Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோய் எதிர்ப்பு சக்தி: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

நோய் எதிர்ப்பு சக்தி: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
, செவ்வாய், 4 அக்டோபர் 2011 (11:14 IST)
மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இதில் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பியூட்லர், லக்சம்பர்கைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாஃப்மன் ஆகிய இருவருக்கு பாதியும், கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டெய்ன்மனுக்கு பாதியும் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இதில் ராலப் ஸ்டெய்ன்மென் கடந்த செப்டம்பர் மாதம் இறந்தார். பொதுவாக மரணத்துக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசுக்குத் தேர்வு செய்யும்போது ஸ்டெய்ன்மன் இறந்த விவரம் நோபல் கமிட்டிக்குத் தெரியாது என்பதால் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டிவிடும் முக்கியக் கொள்கைகளை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்து அது பற்றிய தெளிவான புரிதலுக்கு வழிவகுத்திருப்பதாக நோபல் பரிசுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1943-ம் ஆண்டு கனடாவில் பிறந்த ஸ்டெய்ன்மன், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மருத்துவத் துறையில் டென்டிரிடிக் செல்கள் என்கிற சொல்லை அறிமுகப்படுத்தியது இவர்தான். ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர்.

இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு முடக்கு வாதம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை பாராட்டியிருக்கிறது.

நோய்த் தொற்றுகள், புற்றுநோய், வீக்க நோய்கள் போன்றவற்றுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவும்.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ. 7.25 கோடி.

Share this Story:

Follow Webdunia tamil