Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் ரூ.7,500 கோடி முதலீடு: ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர்

இந்தியாவில் ரூ.7,500 கோடி முதலீடு: ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர்
, வியாழன், 29 அக்டோபர் 2015 (12:01 IST)
இந்தியாவில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின்  வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் ஆன்ட்ரூ ரோப் தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து ஆன்ட்ரூ ரோப் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஆஸ்திரேலியா நாட்டின் மொத்த வருவாயில் 75 சதவீதம், சேவை துறை மூலமாகவே வருகிறது. உலக அளவில் சேவை துறையில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா 3 ஆவது இடத்தில் உள்ளது. 
 
இந்தியா மற்றும் சீனாவில் 35 வயதுக்கு உட்பட்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் 60 கோடி பேர் உள்ளனர். இவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக உரிய பயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை தொடங்க உள்ளோம்.
 
இதற்காக இந்தியாவில் 450 முதலீட்டாளர்கள் மூலம் ரூ.7,500 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் தயார் நிலையில் உள்ளன.
 
இதன் மூலம் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மேலாண்மை, மீன்பிடித்தல், பால் உற்பத்தி, விளையாட்டு, அடிப்படை கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் சேவை துறையில் ஈடுபட உள்ளோம்.
 
இந்த துறைகளுக்கான பல்வேறு வளங்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளன. தொடர்ந்து பால் மற்றும் இறால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடைமுறைகளையும் தொடங்க உள்ளோம்.
 
சென்னை ஐஐடி ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களுடன் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மதிப்பதுடன் எதிர்காலத்திலும் இந்த கூட்டாண்மைகள் தொடர்வதை விரும்புகிறோம்.
 
குறிப்பாக தமிழகத்தில் கல்வி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புகிறோம். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
 
தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்ய உள்ளன என்பது தெரியவில்லை.
 
அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்கும் விஷயத்தில், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து அனுமதி தருவோம். இவ்வாறு ஆன்ட்ரூ ரோப் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil