Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1857 : சிப்பாய் கலகமல்ல, சுதந்திரப் போர்!

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:21 IST)
நமது நாட்டின் மீது தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டிய வெள்ளைய மேலாதிக்கத்தை எதிர்த்து 1857ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி முதல் சுந்திரப் போர் வெடித்தது.

பாரத நாடு முழுவதும் தங்களது நிர்வாக எந்திரத்தை பலமாக நிலைநிறுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்கள் மேலாதிக்கத்தின் அடித்தளமாக திகழ்ந்த பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சிப்பாய்களுக்கு இழைத்துவந்த அநீதிகளைக் கண்டு கொதிப்படைந்தும், தங்கள் நாட்டு மக்கள் மீது வெள்ளைய ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அராஜக நடவடிக்கைகளால் கோபமடைந்திருந்த அவர்கள் வெள்ளையனை எதிர்த்து கிளர்ந்தெழ வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட புதிய என்ஃபீல்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் தோட்டாக்களின் மீது தடவப்பட்ட மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு, பிரச்சனைக்கு காரணமானது.

அதையே காரணமாக்கி, வெள்ளையனை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் - சாதி, மத பேதமின்றி, இந்தியன் என்கின்ற ஒரே அடிப்படையில் ஒன்றிணைந்து கிளர்ச்சியைத் தொடங்கினர்.

இதனை மத நம்பிக்கையின் மீது ஏற்பட்ட கலகமாக அன்றைய வெள்ளைய அரசும், பின்னாளில் வெள்ளைய சரித்திர ஆரிசியர்களும் சித்தரித்தனர்.

ஆனால் அது சிப்பாய்க் கலகமாக . . . வெள்ளையனுக்கு எதிராக வெடித்த சுதந்திரப் போர் அது என்பதனையும், மதப் பாகுபாடின்றி வெடித்த சுதந்திரப் போர் அது என்பதையும் உங்களுக்கு கொண்டு வருகிறோம்.

மரபு வழி வந்த எதிர்ப்ப ு

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கிய காலம் முதற்கொண்டே, இந்திய மக்கள் அதை எதிர்த்து வந்தார்கள். 1857 க்கு முன், அநேகமாக ஒவ்வோர் ஆண்டும், நாட்டின் ஏதாவதொரு பகுதியில் இராணுவப் புரட்சி பீறிட்டெழுந்தது. தொடர்ச்சியான இந்த எதிர்ப்பு, பொதுவாக மூன்று வழிகளில் - மூன்றும் முற்றிலும் நாட்டு மரபை ஒட்டிய வழிகளில் - வெளியிடப்பட்டது. அவை, பொது மக்கள் புரட்சிகள், ஆதிகுடி மக்கள் எழுச்சிகள், குடியானவர் இயக்கங்கள், புரட்சிகள் என நடந்துவந்தன.

பொது மக்கள் புரட்சிகள்

இந்தியாவைப் பிரிட்டன் ஆக்ரமித்துப் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டதையொட்டி, நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் மூண்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியப் போர் வீரர்களிடையே கூட இந்த அதிருப்தி பரவியது.

ஆட்சியுரிமையை இழந்த சிற்றரசர்களும், அவர்கள் வழித்தோன்றல்களும் உறவினரும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும், இந்திய ஆதரவாளர்களும் தலைமை தாங்கி நடத்திய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளின் வாயிலாக, பொதுமக்கள் அதிருப்தி ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிடப்படலாயிற்று. குடியானவர்கள், கைவினைத் தொழிலாளர் ஆகியோரில் பெரும்பகுதியினர் தங்களுக்கு ஏற்பட்ட இடுக்கண்களையும் குறைகளைவும் எதிர்த்துப் போராட, இந்த எழுச்சிகளில் முக்கிய பங்கு கொண்டு இப்புரட்சிக்கு முதுகெலும்பாய் விளங்கினர். பிரிட்டிஷ் ஆட்சி வங்காளத்திலும் பீகாரிலும் நிலை நாட்டப்பட்ட காலம் முதற்கொண்டே இந்தப் பொதுமக்கள் புரட்சிகள் ஏழலாயின. நிலவரி உயர்த்தப்பட்டதும், கைவினைக் கலைஞர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாலும், அதன் பரிவாரங்களாலும் சுரண்டப்பட்டதும், பழைய ஜமீன்தாரர்கள் கவிழ்க்கப்பட்டதும், புரட்சி உணர்வுக்கு எரியூட்டின. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே புரட்சிக் கிளர்ச்சிகள் தோன்றின.

சமயத் துறவிகளும், உடைமை பறிபோன ஜமீன்தாரர்களும், தலைமை தாங்கி நடத்திய, புகழ்பெற்ற சன்னியாசப் புரட்சியில், வங்காளத்தில் இராணுதிலிருந்து வெளியேற்றப்பட்ட போர்வீரர்களும், நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட குடியானவர்களும் பங்கு கொண்டனர். சந்தியாசிப் புரட்சி 1763 முதல் 1800 ம் ஆண்டு வரை நடந்தது. அதற்குப் பின்பு, 1766 முதல் 1772 வரை வங்காளத்திலும் பீகாரிலும் ஐந்து மாவட்டங்களில் சூயார் புரட்சி எழுந்தது. மற்றொரு சூயார் புரட்சி 1795 முதல் 1816 வரை நடந்தது.

நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் பிரிட்டிஷ் ஆட்சி விரிவாக்கப்பட்டதையொட்டி இதுபோன்ற புரட்சிகள் அப்பகுதிகளிலும் தோன்றின. 1804 முதல் 1817 வரை, ஒரிசா ஜமீன்தாரர்களின் புரட்சி நடந்தது. தென்னிந்தியாவில் விஜயநகரம் ராஜா 1794 ல் புரட்சி செய்தார். தமிழ்நாட்டில் பாளையக்காரர்கள் 1790 ம் ஆண்டு வாக்கிலும், மலையாளத்திலும் திண்டுக்கல்லிலும் 1801 ம் ஆண்டிலும், ஆந்திரக் கடலோரப் பகுதியில் 1801 முதல் 1805 வரையிலும், பார்லாகி மிடியில் 1813 முதல் 1834 வரையிலும், புரட்சி செய்தனர். மைசூரில் 1800 ம் ஆண்டிலும், மீண்டும் 1831 ம் ஆண்டிலும், புரட்சிகள் எழுந்தன. விசாகப்பட்டினம் புரட்சி 1830 முதல் 34 வரை தோன்றியது. திருவாங்கூரைச் சேர்ந்த திவான் வேலுத்தம்பி 1805 ல் புரட்சி செய்தார். மேற்கு இந்தியாவில், சௌராஷ்டிர ஆட்சித் தலைவர்கள் 1816 - 32 ஆண்டுகளிடையே பலமுறை புரட்சி செய்தனர்.

1824-25, 1828, 1839, 1849 ஆண்டுகளில் குஜரத்தைச் சேர்ந்த கோலிகள் புரட்சி செய்தனர். மகாராஷ்டிரத்தில் எண்ணற்ற புரட்சிகள் தோன்றின. மகாராஷ்டிரத்தில் புரட்சி ஓயாது, அடங்காது, ஓங்கி வந்தது என்று கூறலாம். கிட்டூர் புரட்சி (1824-29), கோலாப்பூர் புரட்சி (1824), சத்தாரா புரட்சி (1841), கத்காரிகளின் புரட்சி (1824), ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. வட இந்தியாவிலும் புரட்சிக்கனல் கொழுந்துவிட்டெரிந்தது. மேற்கு ஐக்கிய மகாணத்தையும் ஹரியானாவையும் சேர்ந்த ஜாட்கள், 1824 ல் பெரும் கலவரத்தை உண்டாக்கினர். 1805 ல் பிலாஸ்பூரில் இராஜபுத்திரர் புரட்சி1814-17 ல் அலிகாரில் தாலுக்காரர்கள் புரட்சி, 1842 ல் ஜபல்பூரில் பண்டேலாக்கள் புரட்சி ஆகியவை முக்கியமாக குறிப்பிடத்தக்கவை.

இவற்றால் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டது என்று சொல்வதற்கில்லை. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் உணர்வையும் சூழ்நிலையையும் ஆங்காங்கு உருவாக்கியதே இவற்றின் முக்கிய சாதனை ஆகும்.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்திய மக்கள் நடத்திய மரபு வழிப் போராட்டத்தின் உச்சகட்டமாய் அமைந்தது 1857 ம் ஆண்டின் சுதந்திரப் புரட்சி. அதில் குடியானவர்கள், கைவினைக் கலைஞர், போர் வீரர்கள், ஆகியோர் இலட்சக் கணக்கில் பங்கு கொண்டனர். 1857 ம் ஆண்டுப் புரட்சி, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆணிவேரையே அசைத்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய சிப்பாய்களின எழுச்சியுடன் அப்புரட்சி தொடங்கியது. ஆனால் வெகு விரைவிலேயே, அது மற்ற பகுதிகளுக்கும் மற்ற மக்கள் தொகுதிகளுக்கும் பரவியது. அன்னிய ஆட்சி மீது மக்களுக்கு எழுந்திருந்த அதிருப்தி அனைத்தும் திரண்டு அந்தப் புரட்சியில் வெளிப்பட்டது.

அரசாங்கத்தின் வரி விதிப்புக் கொள்கையையும், அதன் விளைவாய் தங்கள் நிலங்கள் பறிபோனதையும், காவலர்கள், சில்லரை அதிகாரிகள், கீழ்மட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் அடக்குமுறையும் ஊழல் மலிந்த நடவடிக்கைகளையும் கண்டு, வேளாளக் குடிமக்கள் பெரிதும் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்திய சமுதாயத்தில், நடுமட்ட உயர்மட்ட வர்க்கத்தினரும், குறிப்பாக நாட்டின் வடபகுதியில், அரசாங்க நிர்வாகத்தில் உயர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தால், பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியச் சிற்றரசர்கள், மன்னர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியோரின் அதிகாரம் பறிபோனதை ஒட்டி, அவர்கள் ஆதரவை இழந்த சமய குருக்கள், புரோகிதர்கள், மவுல்விக்கள், பண்டிதர்கள், ஆகியோரும், சமயக் கலாச்சாரத் துறை அதிருப்தி கொண்டிருந்தனர்.

1856 ல் அவுத் பகுதி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்ட்டதை ஒட்டி, நாடெங்கிலும் பொதுவாகவும், குறிப்பாக அவுத் பகுதியிலும், மிகுந்த ஆத்திரம் மூண்டிருந்தது. கம்பெனியின் சிப்பாய்களில் பலர் அவுத் பகுதியிலிருந்து வந்தவர்களாதலால், அவர்களும் இதுபற்றி ஆத்திரமும் சீற்றமும் கொண்டனர். மேலும், அவுத் பகுதியில் தங்கள் குடும்பங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களுக்காக, அவர்கள் இப்பொழுது உயர்ந்த வரிகள் செலுத்த வேண்டியருந்தது. தாலுக்காரர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினரின் நிலச் சொத்துக்களையும் பிரிட்டிஷார் பறிமுதல் செய்திருந்தனர். நிலத்தைப் பறிகொடுத்த தாலுக்தாரர்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கடும் எதிரிகளாக மாறினர். சுதேச மன்னர் ஆண்ட பகுதிகளை பிரிட்டிஷ் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவர வைஸ்ராய் டல்ஹவுசி பிரபு பின்பற்றி வந்த கொள்கை, சுதேச மன்னர்களிடையே பெரும் கலக்கத்தையும் கவலையையும் உண்டுபண்ணியிருந்தது.

அன்னிய ஆட்சிக்கு அடிபணிந்து, தங்கள் அவமானத்தையும் பொருட்படுத்தாமல் செய்த விசுவாசப் பிரகடனங்கள், தங்கள் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் உத்தரவாதமாக அமையாது என்பதைச் சுதேச மன்னர்கள் உணரலாயினர். சுதேச மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்த்து, அப்பகுதிகளைப் பிரிட்டிஷ் அரசுடன் இணைத்த கொள்கையின் காரணமாக, நானா சாகிப், ஜான்ஸி ராணி, பகதூர் ஷா ஆகியோர், பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களைக் கேவலமாக நடத்தியதாலும், கம்பெனியின் போர் வீரர்களும் சிப்பாய்களும் அதிருப்தி கொண்டிருந்தனர்.

" சிப்பாய், தாழ்ந்த பிறவியாகக் கருதப்பட்டு, ஏச்சுக்கும் பழிப்பேச்சுக்கும் ஆளாக்கப்பட்டு, கேவலமாக நடத்தப்பட்டு, "நிக்கர்" என்றும் "பன்றி" என்றும் அழைக்கப்படுகின்றான். தாழ்ந்த விலங்கினத்தைச் சேர்ந்தவன் போல் சிப்பாய், இளைய அதிகாரிகளால் நடத்தப்படுகின்றான்," என்று அக்காலத்திய பிரிட்டிஷ் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பதவி உயர்வு பெறுவதற்குச் சிப்பாய்க்குச் சிறிதும் வாய்ப்பு இல்லை. மாதம் அறுபது அல்லது எழுபது சம்பளம் பெற்ற சுபேதார் பதவியை விட மேல் பதவி எதற்கும் இந்தியச் சிப்பாய் செல்ல முடியாத நிலை இருந்தது.

இவ்வாறாக, 1857 வாக்கில், பொதுமக்கள் புரட்சி எழுவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் எங்கும் பரவியிருந்தன. தோட்டக்கள் மேல் கொழுப்பு தடவப்பட்டிருந்த நிகழ்ச்சி, குமுறிக் கொண்டிருந்த இந்த கசப்பு உணர்ச்சி, கொழுந்துவிட்டு எரியச் செய்த தீப்பொறியாயிற்று. புதிய என்ஃபீல்ட் துப்பாக்கித் தோட்டாக்கள் மேல் கொழுப்பு தடவிய ஒரு காகித உறை சுற்றப்பட்டிருந்தது. தோட்டாவைப் பயன்படுத்துவதுவதற்கு முன், உறையின் நுனியை வாயினால் கடித்தெறிய வேண்டியிருந்தது. சில உறைகள், மாட்டுக் கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் சேர்ந்த கலவையினால் தடவப்பட்டிருந்தன. தங்கள் சமய உணர்வுகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பினால், சிப்பாய்கள் சீற்றம் கொண்டிருந்தனர். அவர்கள் புரட்சி செய்யச் சித்தமாயிருந்தனர். இந்திய சமுதாயத்தில் மற்ற பிரிவினரும் புரட்சி செய்ய, சிப்பாய்களின் புரட்சி வாய்ப்பினை நல்கியது.

சிப்பாய்கள ் வெள்ளை ய அதிகாரிகள ை எதிர்த்த ு நடத்தி ய இந்தப ் புரட்சிக்க ு வித்திட்டத ு மாவீரன ் மங்கள ் பாண்ட ேயின ் வீரமும ், அவன ் தூக்கிலிடப்பட்டதும்தான ்.

1857 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி டில்லயிலிருந்து 36 மைல்கள் தூரத்திலிருந்த மீரட்டில், புரட்சி தொடங்கியது. அங்கு சிப்பாய்கள் செய்த புரட்சி, வடக்கில் பாஞ்சாலம் முதற்கொண்டு தெற்கில் நர்மதா வரையிலும், கிழக்கில் பீகார் முதற்கொண்டு மேற்கில் ராஜபுதனம் வரை, பல இடங்களிலும் பரவியது.

மீரட் சிப்பாய்கள் தங்கள் மேலதிகாரிகளைக் கொன்றுவிட்டு டில்லி நோக்கிப் புறப்பட்டனர். மறுநாள் அவர்கள் டில்லி வந்து சேர்ந்ததும், டில்லி சிப்பாய்களும் புரட்சி செய்து, நகரத்தைக் கைப்பற்றி, மூப்பு எய்திருந்த பகதூர் ஷாவை இந்திய சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்தனர். இவ்வாறு சிப்பாய்கள் தங்கள் எழுச்சியைப் புரட்சிப் போராகவே மாற்றினர். அது முதற்கொண்டு, புரட்சியில் பங்கு கொண்ட சிப்பாய்கள், இந்திய பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியோர் அனைவரும், மொகலாய மாமன்னர்க்குத் தங்கள் விசுவாசத்தைப் பிரகடனம் செய்தனர். மொகலாய மாமன்னர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒரு சின்னமாக விளங்கினர்.

வடக்கிந்தியாவிலும் மத்திய இந்தியாவின் எல்லா இடங்களிலும் சிப்பாய்கள் எழுச்சியைத் தொடர்ந்து குடி மக்களும் புரட்சி செய்தனர். ஈட்டி, கோடாரி, அம்பு, வில், குண்டாந்தடி, கைவாள், நாட்டுக் குண்டுகள் ஆகிய போர்க் கருவிகளைப் பாமர மக்கள் தங்கள் போராட்டத்தில் பயன்படுத்தினர். குறிப்பாக, இன்றைய உத்தரப்பிரதேசம், பீகார் பகுதிகளில், அப்புரட்சிக்கு உறுதியும் வலிமையும் தந்தது, வேளாளர் குடிமக்களும் கைவினைக் கலைஞர்களும் அப்புரட்சியில் பரவலாகப் பங்கு கொண்டது தான். ஒரு மதிப்பீட்டின் படி, அவுத் பகுதியில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்த ஒன்றரை இலட்சம் பேரில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சிப்பாய்கள் அல்லாத குடிமக்களேயாவர்.

1857 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு வலிமை ஊட்டிய முக்கிய சக்தி, இந்து - முஸ்லீம் ஒற்றுமையேயாகும். சிப்பாய்களிடையேயும், பாமர மக்களிடையேயும், தலைவர்களிடையேயும், இந்து - முஸ்லீம் ஒற்றுமை பரிபூரணமாகக் காணப்பட்டது. முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த பகதூர் ஷாவைப் புரட்சிக்காரர்கள் அனைவரும் தங்கள் மாமன்னராக ஏற்றுக்கொண்டனர். புரட்சிக்காரர்களிடையேயும் சிப்பாய்களிடையேயும், இந்துக்களும், முஸ்லீம்களும், ஒருவரொருவர் உணர்ச்சிகளைப் பரஸ்பரம் மதித்தனர். எடுத்துக்காட்டாக, புரட்சி வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம், இந்து உணர்ச்சிகளை மதித்துப் பசு வதையைத் தடுத்து உடனடியாக உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

தலைமையின் எல்லா மாவட்டங்களிலும் இந்துக்களும் முஸ்லீம்களும் பொறுப்பேற்றிருந்தனர். "இந்த ஒரு கட்டத்தில், இந்துக்களுக்கு எதிராக முகமதியர்களே நாம் தூண்டிவிட இயலவில்லை", என்று உயர்தர பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் பின்னர் அங் கல ாய்த்தார். 1858 ஆம் ஆண்டுக்கு முன்பும், வரலாற்றின் நடுப்பகுதியிலும், இந்தியாவில் மக்களிடையேயும் அரசியலிலும் வகுப்பு வாத உணர்வு ஓங்கியிருக்கவில்லை என்பதற்கு, 1857 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தெளிவான சான்றாகும்.

இறுதியில், உலகெங்கும் ஆதிக்கத்தின் உச்ச கட்டத்திலிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இந்திய சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், ஆகியோரில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன், தன்னுடைய இராணுவ பலத்தைக் கண்டு, புரட்சியை அடக்கி ஒடுக்க முடிந்தது. புரட்சிக்காரர்களிடம் போதிய ஆயுதங்களும், கட்டுக்கோப்பான அமைப்பும், கட்டுப்பாடு உறுதியும், ஒன்றுபட்ட தலைமையும் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. அக்குறைகளை அவர்கள் ஈடுசெய்வதற்கு முன்பாக, பிரிட்டிஷ் அரசாங்கம், தன்னுடைய எல்லையற்ற வளங்களையும் வசதிகளையும் ஒன்றுதிரட்டி, புரட்சியை மிகக் கடுமையாக அடக்கியது.

1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி, பிரிட்டிஷார் டில்லியைக் கைப்பற்றி, மாமன்னர் பகதூர்ஷாவைச் சிறையெடுத்தபோது, புரட்சிக்காரர்களுக்குப் பெரும் தோல்வி ஏற்பட்டது. மற்ற தலைவர்கள் சிறிது காலம் துணிச்சலாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். ஆனால் ஒருவர் பின்பு ஒருவராக, அவர்களும் வீழ்ச்சியடைந்தனர். நானாசாகிப் கான்பூரில் தோல்வியடைந்தார். அவருடைய விசுவாசமான தளபதியான தாந்தியா தோப், தொடர்ந்து, தலை மறைவாக வீரப் போராட்டம் நடத்தினார். ஆனால் 1859 ஆம் ஆண்டு ஏப்ரலில், அவருடைய ஜமீன்தார் நண்பர் ஒருவர் அவரை எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார்.

1858 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி, வாளேந்தி வீரப்போராட்டம் நடத்துகையில் ஜான்சிராணி வீர மரணம் எய்தினார். 1859 ஆம் ஆண்டுக்குள்ளாக, பீகாரைச் சேர்ந்த குன்வார்சிங், டில்லி புரட்சிக்காரர்களின் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற வீர சிப்பாய் பக்தர்கள், பெரேலியைச் சேர்ந்த கான் பகதூர் ஷா, பெய்சாபாடைச் சேர்ந்த மவுல்வி அகமதுல்லா ஆகியோர் வீரமரணம் எய்தினர். அவுத் பேகம் நேப்பாளத்துக்குத் தப்பி ஓட வேண்டிய தாயிற்று.

1859 ஆம் ஆண்டு இறுதியில், இந்தியா முழுவதிலும் பிரிட்டிஷ் ஆதிக்கம் மீண்டும் உறுதியாக நிலை நாட்டப்பட்டு விட்டது. ஆனால் புரட்சி பயனற்றதாய்ப் போயிருக்கவில்லை. பழமையான வழியிலும், மரபு வழி வந்த பரம்பரைத் தலைமையின் கீழும், இந்தியாவைக் காப்பாற்ற வெற்றிக்கு வாய்ப்பின்றி மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்ற போதிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து நாட்டை விடுவிக்க இந்திய மக்கள் நடத்திய முதல் வீரப் போராட்டமாக அது அமைந்தது. புரட்சித் தலைவர்களைப் பற்றிப் பேசுவதே ஆட்சியாளரின் சீற்றத்தை மூட்டியது. புரட்சித் தலைவர்களின் பெயர்கள் நாடெங்கும் மக்களின் நெஞ்சிலே நீங்காத இடம் பெற்றுவிட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments