Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 வயதில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

40 வயதில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
, செவ்வாய், 3 மே 2011 (17:32 IST)
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.

இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.

40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறும் இந்த நிபுணர்கள் தெரிவிக்கும் மேலும் பல யோசனைகள் இங்கே:

உடற்பயிற்சி:

ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்ன பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ... இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.

பலன்கள்:

இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும்.இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.

வைட்டமின் உணவு:

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.

பயன்கள்:

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை.உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

மூளைக்கு பயிற்சி:

இணைய தளங்களிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினர், உடற் பயிற்சியை போன்று மூளைக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். புத்தகம் வாசித்தல், செஸ் விளையாடுதல், குறுக்கெழுத்துக்கான விடை காண்பது போன்ற மூளைக்கு பயிற்சி கொடுப்பதை கட்டாயம் செய்ய வேண்டும்.உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்வது கூட மூளைக்கு கொடுக்க கூடிய நல்ல பயிற்சிதான்.

பயன்கள்:

இத்தகைய பயிற்சிகள் உங்களது மூளையை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு, முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி போன்றவ்பற்றை தடுக்கிறது.

தூக்கம்:

நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம்தான் நமது உடல் தன்னை பழுது நீக்கிக்கொள்கிறது. நீங்கள் சரி வர தூங்காவிட்டால் உங்களது உடல் பழைய நிலைக்கு திரும்ப போதுமான கால அவகாசம் கிடைக்காது.எனவே தூக்கம் கட்டாயம் வேண்டும்.

நார்சத்து உணவு:

உங்களது அன்றாட உணவில் நார்ச்சத்து உணவு கட்டாயம் இருக்க வேண்டும்.நாளொன்றுக்கு குறைந்தது 10 கிராம் நார்ச்சத்து உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இருதய நோய்ஏற்படுவதற்கான ஆபத்து 14 விழுக்காடு குறைவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் இருதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 25 விழுக்காடு வரை குறைவதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிப்பதால் நார்ச்சத்து உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil