Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது!

ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது!
, செவ்வாய், 18 செப்டம்பர் 2012 (16:23 IST)
ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக 'ரிஸ்க்'உள்ளதே என்று கூறுகின்றனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாபகசக்தி மற்றும் அறிதிறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்ட்ரேலியாவின் கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பார்வையை ஊக்குவிக்கும் மற்ற ஆய்வுகளும் இதற்கு வலு சேர்க்குமானால் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லிமோல்கள் இருந்து வந்துள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் 'ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் சிறுமுள்ளையில் வாதுமைக் கொட்டை வடிவில் இருக்கும் சதை அளவில் சுருக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும்.

நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மூளைக்கு 'ஸ்ட்ரெஸ்' கொடுக்காத வாழ்முறை, தேகப்பயிற்சி உணவு பழக்கம் அனைத்தும் மிக முக்கியம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil