Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ அரவிந்தரின் சுதந்திர தினச் செய்தி!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று நம் நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியை கீழே தந்துள்ளோம்.

webdunia photoFILE
பூரண சுதந்திரம் என்பதை முதலில் உச்சரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டியவர். இந்தியாவின் சுதந்திரம் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதனை தனது ஆன்மீக ஆற்றலால் கண்டுகொண்டு இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற பிந்நாளில் ஆன்மீக பணியை மேற்கொண்டவர். இந்திய தேசிய உணர்வின் சின்னமாகவும், மானுடத்தின் ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழும் ஸ்ரீ அரவிந்தர், ஆகஸ்ட் 14, 1947 அன்று விடுத்த ஆங்கில செய்தியின் தமிழாக்கம் இது.

ஸ்ரீ அரவிந்தரின் செய்த ி :

ஆகஸ்ட் 15, 1947 சுதந்திர இந்தியாவின் பிறந்த நாள்.

இந்நாள் அவளுடைய பழைய யுகத்தின் முடிவிற்கும், புது யுகத்தின் துவக்கத்திற்குமான அடையாளமாகும்.

இந்நாளையே, ஒரு சுதந்திர தேசத்தின் மக்களாகிய நாம், நமது வாழ்க்கை மற்றும் செயல்பாட்டின் வாயிலாக மானுடத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு, ஆன்மீக எதிர்காலத்திற்கு வித்திடும் ஒரு புது யுகத்தின் துவக்க நாளாகவும் மாற்றலாம்.

ஆகஸ்ட் 15 எனது பிறந்த நாள். அந்நாளுக்கு இவ்வளவு பரந்த முக்கியத்துவம் கிடைத்திருப்பது உண்மையிலேயே எனக்கு பெருமையாய் உள்ளது. இதனை தற்செயலான நிகழ்வாக அல்லாமல் முன்நிச்சயிக்கப்பட்ட ஒரு ஏற்பாடாக, எதற்காக எனது வாழ்க்கையின் துவக்க கட்டத்தில் பணியாற்றினேனோ அந்த உன்னத இலட்சியம் முழுமையாக நிறைவேற, என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்திச் செல்லும் இறைவனின் ஒப்புதலாகவும் அத்தாட்சியாகவும் கொள்கின்றேன். அதைவிட, இவ்வுலகில் என்னென்ன நிகழ வேண்டும் என நான் எதிர்பார்த்தேனோ, அன்று நடைமுறையில் சாத்தியமற்ற கனவுகளாக தெரிந்த அனைத்தும், அனைத்து உலக-இயக்கங்களும் இன்று நிறைவேறி வருவதையும், எனது வாழ்நாளிலேயே அவைகள் சாதனைகளாவதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வனைத்து இயக்கங்களிலும் சுதந்திர இந்தியா ஒரு முக்கிய பங்காற்றவும், அதற்கு தலைமையேற்கவும் முடியும்.

ஒரு சுதந்திரமான, ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும் புரட்சி இயக்கமே (எனது) முதல் கனவாகும். இந்தியா இன்று விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் ஒற்றுமையை சாதிக்கவில்லை. வெள்ளைய ஏகாதிபத்யம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததைப்போல, விடுதலைக்குப்பின் இந்தியா மீண்டும் பல நாடுகளாக சிதறுண்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று கூட ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. ஒரு முழுமையான ஒருங்கிணைப்பாக இல்லாவிட்டாலும், மிகப்பெரிய, சக்திவாய்ந்த தேசமாக இந்தியா நிலைபெற்றுவிட்டது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் எவ்வித பாகுபடுத்தலோ, பிளவோ இன்றி தீர்க்கப்படும் என்ற அரசியல் நிர்ணய சபையின் அறிவுப்பூர்வமான அதிரடி கொள்கை நம்பிக்கையூட்டுகிறது. ஆனால் இந்து - முஸ்லீம் எனும் பழைய சமூகப் பிரிவினை - அரசியல் ரீதியாக இந்நாடு இரண்டாகப்பட்டதனால் - மேலும் கடினமாகிவிட்டதாகத் தோன்றுகிறது

பிரிவினை ஒழிந்தாக வேண்டும ்

இன்றைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட இந்த பிரிவினை முடிந்துபோன ஒன்றாக கொள்ளாமல் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதப்படும் எனறு நம்புகிறேன். ஏனெனில் இப்பிரிவினை நீடித்தால், அது இந்தியாவை மிகவும் பலவீனப்படுத்திவிடும் என்பது மட்டுமல்ல, முடமாக்கிவிடக்கூடும். இதனால் சமூக மோதல்கள் நிரந்தரமாகிவிடும் சாத்தியம் உள்ளது. அதன் விளைவாக இந்தியாவின் மீது வெளியில் இருந்து மீண்டும் படையெடுப்பும், அன்னிய ஆட்சியும் ஏற்படலாம். இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சியும், செழுமையும் தடைபடலாம். உலக நாடுகளிடையே அவளின் நிலை பலவீனமாகலாம். அவளின் விதி சக்தியற்றதாகலாம், அல்லது முறியடிக்கப்படலாம். அவ்வாறு ஏற்பட்டுவிடக்கூடாது; (இந்தியா - பாகிஸ்தான் எனும்) பிரிவினை ஒழிந்தாக வேண்டும். அது இயற்கையாக நிறைவேறும் என்று நம்புவோமாக; அமைதிக்காகவும், இணக்கத்திற்காகவும் மட்டுமின்றி பொதுவான செயல்பாட்டிற்கும் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்வதன் வாயிலாக அது நிறைவேறும். இந்த வழியில், உறுதியான ஒற்றுமை ஏதாவது ஒரு வடிவில் - அது எப்படிப்பட்ட வடிவில் வரும் என்பது முக்கியமல்ல, ஆனால் வந்தே தீரும். எப்படியாவது, எந்த வழியிலாவது இந்த பிரிவினை ஒழிந்தே ஆகவேண்டும்; இந்தியாவின் எதிர்காலத்தை பெருமைக்குரியதாக்க இந்த ஒற்றுமை மிக அவசியம், அது சாதிக்கப்பட்டேயாக வேண்டும்.

ஆசியாவின் எழுச்ச ி

மனித நாகரீக வளர்ச்சியில் மீண்டும் தனது பங்களிப்பைத் தர ஆசியா மறுவெழுச்சிப் பெற வேண்டும், அதன் மக்கள் விடுதலைப் பெற வேண்டும் என்பது (எனது) மற்றொரு கனவாகும். ஆசியா எழுந்துவிட்டது; அதன் பெரும்பகுதி விடுதலைப் பெற்றுவிட்டது அல்லது இவ்வேளையில் விடுதலை பெற்றுக் கொண்டிருக்கிறது; அதன் மற்ற சில பகுதிகள் ஏதாவது ஒரு வழியில் விடுதலையைப் பெற போராடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சம்தான் செய்ய வேண்டியுள்ளது. அது இன்றோ அல்லது நாளையோ முடிந்துவிடும். இதில் இந்தியா ஆற்றவேண்டிய பங்கும் உள்ளது. அதனை எந்த அளவிற்கு தனது சக்தியாலும், திறமையினாலும் இந்தியா ஆற்றி வருகிறதென்பதை உலக நாடுகள் பேரவையில் அது பெற்றுள்ள முக்கியத்துவம் வெளிப்படுத்துகிறது.

உலக ஒற்றுமை!

இப்புவிவாழ் மக்கள் அனைவருக்கும் அறிவுசார்ந்த ஒளிமயமான, சமத்துவ வாழ்க்கையை உறுதிசெய்யும் அடிப்படையை மையமாகக் கொண்ட ஒரு உலக ஒற்றுமை (எனது) மூன்றாவது கனவாகும். அப்படிப்பட்ட மானுட உலக ஒற்றுமை தற்பொழுது ஏற்பட்டுவருகிறது; அது ஒரு முழுமையற்ற துவக்கத்தில் இருந்தாலும், கடுமையான தடைகளுக்கு எதிராக போராடிவருகிறது. ஆயினும் முன்னேறிக் கொண்டு வருகிறது, அதன் வீச்சு பெருகுவதும், வெற்றி பெறுவதும் தவிர்க்கவியலாத ஒன்றாகும். இதிலும் இந்தியா ஒரு முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. இப்பணியில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா முழு அளவில் ஈடுபட்டால், ஒற்றுமையை நோக்கிய அந்த முன்னேற்றம் துணிச்சலானதாகவும், துரிதமானதாகவும் இருக்கும்.

