Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவீன மோட்டார் களையெடுப்பு இயந்திரம் அறிமுகம்

நவீன மோட்டார் களையெடுப்பு இயந்திரம் அறிமுகம்
திருச்சி: , சனி, 25 ஜூலை 2009 (15:01 IST)
மாணவர் ஆராய்ச்சி திட்டம் மூலமாக உருவாக்கப்படும் நவீன மோட்டார் களையெடுப்பு இயந்திரம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி முதல்வர் தாஜீதீன் தெரிவித்தார்.

குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி முதல்வர் தாஜீதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள ஒரே வேளாண் பொறியியல் கல்லூரியான, இங்கு பி.டெக்.அக்ரிகல்சுரல் என்ஜினீயரிங் என்ற 4 ஆண்டு படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய கவுன்சிலிங் மூலம் 27 மாணவிகள் மற்றும் 23 மாணவர்கள் சேர்க்கப்பட்டு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கி விட்டன.

இங்கு படிப்பை முடிக்கும் முன்பே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வளாக தேர்வு மூலமாக மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

வருகின்ற ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி நெல் அறுவடை இயந்திர உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக வளாகத்தேர்வு நடைபெற உள்ளது.

உலக வங்கியின் நீர்வள நிலவளத்திட்டம் மூலமாக பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு செம்மைநெல் சாகுபடிக்கான விதைகள், களையெடுக்கும் கருவிகள், உரங்களை இலவசமாக அளித்து வருகிறோம்.

இங்கு செயல்படும் மாணவர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக களையெடுக்கும் கோனா லீடர் இயந்திரத்தை மோட்டார் என்ஜின் மூலமாக இயக்கும் நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளோம்.

இந்த இயந்திரம் மூலம் நெல், பருத்தி, மக்காசோளம், மரவள்ளிகிழங்கு ஆகிய பயிர்களின் சாகுபடியில் வயல்களில் உள்ள களைகளை விவசாயிகள் எளிதில் நீக்க முடியும். இந்த நவீன இயந்திரம் அடுத்த சிலமாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும்.

பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுகிற சீரக சம்பா ரக நெல் மற்றும் ஆடுதுறை 43 ரக நெல்லை ஒட்டுசேர்ப்பு முறையில் இணைத்து சுவையுடன் கூடிய சன்னரக நெல்லை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 32 பல்நோக்கு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் 44 இணைப்பு ஆராய்ச்சி மையங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபின் புதிய நெல் ரகம் அறிமுகப்படுத்தப்படும்.

வாழைப்பயிரை 20 டிகிரி சென்டிகிரேடு வரை குறைந்த வெப்பநிலையில் கெடாமல் சேமித்து வைக்கும் குளிர்பதன வசதி இங்கு உள்ளது. வணிக ரீதியாக தரமான சிப்ஸ்களை தயாரிக்கும் முறைகள், தக்காளி, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் ஜாம்,ஜெல்லி, ஊறுகாய் ஆகியவற்றை குளிர்பதன முறையில் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil