மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர். கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுவதன் நோக்கமே இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி ஏன்?
யசோதையிடம் கிருஷ்ணன் வளர்ந்தான். பால்ய லீலைகளை கோகுலத்தில் நிகழ்த்திக் காட்டினான். உலகத்தைப் பீடித்திருந்த துன்பங்கள் விலகி, கண்ணனால் ஒளிபெற்றது. அந்தக் குழந்தை பிறந்த நாள் ஜென்மாஷ்டமி. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி. தீமையை அழித்து ஒளியூட்டிய நல்ல நாள்.
எண்ணங்களே காட்சியாகிறது இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை கிருஷ்ணர் காப்பாற்றினார். யமுனை நதிக்கரையில் காலிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார். இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.
தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர், துவாரகைக்கு மதுராபுரி மக்களுடன் குடிபெயர்ந்தார். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த போரில் தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு, தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக கிருஷ்ணர் பணிபுரிந்தார்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்து படைத்து பக்தர்கள் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
வெண்ணெய் நிவேதனம் ஏன்?
கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள் வெண்ணெய் விற்க வேண்டியதாயிற்று. கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.