Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நட்பின் இலக்கணம்!

க. திருப்பதி

நட்பின் இலக்கணம்!

Webdunia

, திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (12:31 IST)
'உடுக்கை இழநதவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன. ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினைப் பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே 'நண்பர்கள் தினம்'.

வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடரும் இந்த தோழமைதான்.

ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக் கிழமையும் நட்பு போற்றும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது.

காதலர் தினத்தை கணிசமாக எதிர்க்கும் நம கலாச்சாரக் காவலர்கள், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.

நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. பேசிப் பழகி பிரிந்து வருந்த வேண்டும் என்றும் இல்லை. இதனை நம் புராண கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்! நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைக் கூறலாம். அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நட்பின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எல்லோருக்கும் பாடாமாய் அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.

நமது இதிகாசம் கூறும் நட்பு : கர்ணன் - துரியோதனன். தோழமை என்ற ஒரே வலிமையான ஆயுதத்திற்காக, சொந்தம் என்று தெரிந்தும் பாண்டவர்களை போரில் எதிர்த்து நின்றான் கர்ணன்.

ஒருமுறை துரியோதனின் மனைவியும், கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனின் மனைவி அணிந்திருந்த முத்துமாலையை கர்ணன் பற்றி இழுக்க அது அறுந்து சிதறி கீழே விழுந்தது.

அத்தருணம் அங்கே துரியோதனன் வர, நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து விட்டோமோ என்ற பதைபதைப்பில் கர்ணன் நிற்க, செய்வதறியாது திகைத்து நின்றாள் துரியோதனன் மனைவி.

தனது நண்பனை சிறிதும் சந்தேகப்படாத துரியோதனன், சிதறிய முத்துக்களை 'எடுக்கவோ, கோர்க்கவோ' என தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்,என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.

ஆனால்...

ஆண்-பெண் நட்பு என்றால் அங்கு காதல் புகுந்து விடுகிறது. இல்லையேல் காமம் தலைதூக்குகிறது என்ற அவலமான சமூகப் பார்வை இன்றைய இளைய சமுதாயம் மீது படர்ந்துள்ளது.

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு

என்றார் புதுக்கவிஞர் அறிவுமதி.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.

இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.

எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்! வாருங்கள் நண்பர்களே!

ஆகஸ்ட் 5 நண்பர்கள் தினம்!

Share this Story:

Follow Webdunia tamil