நட்பும் சனிப் பெயர்ச்சியும்!
ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன்
இந்த ஆண்டு நட்புத் தினமாக கொண்டாடப்படும் ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சியும் நிகழ்கிறது.
சனிப்பெயர்ச்சியின் காரணமாக நட்புறவில் ஏதேனும் தாக்கம் இருக்குமா? அவ்வாறு இருந்தால் என்ன செய்வது? எது பரிகாரம்? என்று கேட்டதற்கு ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் அளித்த விளக்கம் :
சனியே நட்புக்குரிய கிரகமாகும். சகிப்புத் தன்மை, கூட்டு முயற்சி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை கொடுக்கும் நல்ல கிரகம் சனி.
சனியின் நட்சத்திரம், அதன் ராசி, சனியின் லக்னம், சனியின் எண்ணான எட்டு, இவற்றில் பிறந்தவர்கள், பொருளாதார ரீதியிலும், பழகுதிறன், பணித்திறன், பணியாற்றும் வகை ஆகியவற்றில் குறைவாக உள்ளவர்களை ஒதுக்கித் தள்ளாமல் அவர்களிடம் விருப்பத்துடன் பேசி தங்களுடன் இணைத்து உயர்த்துவார்கள்.
இனத்தாலோ, மதத்தாலோ, தோற்றத்தையோ அடிப்படையாக வைத்து தங்களிடம் திறன் இருந்தும் அங்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்படாமல் ஒதுக்கப்பட்டால் உடனடியாக வெளியேறி, தனக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களையும் அதில் இணைத்து ஒரு சவாலாக இருப்பார்கள். சனியின் ஆதிக்கத்தினால் அவர்களை பாதித்தவர்களே வியக்கும் அளவிற்கு பிரம்மிக்கும் நிலைக்கு உயர்வார்கள்.
நட்பு என்பதே மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழ்வுறும் ஒரு மனப்பான்மைதான். இந்த மீள் பார்வையை அளிக்கும் கிரகமே சனிதான். நன்றி மறவாமை எனும் பெரும் குணத்திற்குரிய கிரகம் சனி பகவான்தான்.
ஓரிரு வார்த்தைகளால் கோபப்பட்டு அதனால் நட்பு முறிந்து போனவர்களும், பழைய நல்ல நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து மீண்டும் அந்த நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட மன்னிப்பு குணத்தை அளிப்பதும் சனிதான்.
ஈகை குணம் கொண்டோரும் சனி ஆதிக்கத்தில் உள்ளவர்கள்தான். இவர்கள் தங்களுக்கு ஒரு கவளம் சோறு இருந்தால் கூட அதனை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சனியின் தாக்கம் கொண்டவர்கள் பசிக்கு அஞ்சமாட்டார்கள்.
புராண அடிப்படையில் சூரியனின் மகன் சனி. சூரியப் புத்திரனே கர்ணன். கர்ணனைப் போல நட்பிற்கும், ஈகைக்கும் ஈடானவர்கள் இன்றளவும் பிறந்ததில்லையே.
இன்று சந்திரனின் ராசியான கடக ராசியில் இருந்து சூரியனின் சிம்ம ராசிக்குள் சனி பகவான் அடியெடுத்து வைக்கிறார்.
இதனால் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்வர்.
நீண்ட காலம் பார்க்க முடியாமலும், பேச முடியாமலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், சாட்டிலும் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்தவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.
கருத்து வேறுபாடு, அகங்காரம், அவசரப்பட்டு வார்த்தைகளைப் பேசியதன் விளைவு, அவசர முடிவு, அடுத்தவர் பேச்சை நம்பி தவறாக முடிவெடுத்தவர்கள், சந்தேகத்தால் பிரிந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் தவறான வழிகாட்டுதலால் பிரிந்திருக்கும் காதலர்கள் என எல்லோரும் ஒன்று சேர்வார்கள். தங்கள் தவறை உணர்வார்கள். தனியாக இருவரும் உட்கார்ந்து மனம்விட்டு பேசி தெரிந்தோ தெரியாமலோ நிகழ்ந்துவிட்ட செயலுக்கு வருத்தம் கூறி ஒருவரை ஒருவர் நெருக்கமாகக் காதலிக்கும் நிலை உருவாகும்.
பல காதலர்கள் இனி கணவன் - மனைவியாவார்கள். சனி சூரியன் வீட்டிற்கு வருவதால் குடும்ப உறவில் ஈடுபட்டு பிறகு பிரிந்துவிட்டவர்கள் ஒன்றிணைவார்கள். தோற்றம், வசதி வாய்ப்பு, செல்வாக்கு, பட்டம், பதவி இவற்றை அடிப்படையாக வைத்து காதலித்தவர்கள் இதற்கு மேல் ஆத்மார்த்தமான அன்புடன் பழகுவார்கள்.
காதலர்களின் எண்ணிக்கை இனி உயரும். உலகெங்கும் காதலின் வலிமை கூடும். இயற்கைக்கு முரண்பட்ட காதல் பெருகும் சூழலும் உருவாகும்.