Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்
, வியாழன், 12 நவம்பர் 2015 (19:56 IST)
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.


 
 
அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
 இந்த உணவுப் பழக்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடைய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.
 
நார்ச்சத்து,பெரும்பாலும் அதிகமாக பழங்களிலும் காய்கறிகளிலும் மற்றும் முழு தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும், அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்.
 
எனினும் பல நாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை
 
நார்ச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்வதற்கான வழிகள்: 
 
உங்களுக்கு தேவையான நார்ச்சத்தை எடுத்துக்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.அதில் முக்கியமானது காய்கறிகள் அதிகம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது. 
அது சாண்ட்விச்சோ, பிஸ்ஸாவோ அல்லது பஸ்தாவோ எதுவானாலும் அதில் காய்கறிகளை தாராளமாக சேருங்கள்.உங்களது சாப்பாட்டு தட்டில் பாதியளவு ஸ்டார்ச் எனப்படும் மாவு சத்து அல்லாத காய்கறிகள் இருக்கட்டும்.பிறகு பிரட், உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் காய்கறிகள் போன்ற ஸ்டார்ச் உணவுகள் தட்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு இருக்கட்டும்.
 
கடைசி பங்காக மீன்,தோலுரித்த கோழி இறைச்சி மற்றும் கொழுப்பற்ற இறைச்சி போன்றவை இருக்கலாம்.
இது தவிர முழு தானிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.அதிலும் வெள்ளை அரிசிக்கு பதிலாக, பிரவுன் அரிசி, முழு தானிய அதாவது கோதுமை பிரட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். 
 
பழச்சாறுக்குப் பதில் பழம்: 
 
நம்மில் பலரிடம் உட்கொள்வதற்கு சுலபமாக இருக்கிறது என்பதற்காக பழங்களை சாறாக, அதாவது ஜூஸ், அரைத்துக் குடிக்கும் வழக்கம் உள்ளது.முழு பழத்தில் உள்ள அளவிற்கு பழச்சாறில் நார்ச்சத்து இல்லை.
பழங்களை தவிர பீன்ஸ் வகையறாக்களிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ் பல வகைகளில் பலவிதமாக உள்ளது.இவை ஒவ்வொன்றிலுமே நார்ச்சத்து மிகுந்துள்ளது.
 
நொறுக்கு தீனியிலும் நார்ச்சத்து: 
 
நம்மில் பெரும்பாலானோருக்கு நொறுக்கு தீனி என்றாலே மிக்சர், சிப்ஸ், கேக், ஸ்வீட் மற்றும் நன்றாக எண்ணெய் குளியல் போட்ட போண்டா, பஜ்ஜி, வடை வகையறாக்கள்தான் நினைவுக்கு வரும். அதைத்தான் சாப்பாட்டை விட அதிகமாக எடுத்துக்கொண்டு தொப்பை, தொந்தி என புலம்பி வருகின்றனர்.
 
இதுமாதிரி நார்ச்சத்து அல்லாத கலோரி அதிகம் நிறைந்த நொறுக்கு தீனிகளுக்குப் பதிலாக கேரட், நறுக்கிய வெள்ளரி துண்டுகள், கொழுப்பு அல்லாத பாப்கார்ன் மற்றும் பழக் கலவை துண்டுகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.உடலுக்கு கேடு விளைவிக்காத இவற்றில் நார்ச்சத்தும் மிகுந்த அளவில் உள்ளது.
 
தக தக தக்காளி: 
 
தக்காளி எப்படி தக தகவென்று பள பளக்கிறதோ அதேப்போன்று பள பளக்கும் உங்களது மேனி, தினமும் நீங்கள் தக்காளி எடுத்துக்கொள்பவராக இருந்தால்! ஏனெனில் தக்காளியில் அந்த அளவிற்கு நார்ச்சத்து மிகுந்துள்ளது.நார்ச்சத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடைமுறையில் சாத்தியமான எளிய வழி தினமும் (அளவோடு) தக்காளி உட்கொள்வதுதான் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 
 
படிப்படியாக அதிகரிக்கவேண்டும்: 
 
முடிவாக ஒன்று! நார்ச்சத்தில் இவ்வளவு நல்லது இருக்கிறதே என்பதற்காக அதை உடனடியாக அதிகமாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடாதீர்கள்.திடீரென அதிக அளவு நார்ச்சத்து உணவை அதிகம் எடுத்துக்கொள்வது வயிற்று போக்கு உள்ளிட்ட சில உபாதைகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
 
எனவே அதனை படிப்படியாக உங்களது தினசரி உணவில் அதிகரித்து, இறுதியாக உங்களது உணவு தட்டில் மேலே குறிப்பிட்ட அளவு உணவுகளை வழக்கமாக்கிக் கொண்டால் நல வாழ்வு நிச்சயம்!

Share this Story:

Follow Webdunia tamil