Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயல்நாடுகளுக்கு மாதிரி பொருட்கள் கொண்டு செல்ல...

அயல்நாடுகளுக்கு மாதிரி பொருட்கள் கொண்டு செல்ல...
சென்னை: , புதன், 12 ஆகஸ்ட் 2009 (17:28 IST)
அயல்நாடுகளில் நடைபெறும் கண்காட்சி, அயல்நாட்டு வர்த்தகர்களுக்கு காண்பிக்க, சுங்கவரி செலுத்தாமல் ஏ.டி.ஏ.கார்நெட் ஆவணத்தை வாங்கி அயல்நாடுகளுக்கு மாதிரி (சாம்பிள்) பொருட்களை கொண்டு போகலாம் என்று மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரிய கமிஷனர் பி.எஸ்.புருதி கூறினார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் அயல்நாடுகளுக்கு சுங்கவரி செலுத்தாமல் மாதிரி பொருட்களை எடுத்துச்செல்வது எப்படி?'' என்பது பற்றிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில், மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரிய கமிஷனர் பி.எஸ்.புருதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், தங்களது தயாரிப்பின் மாதிரிகளை அயல்நாட்டுகளுக்கு எடுத்துச் சென்று வர்த்தகர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் காண்பித்து விளக்கி கூறுவார்கள்.

அயல்நாட்டு வர்த்தக கண்காட்சியிலும் மாதிரிகளை இடம் பெறச்செய்வார்கள். இதற்காக மாதிரி பொருட்களை எடுத்துச்செல்லும் ஒவ்வொரு முறையும் சுங்கவரி விதிக்கப்படுகிறது.

இதுபோல சினிமா துறையினர் சினிமா கேமரா மற்றும் உபகரணங்களை எடுத்துச் செல்லும்போதும், கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், விளையாட்டு வீரர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் தங்களது சொந்த உபயோகத்திற்கு தேவைப்படும் சாதனங்களை எடுத்துச்செல்லும் ஒவ்வொரு முறையும் சுங்கவரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அதிக பணம் செலவாகும்.

எனவே, ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி பொருட்களுக்கு தற்காலிக விசா போல ஏ.டி.ஏ.கார்நெட் என்ற ஆவணம் வழங்கப்படுகிறது.

வர்த்தக நோக்கத்திற்காகவும், சொந்த பயன்பாட்டிற்காகவும் வெளிநாடுகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும்போது ஏ.டி.ஏ.கார்நெட் ஆவணம் இருந்தால் சுங்கவரி செலுத்த தேவையில்லை. பிக்கியிடம் வங்கி உத்தரவாதம் வழங்கி இந்த ஆவணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆவணத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வர்த்தகர்கள் மாதிரி சரக்குகளை கொண்டு போய்வரலாம் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil