Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை

குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை
, வியாழன், 25 ஜூன் 2009 (10:46 IST)
தமிழக அரசின் இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் மொ‌த்த‌ம் 3820 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது எ‌ன்று த‌மிழக அரசு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இருதய நோய் அறுவை சிகிச்சைக்காக, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையை களைந்து அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் அறுவை செய்து கொள்ள ஏதுவாக "இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம்'' முலமைச்சர் கருணாநிதியால் 21.11.2007 அன்று தொடங்கப்பட்டது. இலவச அறுவை சிகிச்சை செய்துகொள்ள பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்

இத்திட்டத்தில் இதுவரை 24 தனியார் மருத்துவமனைகள் இருதய அறுவை சிகிச்சை செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இளம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே 70 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வந்தது. தற்போது இந்த அதிகபட்ச தொகை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 653 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இளம்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, "பள்ளி சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்'' முதல்-அமைச்சர் கருணாநிதியின் 85-வது பிறந்த நாளான, 03.06.2008 அன்று சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், நல்வாழ்வுத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இருதய அறுவை சிகிச்சைக்குத் தகுதியான மாணவர்களை கண்டறிவதற்காக, தமிழகம் முழுவதும் இருதய பாதிப்புள்ள 9,370 மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜுன் மாதம் முழுவதும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது.

இதில் 2,396 மாணவர்கள் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இந்த மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும், அரசு பொது மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அதில், இருதய அறுவை சிகிச்சைக்கு தகுதியான 1,855 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். இவர்களில் இதுவரை 1,610 பள்ளி மாணவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

2 திட்டங்களிலும் இதுவரை 2263 குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 13 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 1300 குழந்தைகளுக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 257 குழந்தைகளுக்கும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 3,820 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், இதுவரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறார்கள் குறித்தும், முதலமைச்சர் கருணாநிதியிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நேரில் விளக்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil