முன்மொழிந்த முப்பெரும் தலைவர்கள்
வெள்ளைய அரசுடன் சமரசம் செய்துகொண்டு நமது உரிமைகளைப் பெறவேண்டும் என்று கூறிக்கெண்டிருந்த காங்கிரஸ் இயக்கத்தை விடுதலை உணர்வு கொண்ட தேசிய பேரியக்கமாக உருவாக்கிய பெருமை பாலகங்காதர திலகர், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய், வங்கப் புரட்சியாளர் பிபின் சந்திரபால் ஆகியோரையே சாரும்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று பாலகங்காதர திலகர் முழங்கியதற்குப் பின்னரே இந்திய விடுதலை இயக்கம், தேசப்பற்றுடன் கூடிய புரட்சி இயக்கமாக மாறியது. நாட்டு மக்களை சுதந்திர உணர்ச்சி பற்றியது.
கிளாபாத் இயக்கம்
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு துருக்கி நாடு இரண்டாக பிளக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம்களின் தலைமை பதவியான காலிபா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கேரளத்தில் இருந்த முஸ்லிம் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை இந்திய விடுதலைப் போராட்டத்தின் அங்கமாகவே கருதிய காந்தி அடிகள், அதற்கு ஆதரவு அளித்தார்.
விடுதலைப் புரட்டிசியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)
1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.
லாலா லஜபதிராய் மறைவு!
1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா ரஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.
லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர்.
சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.
ஆந்திரத்தில் விவசாயிகள் கிளர்ச்சி! (1893 - 1924)
விவாயிகள் மீது வெள்ளைய அரசு விதித்த அநியாயமான வரியும், அவர்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறையும் ஆந்திர மாநிலத்தில் பெரும் கிளர்ச்சியாக வெடித்தது.
விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள விஜயநகரில் பிரிட்டிஷ் அரசிற்கு வரி கட்ட மறுத்து விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்தக் கிளர்ச்சி 20வது நூற்றாண்டின் துவக்கம் வரை நீடித்தது. மன்யம் விவசாயக் கிளர்க்சி என்றழைக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு அல்லூரி சீதாராம ராஜூ தலைமை வகித்தார்.
பஞ்சாப் கிளர்ச்சிகள்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பஞ்சாபிற்கு மிக முக்கியப் பங்குண்டு. லாகூரில் இருந்து இயங்கிய பாரத மாத அமைப்பைச் சேர்ந்த சர்தார் அஜித் சிங், லயாலபூர் விவசாயிகளை வஞ்சிக்கும் காலனி அரசின் சட்டங்களை எதிர்த்து கடுமையாகப் போராடினார். இவர் புரட்சியாளர் பகத்சங்கின் மாமனாவார்.
பிரித்தாளும் திட்டமும் வங்கப் பிரிவினையும் (1906 - 1911)
1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியா முழுவதும் தங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்து வருவதைக் கண்ட பிரிட்டிஷ் இந்திய அரசு, தங்கள் காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த காங்கிரஸை துவக்கியது. ஆனால், அது போதுமான பலனைத் தராதது மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கமாக பரிணாம வளர்ச்சி கண்ட நிலையில்தான் பிரித்தாளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் துவக்கினர்.
அதுவரை இந்திய அரசிற்கு எதிராக அரசியல் சமூகக் களங்களில் இணைந்து போராடி வந்த இந்து, முஸ்லிம் சமூகங்களைப் பிரித்து மோதவிட்டு அதில் அதிகார குளிர்காய திட்டமிட்டனர். இத்திட்டத்தின் முதல் வெளிப்பாடே வங்கப் பிரிவினையாகும். இன்றைய அஸ்ஸாம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களையும் சேர்ந்த மிகப் பெரிய மாகாணமான வங்கத்தை கிழக்கு, மேற்கு என்று பிரித்தனர்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி கிழக்கு வங்காளமாகவும், இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி மேற்கு வங்காளமாகவும் பிரிக்கப்பட்டது. வங்கப் பிரிவினை இந்திய விடுதலைப் போராட்டத்தை மத ரீதியாக பலவீனப்படுத்திவிடும் என்ற பிரிட்டிஷ் அரசின் திட்டம் தவிடுபொடியானது. வெள்ளையனின் சூழ்ச்சியை மக்களுக்கு தெளிவாக விளக்கிய அரவிந்த கோஷ் உள்ளிட்டத் தலைவர்கள் சுதந்திர உணர்ச்சியை ஆழமாக வேரூன்றச் செய்தனர்.
வந்தேமாதம் எனும் இதழின் வாயிலாக இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயத்தம் செய்தார் அரவிந்த கோஷ். பிரிட்டிஷாரும் சளைக்கவில்லை. முஸ்லிம் தலைவர்களைப் பிடித்து, அவர்களின் உரிமை பறிபோய்விடும் என்று கூறி மூளைச் சலவை செய்தனர். விளைவு : 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் பிறந்தது.
வங்கப் பிரிவினைக்கு கடைபிடித்த அதே பிரித்தாளும் தந்திரத்தையே பின்னாளில் ஜின்னாவைப் பயன்படுத்தி இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளமிட்டது பிரிட்டிஷ் இந்திய அரசு.
வங்கத்தில் தோன்றிய ரகசிய இயக்கங்கள் (1902 - 1910)
மராட்டியத்தில் வீர் சவார்க்கர் துவக்கிய அபினவ் பாரத், மித்ர மேலா போன்ற ரகசிய இயக்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திவந்த அதே வேளையில் வங்காளத்திலும், விடுதலை இலக்காகக் கொண்ட ரகசிய இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
அரவிந்த கோஷ், சி.ஆர். தாஸ், மித்ரா ஆகியோர் இந்த இயக்கங்களுக்கு வேராய் இருந்தனர்.
அரவிந்தர், பரோடாவில் இருந்து ஜத்தீந்திரா முகர்ஜி என்பவரை கல்கத்தாவிற்கு அனுப்பி புரட்சியாளர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க உதவினார் அரவிந்தரின் சகோதரர் பரின் கோஷ். தனது நண்பர்களுடன் இணைந்து பவானி மந்திர் எனும் ரகசிய இயக்கத்தை நடத்தினார். இந்த இயக்கங்கள் சங்கிலித் தொடர் போல நாடு முழுவதும் பரவியதால் ஆங்காங்கு வெள்ளைய அதிகாரிகள் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடந்தது.
1907 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் குண்டு வெடித்தது. 1908 ஆம் ஆண்டு ஏப்ரலில் குதிராம் போஸ், பிரஃபுல்லா சக்கி ஆகிய இருவரும் மாஜிஸ்திரேட் கிங்ஸ்ஃபோர்டை குண்டு வீசிக் கொன்றனர்.
குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு வயது 19. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது.
அரவிந்தரின் எழுத்து உருவாக்கிய சுதந்திரத் தீ
பரோடாவில் இருந்து வங்கப் பிரிவினையின் போது கல்கத்தா திரும்பிய அரவிந்தகோஷ், வந்தேமாதரம் எனும் இதழைத் துவக்கி அதில் விடுதலையின் அவசியத்தையும், வெள்ளையர் ஆட்சியின் அவலத்தையும் விளக்கி எழுதிய கட்டுரைகள் இளைஞர்களை பெருமளவிற்கு விடுதலைப் போராட்டத்திற்கு ஈர்த்தது.
அரவிந்தரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் குதித்த இளைஞர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். முழுச் சுதந்திரமே (Complete Independence) இந்திய விடுதலைப் போரின் இலக்கு என்று எழுதிய அரவிந்த கோஷ், அதனை கேட்டுப்பெற முடியாது, தட்டிப் பறித்திட வேண்டும் என்று எழுதினார். அதற்காக அவர் மீது வெள்ளைய அரசு பல வழக்குகளைப் போட்டது. ஆனால், அவருடைய எழுத்துக்கள் வன்முறையைத் தூண்டுகின்றன என்பதனை வெள்ளையர்களால் நிரூபிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட மொழிப்புலமை அரவிந்தருக்கு இருந்தது.
அரவிந்தரை முடக்க, 1908 ஆம் ஆண்டு நடந்த குண்டு வீச்சு தொடர்பான அலிப்பூர் சதி வழக்கில் அவர் மீது குற்றம் சாற்றி ஓராண்டுக்காலம் சிறையில் அடைத்தது வெள்ளைய அரசு. விடுதலைப் பெற்றுத் திரும்பியதும் மீண்டும் வந்தேமாதரம் இதழில் அரவிந்தர் எழுதினார்.
வங்கப் பிரிவினை ரத்தானது (1911)
வங்கப் பிரிவினைக்கு எதிராக தொடர்ந்து நடந்த வெகுஜன கிளர்ச்சியினால் அப்பிரிவினையை 1911 ஆம் ஆண்டு வெள்ளைய அரசு ரத்து செய்தது. பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தேசக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் முக்கியப் பங்கு வகித்தார். வந்தேமாதம் பாடலைப் போலவே இவரது பாடல்களும், எழுத்துக்களும் இளைஞர்களிடையே சுதந்திர உணர்ச்சியைத் தூண்டியது.
இந்திய சமூகத்தைப் பிரித்தாளும் சட்டங்கள் (1909 - 1935)
பிரித்தாளும் தந்திரத்தை தனது ஆட்சியை நீட்டித்துக் கொள்ளும் கருவியாகப் பயன்படுத்திய பிரிட்டிஷ் அரசு, இந்திய சமூகத்தில் பிளவை உண்டாக்கி அதனை உறுதி செய்யும் விதமாக முஸ்லிம்களுக்கு என தனித் தொகுதிகளை உருவாக்கும் சட்டத்தை 1909ல் கொண்டு வந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கடுமையாகப் போராடிய சீக்கியர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் என்று கூறி 1919ல் மற்றொரு சட்டத்தை இயற்றியது. 1935ல் இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு தனிப் பிரதிநிதித்துவச் சட்டங்களை இயற்றியது.
விடுதலைக்கு உரமிட்ட அயல்நாடு வாழ் இந்தியர் அமைப்புகள்
பர்மா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் நமது நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர்.
இவற்றில் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கதார் இயக்கம் மிக முக்கியமானதாகும். லாலா ஹர்தயாள், ராஷ் பிஹாரி போஸ் (இந்திய தேச ராணுவத்தை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்காலே, ஷோகன் சிங் வாக்னா, தோஹி கத்தார் சிங் ஆகியோர் இந்திய விடுதலைக்காக இவ்வமைப்பைத் துவக்கி அங்கிருந்தபடியே பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 400 கதார் வீரர்களைச் சுமந்துகொண்டு கொல்கத்தா துறைமுகம் வந்த கோம்காதா மாரு என்ற கப்பலிற்கும், வெள்ளையப் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. இதில் கதார் வீரர்கள் வீரமரணம் எய்தினர். சிலரே தப்பித்தனர்.
இதனால் கதார் இயக்கம் சளைத்துவிடவில்லை. 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை துவக்குவதற்கு நாள் குறித்து அதற்கான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஏராளமான நிதி திரட்டி ஆயுதங்களை வாங்கிக் குவித்த கதார் இயக்கம், தெற்காசிய நாடுகளின் ராணுவத்தில் இருந்த இந்திய சிப்பாய்களை பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டியது.
ஆனால், அதன் ரகசியத் திட்டங்களை கிர்பால் சிங் என்பவர் வெள்ளையர் ஆரசிடம் போட்டுக் கொடுக்க லாகூர் சதி வழக்கில் பல கதார்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)
1919ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஜெனரல் டையர் என்ற வெள்ளைய அதிகாரி எந்தப் பொதுக் கூட்டமும் நடத்தக் கூடாது என்றும் மக்கள் எங்கும் கூடக் கூடாது என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
மறுநாள் அறுவடை விழாவைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டையர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். தங்களிடம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது வெறுப்புணர்வை அதிகரித்தது. எதிர்ப்பு மேலும் தீவிரமானது.
சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற பகத் சிங் (1928)
1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா ரஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.
லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை, லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர்.
சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
கொலை வெறியன் டையரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங்!
1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் 1,700 அப்பாவிகளை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற வெள்ளைய காவல் அதிகாரி ஜென்ரல் டையரை 20 வருடத்திற்குப் பின் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுட்டுக் கொன்று பழி தீர்த்தார் உத்தம் சிங்.
1901 ஆம் ஆண்டு பிறந்த உத்தம் சிங்கிற்கு, ஜாலியன் வாலாபாக் படுகொலை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தென் ஆப்ரிக்காவில் இருந்து மெக்சிகோ வரை பல்வேறு நாடுகளின் ராணுவத்தில் பணியாற்றி நாடு திரும்பி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உத்தம் சிங், ஒரு முறை சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அம்ரித்சரில் கைது செய்யப்பட்டார். பிறகு விடுதலையான அவர், கடவுச் சிட்டு பெற்று லண்டனுக்குச் சென்று அங்கு 1939 ஆம் ஆண்டு டையரை சுட்டுக் கொன்றார்.
கொலைக் குற்றம் சாற்றப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்த நிலையில், தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு ஏதாவது கூறுகின்றாயா என்று நீதிபதி ஹட்கின்ஸன் கேட்டதற்கு, உத்தம் சிங் அளித்த பதில் :
"பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் எங்களது மக்கள் பட்டினியால் சாகின்றனர். அதனை எதிர்க்க நினைத்தேன், சுட்டேன். 3 முதல் 4 முறை சுட்டேன். அதற்காக வருத்தப்படவில்லை. நான் எனது கடமையைச் செய்தேன். தண்டனையை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளுங்கள். 10, 20 அல்லது 50 இல்லையென்றால் தூக்கில் போடுங்கள். நான் என் கடமையைச் செய்துவிட்டேன்."
1940 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் லண்டனில் உள்ள பென்டன்வில்லி சிறைச்சாலையில் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்டார்.
காங்கிரசின் முழுச் சுதந்திரப் பிரகடனம் (1929)
20வது நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே தங்களது ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் இந்திய அரசு, இந்தியாவிற்கு சுய ஆட்சி உரிமை அளிக்க முன்வந்தது. இதனை வைஸ்ராயாக இருந்த இர்வின் அறிவித்தார்.
சுய ஆட்சி உரிமையை நிராகரித்த காங்கிரஸ் ஆட்சி, முழுச் சுதந்திரம் கோரி முதல் முறையாக பிரகடனம் செய்தது.
1929 ஆம் ஆண்டு லாகூர் நகருக்கு அருகே ராவி நதிக்கரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திரமே குறிக்கோள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டுமின்றி, 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடுவது என்றும் பிரகடனம் செய்தது.
முழு விடுதலையைப் பெற சாத்வீக வழியில் ஒவ்வொரு இந்தியனும் பேராடுவது என்று உறுதியேற்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசை உலுக்கிய உப்புச் சத்தியாகிரகம் (1930)
இயற்கையான கடல் நீரைப் பாய்ச்சி உற்பத்தி செய்யப்படும் உப்பின் மீது பிரிட்டிஷ் அரசு வரி விதித்ததை எதிர்த்து உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தார் காந்தியடிகள்.
1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் தண்டி கடற்கரையில் மகாத்மா காந்தி தலைமையில் திரண்ட மக்கள் உப்பை அள்ளி தங்களின் உரிமையை நிலைநாட்டினர். அதே நேரத்தில் நாடு முழுவதிலும் விடுதலைப் போராட்டத் தலைவர்கள் தலைமையில் உப்புச் சத்தியாகிரகம் நடந்தது.
தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் ராமேஸ்வரம் கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் நடந்தது.
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936)
வெள்ளையரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனில் அவர்களின் வணிக பலத்தை உடைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இரண்டு கப்பல்களை வாங்கி அவர்களை கதிகலங்கடித்தவர் கப்பலோட்டிய தமிழர் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளையாவார்.
சுதேசி கப்பல் கம்பெனியைத் துவங்க தனது சொத்துக்களை எல்லாம் விற்றுத் தீர்தத் வ.உ.சி.க்கு பாண்டித்துரைத் தேவர் ரூ. 1 லட்சம் நிதியளித்தார். சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று இந்திய விடுதலைக்கு குரல் எழுப்பிய பாலகங்காதர் திலகர் உதவிட, காலியோ, லாவோ என்ற இரண்டு கப்பல்களை வாங்கி வந்து தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தை நடத்தினார் வ.உ. சிதம்பரம் பிள்ளை.
பால கங்காதர திலகர் (1856 - 1920)
"சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று முழங்கி வயது வரம்பு, பாலின வேறுபாடுகளைத் தாண்டி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் விடுதலை நெருப்பை பற்ற வைத்தவர் பால கங்காதர திலகர்.
வெள்ளையரை எதிர்த்து நடந்த போராட்டங்கள் எல்லாம் இறுதியில் முனை மழுங்கி வீழ்ந்த நேரத்தில் சட்டம் படித்துவிட்டு ஒரு பத்திரிக்கையாளராய் ஆங்கிலத்திலும், மராட்டியிலும் இரண்டு பத்திரிக்கைகளைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இவர் துவக்கியப் போராட்டம்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கேசரி, மராட்டா என்ற பெயரில் இவர் நடத்திய நாளிதழ்கள் இந்திய மக்கள் மீது வெள்ளையர்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளை, பிளேக் நோய் தாக்கியபோது அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் வெள்ளைய அரசு வேடிக்கை பார்த்ததையும், 1896ல் பஞ்சத்தால் மக்கள் மடிந்தபோது, அதனை சற்றும் கண்டுகொள்ளாத இரக்கமற்ற ஆட்சியாக வெள்ளைய அரசு திகழ்ந்ததை மக்களிடையே பட்டவர்த்தனமாகக் கொண்டு சென்றார் திலகர்.
இதற்காக திலகரையும், அவரது நண்பர் அகார்கரையும் 4 ஆண்டு காலம் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு.
விடுதலைக்குப் பின் சுதந்திரப் போராட்டத்தில் மேலும் தீவிரம் காட்டிய திலகரின் வருகை காங்கிரஸ் கட்சியின் போக்கையே மாற்றியது. பஞ்சாப் சிங் லாலா லஜபதிராய், வங்கத்தின் பிவின் சந்திரபால், இளைஞர்களிடையே தேச உணர்ச்சியை பற்றவைத்த அரவிந்த கோஷ் ஆகியோரின் கூட்டிணைவு காங்கிரஸ் கட்சியை ஒரு மிதவாத சமரச போக்கில் இருந்து பிரிட்டிஷாருக்கு எதிரான தீவிர போருக்கு தயாரித்தது.
திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், வெள்ளையரை வெளியேற்றினால்தான் விடுதலை என்ற உறுதியுடன் போராடினர். திலகரின் மறைவு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விதைத்த வெள்ளையர் எதிர்ப்பு இந்திய விடுதலைப் போராட்டத்தை படுவேகமாக செலுத்தியது.
ஒத்துழையாமை இயக்கம் (1920 - 1922)
வெள்ளையர் ஆட்சி நடைமுறைப்படுத்திய ரெளலட் எனும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது. மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர், மொஹம்மது அலி ஜின்னா, விபின் சந்திரபால் ஆகியோர் ரெளலட் சட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்தது. நாடு முழுவதிலும் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஓராண்டிற்கும் மேலாக நாடு தழுவிய அளவில் நடந்த இந்தப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது 1922 பிப்ரவரியில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை திருப்பித் தாக்கிய மக்கள், செளரி செளரி என்ற இடத்தில் இருந்த காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 30க்கும் அதிகமான காவலர்கள் உயிரிழந்தனர்.
ஒத்துழையாமை போராட்டம் வன்முறையில் முடிந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்தது மட்டுமின்றி, மக்கள் இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சட்ட மறுப்பு இயக்கம்
இந்திய அரசமைப்பை உருவாக்க பிரிட்டிஷ் அரசு அமைத்த சைமன் ஆணையத்தை எதிர்த்த மகாத்மா காந்தி, 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தை துவக்கினார்.
இந்தியாவிற்கு சுய ஆட்சி அளித்து பிரிட்டிஷ் அரசின் ஒரு அங்கமாக இருக்கும் என்கின்ற கோரிக்கையை எதிர்த்த காங்கிரஸ் கட்சி, நாடு தழுவிய அளவில் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தியது.
சைமன் ஆணையத்தை எதிர்த்து கல்கத்தாவில் மிகப் பெரிய பேரணி நடந்தது.
இப்போராட்டத்தின் ஒரு அங்கமாகவே பிரிட்டிஷ் பொருட்களை நிராகரிப்பது எனும் சுதேசி இயக்கமும் வலுப்பெற்றது.
2வது உலகப் போர் 1939 - 1945
ஜெர்மனியின் வேந்தராகப் பொறுப்பேற்ற அடால்ஃப் ஹிட்லர், ஜப்பான், இத்தாலி, ரஷ்யாவுடன் இணைந்து பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் மீது தொடுத்த போரினால் 2வது உலகக் போர் மூண்டது.
அப்பொழுது, காங்கிரஸ் கட்சி என்ன நிலை எடுப்பது என்பதில் தலைவர்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டது.
ஒரு சாரார் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஜப்பான் சார்ந்துள்ள ஹிட்லர் தலைமையிலான அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரினார். காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் பிரிட்டிஷ் அணிக்குச் சாதகமாக நின்றனர்.
இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்திய விடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது.
வெள்ளையனே வெளியேறு (1942 )
65 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவர, வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முன்வைத்து இறுதிகட்டப் போராட்டத்தைத் துவக்கியது!
