவிற்கு வழங்கும் கடனாக ஜெர்மன் அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அது ஒப்புக்கொள்ளப்பட்டது!

ஹிட்லருடன் சந்திப்பு!

அடுத்த ஆண்டு 1942, மே திங்கள் 29 ஆம் நாள் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப் பேசினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வியில் முடிந்தது. உலக போர் முடிந்தவுடன் இந்தியாவை முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ள இத்தாலி, ஜப்பான், ஜெர்மன் நாடுகள் கூட்டாக உறுதியளிக்க வேண்டும் என்று நேதாஜி கேட்டுக்கொண்டார். அதனை இத்தாலி, ஜப்பான் நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ஹிட்லர் மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கைகளை, ஜப்பானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிங்கப்பூரில் இருந்து நடத்த நேதாஜி முடிவு செய்தார்.

தெற்காசியா திரும்பினார்!

1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி ஜெர்மன் நீர்மூழ்க்கிக் கப்பல் ஒன்றில் புறப்பட்ட நேதாஜி, மடகாஸ்கர் அருகே ஜப்பானின் நீர்மூழ்க்கிக் கப்பலுக்கு மாறி, மூன்று மாத பயணத்திற்கு பிறகு - இரண்டாவது உலகப் போர் உங்ச கட்டத்தில் நடந்துக்கொண்டிருக்கும் போது - மே 16 ஆம் தேதி டோக்கியோ வந்து சேர்ந்தார்.

டோக்கியோவிலிருந்து தெற்காசியாவில் வாழும் 30 லட்சம் இந்திய மக்களுக்கு வானொலி மூலமாக நேதாஜி தொடர்ந்து உரையாற்றினார்.

1942 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 2 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த நேதாஜி, ஒரு மாத காலத்திற்குள், ஜென்ரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு, ஆனால் செயலிழந்து கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைமையேற்றார்.

இந்திய தேசிய ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் முழு மூச்சாக இறங்கினார்.

இந்தியாவை மீட்க தாக்குதல் தொடங்கியது!

1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி சுதந்திர இந்திய அரசை சிங்கப்பூரில் நேதாஜி நிறுவினார்.

1944 ஆம் ஆண்டு தனது தலைமையகத்தை பர்மா தலைநகர் ரங்கூனுக்கு மாற்றிக்கொண்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதியுதவியும், பொருளுதவியும் தாராளமாக வழங்குமாறு நேதாஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மனமுவந்து பெரும் அளவில் நிதியுதவி செய்தனர்.

1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இந்திய - பர்மா எல்லையில் உள்ள அராக்கன் எனுமிடத்திலிருந்து இந்திய தேசிய ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்திய எல்லையில் பிரிட்டிஷ் படைகளின் பெரும் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறிய இந்திய தேசிய ராணுவம் மார்ச் 18 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் கால்பதித்தது.

இந்திய தேசிய ராணுவத்திற்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே இந்திய - பர்மா எல்லைப் பகுதியில் 8 இடங்களில் கடும் போர் துவங்கியது.

ஏப்ரல் 14 ஆம் தேதி கர்னல் எஸ்.ஏ. மாலிக் தலைமையிலான படை, மணிப்பூரில் உள்ள மொய்ராங் எனுமிடத்தை கைப்பற்றி, அங்கு தேசியக் கொடியை பறக்கவிட்டது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து, ராணுவ நடவடிக்கை மூலம் இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் பகுதி என்ற பெருமையை மொய்ராங் பெற்றது.

இதற்கிடையே ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி ஜப்பானிய அரசு உதவியுடன் ரங்கூனில் இந்திய தேசிய வங்கியை துவக்கி வைத்தார் நேதாஜி.

வரலாற்றுப் பெருமைமிக்க இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ராணி ஜான்சி ரெஜிமண்டுடன் இந்திய எல்லையை நோக்கி புறப்பட்டார் நேதாஜி.

இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றிகள்!

ஏப்ரல் 8 ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தின் இன்றைய தலைநகராக உள்ள கொஹிமா நகரம் இந்திய தேசிய ராணுவம் வசமானது. அடுத்த சில நாட்களில் திம்மாப்பூர் - கொஹிமா முக்கிய சாலையை கைப்பற்றிய இ.தே.ரா. இம்பால் நகரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.

ஒரு மாத காலம் இ.தே.ரா. சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கத் துவங்கின. ஆனால் தென் மேற்கு பருவமழை நிலையை தலைகீழாக மாற்றியது.

பொத்துக் கொண்டு கொட்டிய மழையினால் ஏற்பட்ட வெள்ளமும், அதன் காரணமாக சேறும், சகதியுமாகிவிட்ட பூமியும் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பும் இ.தே.ரா.வுக்கு பாதமாக முடிந்தன.

இந்திய தேசிய ராணுவத்தின் முதல் தாக்குதல் சில வெற்றிகளுக்குப் பின், தோல்வியில் முடிந்தது. மழைக்குப் பின் பரவிய காலரா, வயிற்றுப்போக்கு வியாதிகளுக்கு மருத்துவ வசதி கிட்டதாததால் இ.தே.ரா. வீரர்கள் நூற்றுக்கணக்கில் மடிந்தனர்.

ஆனால் நேதாஜி மனம் தளரவில்லை. இ.தே.ரா. படைகளும் துணிவோடு இருந்தன. உலகப் போரின் போக்கும் வெகு வேகமாக மாறத் தொடங்கியது.

பிரிட்டிஷ் தலைமையில் நேச நாட்டுப் படைகள் பர்மா - சிங்கப்பூர் நோக்கி வேகமாக நெருக்கத் தொடங்கின.

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய பர்மா வரை பிரிட்டிஷ் படைகள் முன்னேறிவிட்ட செய்தி கிடைத்தது. தனது சகாக்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ஏப்ரல் 24-ஆம் தேதி, ராணி ஜான்சி ரெஜிமண்ட் வீராங்கனைகளுடனும், தனது முதன்மை அமைச்சர்களுடனும் இ.தே.ரா.வின் மேஜர் ஜெனரல் ஸாமான் கியானியின் கட்டுப்பாட்டின் கீழ் ரங்கூனில் இருந்து பாங்காக் நோக்கி நேதாஜி புறப்பட்டார்.

ஒரு மாத காலம் எதிரிகளின் விமானத் தாக்குதல்களுக்கு இடையே கடும் இன்னல்கள் அனுபவித்தப் பின்னர் மே 14 ஆம் தேதி பாங்காக் வந்து சேர்ந்தனர்.

ஜூலை மாதம் மீண்டும் சிங்கப்பூர் வந்த நேதாஜி, இ.தே.ரா. அமைப்பு பணியில் ஈடுபட, மலேசியாவின் செராம்பன் நகருக்கு வந்தார்.

ஆனால் அடுத்தடுத்து கிடைத்த இரண்டு செய்திகள் நேதாஜியின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

1945, ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜப்பானின் மீது போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது. ஜப்பானின் கைவசம் உள்ள மன்ஞ்சூர்யாவை நோக்கி ரஷ்யப் படைகள் விரைந்தன. தனது நோக்கத்திற்கு துணை நிற்கும் இரண்டு நாடுகளுக்கு இடையே போர். என்ன செய்வது? என்று சிந்தித்தார் நேதாஜி.

அடுத்த செய்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிடைத்தது. சிங்கப்பூரிலிருந்து காரில் ஓடோடிவந்த டாக்டர் லக்ஷ்மையாவும், கணபதியும் ஜப்பானிய படைகள் நேச நாட்டு படைகளிடம் சரணடைந்துவிட்டதை நேதாஜியிடம் தெரிவித்தனர்.

என்ன செய்வது? பிரிட்டிஷ் படைகளிடம் இந்திய தேசிய ராணுவம் சரணடைவதா? அது முடியுமா? எந்த உதவியும் இன்றி எவ்வளவு நாள் போரிட முடியும்? இதற்கு பதில் காண நேதாஜி புறப்பட்டார்.

உடனடியாக, அன்று இரவே சிங்கப்பூர் திரும்பிய நேதாஜி, தனது அமைச்சரவை சகாக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அன்று இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது:

நேதாஜியை பிரிட்டிஷ் படைகள் கைது செய்து சிங்கப்பூரிலோ, அல்லது இந்தியாவிற்கு கொண்டு சென்று, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் தொடுத்த குற்றத்திற்காக தண்டித்தால் (மரண தண்டனை விதித்தால்) அது இந்தியாவிற்குள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். அதன் மூலம் விடுதலையும் சாத்தியமாகும். அவ்வாறின்றி நேதாஜியை சிறை வைத்தால், அது விடுதலை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு உதவும். எனவே இ.தே.ரா. வீரர்களுடன் அதன் தலைமை தளபதியான நேதாஜியும் சிங்கப்பூரிலேயே இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அன்று இரவு சிங்கப்பூர் வந்த ஆசாத் ஹிந்த் அரசின் சட்ட ஆலோசகர் ஏ.என். சர்க்கார், நேத்தாஜியை பத்திரமாக காப்பாற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள தற்பொழுது ரஷ்யா படையெடுத்து வரும் மன்ஞ்சூரியாவிற்கு நேதாஜியை பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டுவிட ஜப்பான் உத்தரவாதம் அளித்திருப்பதாக கூறினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தவேண்டும் என்கின்ற திட்டம் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது, அங்கிருந்த ரஷ்ய தூதர் அவருக்கு ஒத்துழைப்பு தராததால், ஜெர்மன் சென்று அந்நாட்டின் உதவியை பெரும் முடிவை நேதாஜி எடுத்தார்.

மன்ஞ்சூரியாவை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின்னர், இந்தியாவின் விடுதலைக்காக போராடும் தலைவனான தன்னை நிச்சயம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கொண்டு செல்வார்கள். எனவே அங்கு அந்நாட்டு தலைமையை சந்தித்து, அவர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிரூட்ட திட்டமிட்ட நேதாஜி, மன்ஞ்சூரியா செல்ல முடிவு செய்தார்.

இறுதிப் பயணத்தை நோக்கி!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது அமைச்சர்களை கூட்டிய நேதாஜி, இ.தே.ரா. குறித்தும், ஜான்சி ராணி படை குறித்தும் முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்தார்.

நேச நாட்டு படைகளிடம் ஜப்பான் ராணுவம் சரணடைந்தது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அன்று இரவு மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளில் வாழும் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு ஆசாத் ஹிந்த் வானொலி மூலம் நேதாஜி - இறுதியாக - உரையாற்றினார்.

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

(அவர் அன்று உரையில் குறிப்பிட்டபடியே சரியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆகஸ்ட் 15, 1947 ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அவர் விரும்பியவாறு அல்ல. . . இந்தியா - பாகிஸ்தானாக!)

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் நேதாஜி.

"டெல்லிக்குச் செல்ல வழிகள் பல உள்ளது. டெல்லியே நமது நிரந்தர இலக்கு. மறந்துவிடாதீர்கள்."

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நோக்கி விமானம் மூலம் பயனமானார் நேதாஜி. சிங்கப்பூர் விமான தளத்தில் கண்ணீர் மல்க அவருக்கு வழியனுப்பி வைத்தனர்.

பாங்காங்கில் இருந்து சைகோன் புறப்பட்டுச் சென்றார் நேதாஜி. அவருடன் இ.தே.ரா. கர்னல் ஹபிபூர் ரஹ்மான், கர்னல் குல்சாரா சிங், கர்னல் பிரீதம் சிங், மேலும் அபித் ஹாசன், தேவ்நாத் தாஸ், எஸ்.ஏ. அய்யர் ஆகியோரும், ஜெனரல் இஸோடா, ஹக்கீயா, நெகிஷி ஆகிய ஜப்பானியர்களும் இரண்டு விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

சைகோனில் சென்று இறங்கிய நேதாஜியை கொண்டு செல்ல ஜப்பானிய குண்டு வீச்சு விமானம் ஒன்று தயாராக இருந்தது. ஆனால் அதில் ஒருவருக்கு மட்டும் தான் இடம்தர முடியும் என்று ஜப்பானிய அதிகாரி ஒருவர் கூறினார். ஏற்றுக்கொள்வதா, தவிர்ப்பதா என்ற கேள்விக்கு விடைகாண தனது நண்பர்களுடன் நேதாஜி ஆலோசனை நடத்தினார்.

இறுதியில் நேதாஜி மட்டும் செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் மேலும் ஒருவருக்கு இடம்தர முடியும் என்று ஜப்பானியர்கள் கூற, கர்னல் ஹபிபூர் ரஹ்மான் உடன் செல்ல முடிவு செய்யப்பட்டது.

நேதாஜியும், ஹபூபும் மற்ற ஐவரையும் நோக்கி `ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டுவிட்டு விமானத்திற்குள் சென்றனர். ஜப்பானிய விமானம் விண்ணில் எழும்பிப் பறந்தது.

நேதாஜியை சுமந்து கொண்டு பறந்த விமானம், சற்று நேரத்தில் அவர்களுடைய கண்களில் இருந்து விண்ணில் மறைந்தது. ஆனால் நேதாஜியும் இந்த மண்ணை விட்டு மறையப் போகிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. `ஜெய் ஹிந்த்' என்று கூறிவிட்டு நேதாஜி புறப்பட்ட அந்த பயணம் அவருடைய அவருடைய இறுதிப் பயணமாக ஆனது!

ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நேதாஜி பயணம் செய்த போர் விமானம் ஃபார்மோசா தீவுகளுக்கு அருகே விபத்திற்குள்ளானது என்ற ஜப்பானிய வானொலி அறிவித்தது.

ஜப்பான் வானொலியில் அவர்கள் கூறிய செய்தியை, இன்றுவரை எவரும் நம்பவில்லை.

என்ன ஆனார் நேதாஜி? இந்திய விடுதலைக்காக தனது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் திட்டமிட்டு போராடிக் கழித்த அந்த மாபெரும் தலைவரின் நிலை இன்று வரை புரியாத புதிராகவே எல்லோருக்கும் இருந்து வருகிறது.

நேதாஜியும், இந்திய தேசிய ராணுவமும் இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தர களமிறங்கிய, விடுதலைப் போர் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் அவர்கள் தொடுத்த போர், 200 ஆண்டுக் காலம் இந்தியா மீது நீடித்த பிரிட்டிஷ் - வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு விரைவாக முடிவுகட்டி இந்திய விடுதலையை வேகப்படுத்தியதை யாரால் மறுக்க முடியும்!

நேதாஜியை யாரால் மறக்க முடியும்!

Share this Story:

Follow Webdunia tamil