Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2011 (13:30 IST)
உடல் சுத்தம் பேணி, தினமும் குளிப்பது அவசியம். அதிக சூடான தண்ணீரையும் அதிகக் குளிர்ந்த நீரையும் உபயோகித்தல் கூடாது. குளம், குட்டை, குளிக்கும் தொட்டி போன்றவைகளில் நீராடுவதை விட நல்ல நீரை முகந்து குளித்தல் நல்லது.

முலைகளில் ஏற்படும் சுரப்பு நீர் காய்ந்து பெருக்குகளாக முலைக்காம்பில் இருக்குமாயின் தேய்த்துக் குளித்து அகற்றி விடுதல் நல்லது.

கர்ப்பிணி தன் பல்சுத்தத்தையும் பேணுதல் வேண்டும். பற்களைப் பேணாது சொத்தையாகமாற விட்டு விட்டால் பற்களின் வேர்களில் சீழ்பிடித்து கர்ப்பக் கன்னி போன்ற இன்னல்களுக்கு ஆளாகலாம். இதனைத் தவிர்க்க காலை, இரவு இரு வேளைகளிலும் பற்களைத் துலக்கி உண்ட பின்னரெல்லாம் வாய் கொப்புளித்துப் பற்களைப் பேணுதல் வேண்டும். பற்களுக்குத் தேவையான உயிரூட்டச்சத்துக்கள் அடங்கிய சத்துணவு அருந்தியும் குழிவிழுந்த பற்களை அடைத்தும், சொத்தைப் பற்களை மருத்துவரிடம் காட்டியும் சிகிச்சை பெற முடியும்.

பட்டுப்புடவைகளையும், கம்பளி வகைகளையும் அணிவது கர்ப்பிணிக்கு நல்லதல்ல. கனமில்லாத நூற்புடவைகள், மெல்லிய உள்ளாடைகள் ஆகியவற்றை உடுத்துவதே உகந்தது. மிகக் குளிரில் வெளியே செல்ல வேண்டி நேர்ந்தால், மட்டுமே கம்பளி உடைகளை அணிதல் வேண்டும். `பிரா' மார்பகங்களைத் தூக்கிப் பிடித்துப் பாரத்தை குறைப்பைவைகளாக இருக்க வேண்டுமேயன்றி மார்பகங்களை இறுக்குபவைகளாக இருத்தலாகாது. கையின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும், இறுக்கமான சட்டையும் அணியக் கூடாது. தொப்புளைச் சுற்றி உள் பாவாடையோ அல்லது சேலையையோ இறுக்கக்கட்டக் கூடாது.

கர்ப்பிணிகள் மென்மையான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். உயர்ந்த குதிகால் செருப்பு அணிவது கெடுதலாகும்.

உண்ணும் உணவு, குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். சத்துள்ளதாக இருக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளையும், கனி வகைகளையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண் உடலுறவு கொள்வது என்பது நித்தம் நித்தம் என்று இல்லாமல், உடல் நிலைக்கும் மனநிலைக்கும் ஒத்தவாறு செய்வது இன்பம் பயக்கும். கூடிய வரையில் கர்ப்பம் தரித்த நிலையில் ஆறாவது வாரம் முதல் பன்னிரெண்டாம் வாரம் வரை மிக்க எச்சரிக்கையுடனும் மிதமான அளவோடும் உடலுறவு கொள்வது நல்லது. கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கருவுற்றிருக்கும்போது, உதிரப்போக்கு சிறிது இருந்தாலும் முந்தைய கர்ப்பங்களின் போது கருச்சிதைவுகள், குறைப்பேறுகள் முதலியன ஏற்பட்டிருந்தாலும் உடலுறவை அறவே தவிர்க்க வேண்டும்.

கர்ப்பமுற்ற உடனேயே வேலை செய்வது தவறு என்று நினைப்பது கர்ப்பிணிக்கு நல்லதல்ல. ஓய்ந்து சோம்பி உறங்காது, ஊக்கம் பெருக உழைப்பதில் தவறே இல்லை. செய்யும் தொழிலில் மனமது ஒன்றி மகிழ்ச்சியுடன் இருப்பவர்களை மசக்கை நோயும் துன்புறுத்துவதில்லை. பல மாடிகள் கொண்ட அலுவலகத்தில் மேல்மாடிகளிலே வேலை செய்வது உகந்ததில்லையே என்ற தயக்கம் ஏற்படுவது இயற்கையே.

இந்தத் தயக்கம் வேண்டுவதில்லை. கருப்பையில் குழந்தை வளரும்போது அது ஒரு நீர் நிறைந்த பந்தின் மத்தியில் வளருவது போன்றல்லவா வளருகின்றது. மேலும் இக்கரு மெல்லிய, பலம் வாய்ந்த திரையில் மூடப்பட்டு வெளி உலகத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றது. பனி நீர்த் திரவத்தோடு சூழப்பட்டிருப்பதால் சிறிய வெளிப்புற அதிர்ச்சிகள் சாதாரணமாகக் கருவைப் பாதிப்பதில்லை.

அதனால் அலுவலகப் பணியில் ஈடுபட்டுள்ள கர்ப்பமுற்ற பெண்கள் தன் வேலையைத் தவிர்க்க வேண்டியதில்லை. செய்கின்ற தொழில் மூலம் இரசாயனத் தீமைகள் இருந்தால் கருவுற்றிருக்கும் காலத்தில் அந்தத் தொழிலைச் செய்யாதிருப்பது நலம். எக்ஸ்ரே துறையில் வேலை பார்ப்பதும், காலால் ஓட்டப்படும் தையல் இயந்திரத்தை நாள் முழுவதும் ஓய்வின்றிச் சுழற்றுவதும், அதிகம் பளுவைத் தூக்குவதும் போன்ற கடின வேலைகள் கர்ப்ப காலத்தில் கூடாது. சரீர உழைப்பு சற்றும் இல்லாத சூழ்நிலையில் கர்ப்பிணிகள், காலை மாலை இருநேரமும் சற்றுக் காற்றாட வெளியே உலவச் செல்லுதல் நலம்.

ஓய்வின்றி ஓய்ச்சலின்றி அலுத்துப் போகுமளவு வேலை செய்யலாகாது. கர்ப்பிணி குறைந்தது எட்டு மணிநேரமாவது தூங்க வேண்டும். ஆனால் அலுவலகங்களில் பணியேற்றிருக்கும் பெண்களுக்கு இத்தகைய ஓய்வு கிடைக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். தான் சார்ந்த குடும்பம் வற்றாமல் தழைக்க ஒரு குழந்தையை வயிற்றிலே சுமந்து தன் உயிரையும் உதிரத்தையும் ஈந்து ஒரு கர்ப்பிணி வளர்த்து வந்தாலும், அலுவலுகத்திற்குப் போகும் முன்வும், சென்று வந்த பின்பும் ஒரு ஆடவனுக்குத் தரப்படும் ஓய்வு ஒரு பெண்ணுக்குத் தரப்படுகிறதா என்பதைத் சிந்தித்து செயல்பட வேண்டும்.

துவைப்பதும், துலக்குவதும், ஆக்குவதும், படைப்பதும் எனப் பலவகையான பணிகளும் பெண்ணுக்குத் தொழிலாக பாவிக்கப்படும். இந்நாட்டில் கர்ப்பிணியான ஒரு பெண் காலை முதல் மாலை வரை அலுவல் பார்த்துவிட்டு வந்து அடுப்படியில் கருகும் போதும் ஒன்றுக் குடித்தனத்தில் ஒற்றைக் குழாயில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க முற்றுகையிட்டு மோதும் போதும் ஆண்மகன், ஆனந்தமாய்ச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்க வில்லை. எனச் சாடுவது எவ்வளவு பண்பற்ற ஆதிக்கம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சோர்வைத் தரும் அதிக வேலை அல்லலை உண்டாக்கும். என்பதனை அவன் கணவனும், மாமியாரும், நாத்தனாரும் மாமனாரும் உணர்ந்து கர்ப்பிணிக்கு உரிய ஓய்வினைத் தர வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும். சூழ்நிலை இடந்தருமாயின் மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பது மதியுடைய செயலாகும்.

நம் பாட்டிமார்கள், மல்லாந்து படுக்காதே என்று கூறியும் ஒரு புறம் சாய்ந்து படுத்திருந்த பின்னர் மறுபுறம் திரும்பிப் படுக்க வேண்டுமாயின் எழுந்து உட்கார்ந்த பின்னர் மறுபுறம் திரும்பிப்படுக்க வேண்டுமேயன்றி, தூக்கத்திலே புரண்டு படுத்தால் கருக்குழந்தையின் கழுத்திலே கொடி சுற்றி குழந்தைக்குத் தீங்கு விளையும் என்று கூறியும் அச்சுறுத்துவது ஆதாரமற்றதாகும். மல்லாந்து படுக்கும் போது வளர்ந்து பெரியதாகி வரும் கருப்பை, தாயின் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய இரத்தக் குழாய்களை அழுத்துமாதலால் தாய்க்கு மூச்சு திணறல் போன்ற அசௌகரியம் ஏற்படலாம். எனவே ஒருக்களித்துப் படுப்பது நலம். அதற்காகத் தூக்கத்தில் புரண்டு படுக்கக்கூடாது என்று கூறுவது சரியல்ல.

கர்ப்பிணிப் பெண்கள் பேறுகாலத்திற்கு ஓரிரண்டு வாரங்கள் முன்பு வரை தங்களால் இயன்ற அளவு வேலை செய்தல் நலமே. ஆனால் காலிலே வீக்கம், நீரிலே உப்பு, இரத்தக் கொதிப்பு, யோனியிலே, உதிரக் கசிவு போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாகப் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

ஓய்வு என்ற பெயரிலே நச்சுக் காற்றும், இருட்டும் நிரம்பிய திரையரங்கங்களிலே வாரத்திலே பல நாட்கள் மணிக்கணக்காக அடைபட்டுக்கிடப்பது நல்லதல்ல. மன உல்லாசத்திற்காக ஓரிருமுறை படக்காட்சிகளுக்குச் செல்லுவது தவறில்லையென்றாலும் திரைக்காட்சிப் பைத்தியமாகக் கட்டுண்டு கிடந்து, மின்விசிறி சுழன்றாலும் அசதியுடன் வெளியேறும் நிலையைவிட, நெருக்கமான கூட்டங்களில் திணறி அல்லலுறுவதை விட, தூய காற்றோட்டமுள்ள கடற்கரைகள், வயலோரங்கள், தோப்புக்கள், பூங்காக்கள் போன்ற வெளியிடங்களுக்குச் செல்வது நல்லது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?