Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய்ப்பாலின் மகத்துவம்

-டாக்டர் ரமாதேவி

தாய்ப்பாலின் மகத்துவம்
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:40 IST)
webdunia photoWD
குழந்தைகளுக்கு இயற்கை அளிக்கும் கொடை தாய்ப்பால் என்றால் மிகையில்லை. தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.

ஒரு பெண் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றிருந்தால், குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும். சிசேரியனாக இருந்தால் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம்.

குழந்தை பிறந்தவுடனேயே உடல் ரீதியாக பால் அருந்த தயாராகி விடுகிறது. குழந்தை தூங்கிவிட்டால் அதனை பால் அருந்தச் செய்வது கடினம்.

தாய்ப்பாலுக்கு முன்பு வேறு பொருட்களைத் தரலாமா?

தாய்ப்பால் தரத் துவங்கும் முன் கண்டிப்பாக தேன், சர்க்கரைத் தண்ணீர் போன்ற எதையும் தரக் கூடாது. இவை குழந்தைகளுக்கு நல்லதல்ல.

எத்தனை நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்?

குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் வரை, இரவும் பகலும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாயிடம் போதிய அளவு பால் இருக்குமானால், வேறு பாலையோ, தண்ணீரையோ தரத் தேவையில்லை.

கொலஸ்டிரம் என்றால் என்ன?

பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு முதலில் சுரக்கும் பாலுக்கு கொலஸ்டிரம் என்று பெயர். இது சுமார் 10 முதல் 40 மி.லி. அளவு இருக்கும். இந்தப்பால் 2 முதல் 4 நாட்களுக்கு சுரக்கும். இதில் புரதச்சத்தும், இம்யுனோ குளோபின்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஊட்டச்சத்தும் அதிக அளவில் உள்ளது.

குழந்தைகளுக்கு எந்த அளவு இடைவெளியில் தாய்ப்பால் தரலாம்?

குழந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம். குழந்தை அழும்போதெல்லாம் பால் தர வேண்டும். இது குழந்தைக்கு குழந்தை வேறுபடும். சிலருக்கு அரைமணி நேரத்திற்கு ஒரு முறையும், சிலருக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் தர வேண்டியிருக்கும்.


எத்தனை காலத்திற்கு தாய்ப்பால் தரவேண்டும்?

முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டும் தந்தால் போதும். அதற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் வரை, இணை உணவுடன் தாய்ப்பாலை தரவேண்டும்.

தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமா என்பதை எப்படி கணிப்பது?

பால் அருந்திய பின் குழந்தை ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ தூங்கும். ஒரு நாளில் 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கும். குழந்தை சரியான எடையில் இருக்கும்.

தாய்ப்பாலைத் தவிர குழந்தைக்கு வேறு பாலை ஃபீடிங் பாட்டிலில் ஏன் தரக்கூடாது?

வேறு பாலை ஃபீடிங் பாட்டிலில் தரும்போது குழந்தைக்கு பாலை சப்புவதில் குழப்பம் ஏற்படுகிறது. பாட்டில் நிப்பிளை சப்புவது எளிதாக இருப்பதால் தாய்ப்பால் அருந்த குழந்தை சோம்பல் படக்கூடும்.

பால் குடித்த குழந்தையை எந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்?

குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது காற்றையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. எனவே, பால் குடித்த குழந்தையை தாய் தோளில் சாய்த்துக் கொண்டு மெதுவாக பின்புறம் தட்டிக்கொடுக்க வேண்டும். இதனால் காற்று வெளியேறி விடும்.

தாய்ப்பால் தருவதால் தாய்க்கு என்ன நன்மை?

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதால் தாய்க்கு பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு கட்டுப்படுகிறது. பேறு காலத்தில் தாய் உடலில் சேரும் கொழுப்பு, பல்வேறு ஹார்மோன்களால் எரிக்கப்படுகிறது. தாய்ப்பால் தருவது மார்பகம் மற்றும் சினை முட்டையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

இந்த ஆண்டு தாய்ப்பால் வாரத்தின் மையப்பொருள் என்ன?

வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு இந்த ஆண்டு தாய்ப்பால் வாரத்தின் மையப்பொருள் `தாயின் ஆதரவு-தங்கத்தை நோக்கி' என்பதாகும்.

(பேராசியர் ரமாதேவி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையின் முன்னாள் இயக்குனர்).


Share this Story:

Follow Webdunia tamil