உலக ஒற்றுமையை நோக்கிய இந்த முன்னேற்றம் ஒரு பேரழிவின் குறுக்கீட்டால் தடைபடலாம். ஏன், இதுவரை சாதிக்கப்பட்டதனைத்தையும் அழித்துவிடலாம். ஆனால் அதற்குப் பின்னும் இறுதி வெற்றி நிச்சயம். ஏனெனில், ஒருங்கிணைப்பு என்பது இயற்கையின் அவசியம். அதன் தவிர்க்கமுடியாத இயக்கம். இந்த ஒற்றுமை ஒவ்வொரு தேசத்திற்கும் மிக அவசியமானதாகும். ஏனெனில் உலக ஒற்றுமை இல்லையெனில் சிறிய நாடுகளின் சுதந்திரம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகும். பெரும் சக்திவாய்ந்த நாடுகளின் நிலை கூட பாதுகாப்பற்றதாகலாம். எனவே அனைவரின் நலன்களையும் காக்க உலக ஒற்றுமை அவசியமாகிறது. மனிதனின் மூடத்தனமான சுயநலமும், அறிவீனமும் இதனை தடுத்திடலாம். ஆனால் இயற்கைக்குக்கும், இறைவனின் சித்தத்திற்கும் எதிராக அதனால் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது. இந்த ஒற்றுமை சர்வதேச உணர்வாகவும், பரந்த பார்வையுடனான சர்வதேச வடிவாகவும், அமைப்பாகவும் வளர்ந்து திகழ வேண்டுமேயல்லாமல், சாதாரண புற ஒற்றுமையாக இருத்தல் கூடாது.

இரண்டு அல்லது பல நாடுகளில் வாழும் குடியுரிமை அளித்தல், தன்னார்வத்துடனனான ஒருமித்த பண்பாட்டு பரிமாற்றம் ஆகியவாற்றினால் அந்த உலக ஒற்றுமை பலப்பட வேண்டும். தேசியம் தன்னளவில் நிறைகொண்டுவிட்ட, தனது தீவிரவாதத் தன்மையை இழந்துவிட்ட ஒன்றாகவும், இதற்கு மேல் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத் தன்மை அற்றதாகிவிட்டது. இதற்கு மேல் நாம் அனைவரும் மானுடரே எனும் புத்துணர்வு மனித குலத்தை வழிநடத்தும்.

" இந்தியா தனது ஆன்மீக கொடையை உலகிற்கு வழங்க வேண்டும் என்பது (எனது) மற்றொரு கனவாகும். அதுவும் ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஆன்மீகம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் எட்டியுள்ளது. இந்த போக்கு மேலும் வளரும், காலத்தின் பேரழி நர்த்தனங்களையும் தாண்டி ஒரு நம்பிக்கையுடன் மேலும், மேலும் பல கண்கள் இந்தியாவை நோக்கி திரும்பும். அவளிடமுள்ள தத்துவ பெட்டகங்களை நாடி மட்டுமல்ல, அவளுடைய உன்முக, ஆன்மீக பயிற்சியையும் நாடி திரும்பும்.

தான் சிந்திக்கத் துவங்கிய நாள் முதல் தனிமனித, சமூக முழுமையை நிலைநாட்ட போராடிவரும் மனிதன், தான் எதிர்கொண்டுவரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல்தரும் உயர்ந்த, பேருணர்வை நோக்கி அவனுடைய அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி துவங்க வேண்டும் என்பது எனது இறுதிக் கனவாகும்.

இது ஒரு தனித்த நம்பிக்கையாகவும், கருத்தாகவும் இருந்தாலும், இந்த எண்ணம் இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளில் உள்ள முன்னோக்குச் சிந்தனை கொண்ட உள்ளங்களிலும் எழுந்துள்ளது. இதனை சாதிக்கும் பாதையில் வேறு எந்த மாமுயற்சியிலும் இல்லாத அளவிற்கு பெரும் தடைகள் உள்ளன, ஆனாலும் தாண்டுவதற்குத் தானே தடைகள் யாவும்? இறைவனின் சித்தம் துணையிருப்பதால், அந்த தடைகளை தாண்டிவிடலாம்.

உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சியும், அது பிரபஞ்சத்தை தழுவியதாக இருந்தாலும் இந்தியாவிலேயே துவங்கும், அதன் ஆற்றல் மையமாக இந்தியாவே திகழும்.

இந்தியா விடுதலைப் பெற்ற இந்நாளில் இவைகளையே நான் முன்வைக்கின்றேன். எனது இந்த எண்ணங்கள் எந்த அளவிற்கு அல்லது எப்படி நிறைவேற்றப்போகிறது என்பது புதிய, சுதந்திர இந்தியாவைப் பொறுத்ததாகும்.

ஸ்ரீ அரவிந்தர்
(15 ஆகஸ்ட் 1947)

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அளித்த மேற்கண்ட செய்தி அகில இந்திய வானொலியில் ஆகஸ்ட் 14, 1947 அன்று ஒலிபரப்பப்பட்டது.

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

Show comments