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிகரமான திருப்புமுனைக்கு வித்திட்டது வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி தலைமையேற்று நடத்திய பல்வேறு போராட்டங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டம்தான் பிரிட்டிஷ் இந்திய அரசை கதிகலங்கச் செய்தது. அமைதி வழியில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தவர்கள் மீது வெள்ளைய ஆட்சியாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
துவக்கத்தில் சாத்வீக வழியில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டம்,வெள்ளையனின் அடக்குமுறையின் விளைவாக வன்முறைப் போராட்டமாக உருவெடுத்தது. உண்மையில் இப்போராட்டம் வன்முறைப் பாதையில் அடியெடுத்து வைத்தபோதுதான் வெள்ளைய அரசு தங்களுடைய ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் முடிவு கட்டபட்டுவிட்டது என்பதனை உணர்ந்தது என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.
நேதாஜி தொடுத்த போர் (1942 - 1945) வெள்ளையரை ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தித்தான் வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தேசத் தலைவர் நேதாஜி, ஜென்ரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு செயல்படாமல் சுணங்கிக் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர் கொடுத்தார். 1943
ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம், 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி இந்தியாவின் கிழக்கு எல்லைக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது. 2 மாத போரில் வெள்ளையர் பிடியில் இருந்த கொஹீமா கோட்டையையும், திம்பாப்பூர் - கோஹிமா சாலையையும் கைப்பற்றியது. இந்திய தேசிய ராணுவத்தின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பின் வாங்கிய பிரிட்டிஷ் படைகளை துரத்தியடித்த இந்திய தேசிய ராணுவம், இம்ப்பால் நகரை முற்றுகையிட்டது. ஆனால், மழையும், பெரு வெள்ளமும் அப்படையெடுப்பை தோற்டிகத்தன. இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...
பிரிவினை நோக்கி : ஜின்னாவின் போர்க்குரல் (1946)வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றதும், 2வது உலகப் போரில் வென்றாலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதாலும், இதற்குமேல் இந்தியாவை தங்களது ஆதிக்கத்திக் கீழ் வைத்திருக்க முடியாது என்றுணர்ந்து வெளியேற முற்பட்ட நிலையில், அதன் பிரிவினைத் திட்டத்திற்கு இசைவு தந்த மொஹம்மது அலி ஜின்னா, 1946 ஆம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு அரைகூவல் விடுத்தார். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்கும் கோரிக்கையை அரசியல் ரீதியாக வலியுறுத்திய ஜின்னா, அதனை வெள்ளையரின் ஆலோசனையின் படி சாதித்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கையே நேரடி நடவடிக்கைத் திட்டமாகும்.ஜின்னாவின் நேரடி அழைப்பு இந்து, முஸ்லிம் மோதலிற்கு வித்திட்டது. வங்கத்தில் ஷூர்ராவாடி தலைமையிலான அரசு இந்துக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட மாபெரும் கலவரம் வெடித்தது. நவகாளியில் நடந்த படுகொலை நாட்டை உலுக்கியது. கலவரம் நாட்டின் மற்றப் பகுதிகளுக்கும் பரவியது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி ரத்த வெள்ளத்தில் இந்தியாவின் பிரிவினைக்கு இட்டுச் சென்றது. பிரிவினைத் திட்டத்தை முன்வைத்த மெளண்ட்பேட்டன் (1947, மார்ச்)மொஹம்மது அலி ஜின்னாவின் நேரடி நடவடிக்கை அழைப்பால் இந்து, முஸ்லிம் மக்களுக்கு இடையே வெடித்த வன்முறைகளை தங்களது பிரித்தாளும் திட்டத்திற்கு லாவகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைத் திட்டத்தை முன்வைத்தது. 1947
ஆம் ஆண்டு மார்ச் திங்களில் வைஸ்ராய் யார்ல் மெளண்ட்பேட்டன் முன்வைத்த பிரிவினைத் திட்டத்தை ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் பட்டேலும் ஏற்றனர். மகாத்மா காந்தி ஏற்க மறுத்தார். காந்தி மட்டுமல்ல, இந்திய மக்களும் ஏற்க மறுத்தனர். ஆனால், பிறகு ஒப்புதல் கிடைத்தது. பிரிவினையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற வாக்கெடுப்பு காங்கிரஸ் செயற்குழுவில் நடத்தப்பட்டபோது, பிரிவி்னைக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன!இந்தியா விடுதலை பெற்றது (1947, ஆகஸ்ட் 15)200
ஆண்டுக்கால வெள்ளைய காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், பாரத நாட்டின் மக்களாக, ஒரே சமூகமாக தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த மண், மத ரீதியில் பிளக்கப்பட்டு விடுதலை பெறப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டது. நமது மூவண்ண தேசக் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றார்.