Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடிகாத்த குமரன் (1904 - 1932)

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:35 IST)
webdunia photoFILE
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

' வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.

1904 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்ரி குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

காவலர்கள் தடியடி நடத்தி, தூப்பாக்கி குண்டுகளை பாய்ச்சி ய போதும் 'வந்தேமாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியாகும்.

மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.

ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை.

நாடு சுதந்திரமடைந்ததன் 60ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

Show comments