Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டுக்கடன் திட்டங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் -ரிசர்வ் வங்கி

வீட்டுக்கடன் திட்டங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் -ரிசர்வ் வங்கி
, சனி, 28 செப்டம்பர் 2013 (16:38 IST)
FILE
வீட்டுக்கடன் வழங்குவதில் மர்மங்களுக்கு இனி இடமில்லை. ஜீரோ சதவீத வட்டி சலுகை கடன் திட்டங்களுக்கு தடை விதித்தது போல ரிசர்வ் வங்கி, வீட்டுக்கடன் விஷயத்திலும் கைவைத்துள்ளது.

வீட்டுக்கடன் சலுகை திட்டங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும்; 80, 20 சலுகை திட்டம் போன்றவற்றில் எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தடை போட்டுள்ளது எந்த வகையில் வீட்டுக்கடன் விஷயத்தில் தெளிவை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்.

எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள் தவிர தனியார் வங்கிகள் பலவும் வீட்டுக்கடன் விஷயத்தில் தனி பாதை அமைத்து ‘தூள்’ கிளப்பி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு பல வகையில் சலுகை தருவது போல தந்து, ‘ஹிட்டன் அஜென்டா’ மூலம் பலவகையில் வட்டியை தாளித்து விடுகின்றன சில தனியார் வங்கிகள்.

வட்டி தாளிப்பது தெரிந்தாலும், பொது மக்களுக்கு கடன் கிடைத்தால் போதும்; புது வீட்டில் குடியேறினால் போதும் என்று பேசாமல் இருந்து விடுகின்றனர். மாதாமாதம் வீட்டுக்கடன் தவணை கட்டும்போதுதான் கையை சுடுவது தெரிகிறது. இருந்தாலும், வேறு வழியில்லாமல் கடனை கட்டி வருகின்றனர்.

அதிலும் சில தனியார் வங்கிகள்,..

அதிலும் சில தனியார் வங்கிகள், 80, 20 சலுகை திட்டம் என்ற பெயரில் 15 ஆண்டு தவணை திட்டத்தில் சலுகை தருகிறது. இந்த திட்டத்தின் படி, ஒழுங்காக தவணையை கட்டினால், தவணை காலத்தை மாற்றாமல் இருந்தால், வட்டி வீதத்தை மாற்றாமல் இருந்தால் கடைசி 12 தவணை காலத்துக்கு தவணை கட்ட வேண்டாம். இப்படி சில சலுகை திட்டங்களை தனியார் வங்கிகள் வைத்துள்ளன. ஆனால், இதில் உண்மையாக உள்ள மர்மம் பலருக்கும் புரிவதில்லை. இதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்து, தடாலடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது மக்களுக்கு வீட்டுக்கடன் தரும்போது அதன் உண்மையான அம்சங்களை, கட்டுப்பாடுகளை, வட்டி வீதத்தை சொல்ல வேண்டும்; எதையும் மறைக்க கூடாது; பல நாடுகளில் உள்ளது போல ஒளிவுமறைவில்லாத நடவடிக்கையில் வங்கிகள் இயங்க வேண்டும். மறைத்து சொல்லியோ, சொல்லாமலோ வட்டியை பறிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெளிவாக இருக்கிறார்.

அந்த வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து, இந்த 80 , 20 சலுகை திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதுபோல, சில குறிப்பிட்ட சதவீத ரொக்கம் திரும்ப தரும் திட்டங்களையும் அவர் ரத்து செய்துள்ளார். ஒரு பக்கம் ரொக்க சலுகை தருவதாக கூறிவிட்டு இன்னொரு பக்கம் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் வட்டி வசூலிக்கும் வங்கிகள் நடவடிக்கை சரியல்ல; அது வாடிக்கையாளர், வங்கி இடையே ஆரோக்கியமான உறவை வளர்க்காது என்று நம்புகிறார் கவர்னர். அதனால் தான் அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும், ரியல் எஸ்டேட் முறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அது வரும் முன், வீட்டுக்கடன் முறையை சீராக்க ரிசர்வ் வங்கி முனைப்பு காட்டி வருகிறது. அப்படி செய்து விட்டால், வெளிப்படையான ரியல் எஸ்டேட் வர்த்தகம் நடக்க வங்கிகள் ஒத்துழைக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.

Share this Story:

Follow Webdunia tamil