Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்
, செவ்வாய், 8 நவம்பர் 2011 (12:24 IST)
மருத்துவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள மருத்துவப் பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக தற்போது நாடெங்கும் புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ் ரே, சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை என்று மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் எழுதிக் கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் மருத்துவர்களுக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் விகிதாசாரமாக 'கமிஷன்' அளிப்பதான விவகாரம் இருந்து வருகிறது.

இது தவிர, மருந்துக் கடைகள், பன்னாட்டு உள்நாட்டு மருந்து உற்பத்க்டி நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதற்கு பல்வேறு வகையில் 'ஊக்கத் தொகை'களை அளித்து வருவதும் தொடர்ந்த ஒரு வழக்கமாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு மருத்துவர் தங்களது ஆலோசனைத் தொகைகளைக் குறைவாகப் பெற்றால் அவரிடம் கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இன்று ஆலோசனைத் தொகையைக் குறைக்கும் ஒரு மருத்துவர் அதன் இழப்பை பரிசோதனை மையங்களின் கமிஷன் மூலம் ஈடுகட்டிக் கொள்கின்றனர்.

மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுகளை நம்பியே நடைபெறுகின்றது என்பது போய் மருத்துவப் பரிசோதனை மையங்களை நம்பியே மருத்துவர்களின் வருவாய் உள்ளது என்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்த கமிஷன் தொகைகள் மருத்துவர்களுக்கு மாதாந்திராமாக கொடுக்கப்படுவதும் உண்டு. அல்லது ஒவ்வொரு டெஸ்ட் பரிந்துரைக்கும் ஏற்ப தொகைகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதும் வழக்கமாகியுள்ளது.

உதாரணமாக ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார் என்றால் அருகிலிருக்கும் மருத்துவப்பரிசோதனை மையத்தில் நாம் சி.டி.ஸ்கேன் எடுத்துக் கொண்டால் அந்த மருத்துவருக்கு அதனடைப்படையில் ரூ.1000 கமிஷன்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒரு தொகை, யூரின், ரத்தப் பரிசோதனை மற்றும் மலப்பரிசோதனை என்று பரிசோதனைக்குத் தக்க கமிஷன் தொகையை மருத்துவர்கள் பெற்று வருகின்றனர்.

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் அதாவது காது, மூக்கு, தொண்டை நிபுணர், சிறுநீரக நிபுணர், கிட்னி சிறப்பு மருத்துவர், நரம்பியல் நிபுணர் என்று ஒரு பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மாதமொன்றுக்கு இது போண்று டெஸ்ட்களை எழுதிக் கொடுப்பதன் மூலமே ரூ.1 லட்சம் வரை வருவாய் பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மையங்களிலிருந்து 'அட்வான்ஸ்' பெறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து குடும்பத்துடன் துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து என்று அனுப்பி வைக்கும் பழக்கமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

அனைத்து பிரபல நிறுவனங்களின் பிரபல பிராண்டுகளும் இம்மாதிரி மருத்துவர்களை 'சிறப்புக் கவனிப்பு' செய்து இன்று பெரிய பிராண்டுகளாக வளர்ந்தவையே.

மொத்தத்தில் பாதிக்கப்படுவது யார்? அப்பாவி நோயாளிகள்! கல்விக்கொள்ளை, மருத்துவக் கொள்ளை ஆகியவற்றை எந்த ஒரு அரசு தடுக்கிறதோ அந்த அரசுதான் சிறந்த அரசு.

இவ்விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எவ்வளவு பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் புறப்பட்டாலும் அதனால் மக்களுக்கு எந்த விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil