Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ஊழியர் பணி நிரந்தர சிறப்புதேர்வு

அரசு ஊழியர் பணி நிரந்தர சிறப்புதேர்வு
, புதன், 21 ஜனவரி 2009 (11:44 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் அஇஅ‌திமுக ஆ‌ட்‌சி‌யி‌ன் போது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வின் இறுதி தேர்வு பட்டியல் பிப்ரவரி மாத‌ம் முதல் வெளியிடப்படுகிறது.

கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியி‌ன் போது, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தி‌ல் ஈடுப‌ட்டதா‌ல், சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களில் சுமார் 11,000 பே‌ர் தற்காலிக ஊ‌‌ழிய‌ர்களாக நியமிக்கப்பட்டனர்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இந்த தற்காலிக ஊழியர்கள், ‌த‌ற்போது தொகுப்பூதியம் பெற்று வருகிறார்கள்.

அஇஅ‌திமுக ஆ‌ட்‌சி முடி‌ந்து த‌ற்போது தி.மு.க. ஆட்சி நடைபெ‌ற்று வரு‌ம் ‌நிலை‌யி‌ல், ஊழியர்களின் எதிர்காலம் கருதி அவர்களை சிறப்புத்தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்ய‌ப்ப‌ட்டது.

முதல்கட்டமாக 4,103 பேரை பணி நிரந்தரம் செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் அண்மையில் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில், குறைந்தபட்ச தகுதி‌க்கான மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று மதுரை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌க் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களில் சில‌ர் போராட்டமு‌ம் செ‌ய்தன‌ர்.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் தங்கள் பணியில் தொடரலாம்.

காலி இடங்கள் ஏற்படும்போது சிறப்புத்தகுதி தேர்வு நடத்தப்பட்டு அனைவரும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அரசு உறுதி அளித்தது.

இதற்கிடையே, அரசு துறைகளில் புதிதாக 1,484 காலி இடங்கள் ஏற்பட்டதால் பழைய 4,103 காலி இடங்களையும் சேர்த்து இறுதி தேர்வு பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.எம்.காசிவிஸ்வநாதனிடம் கூறுகை‌யி‌ல், புதிதாக வந்துள்ள 1,484 காலி இடங்களையும் சேர்த்து மொத்தம் 5,587 பணி இடங்கள் சிறப்பு தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும். தற்காலிக ஊழியர் தேர்வில் பெற்ற மதிப்பெண், விருப்ப‌ப் பணி, இடஒதுக்கீடு, மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் பணியும் பணி இடமும் முடிவு செய்யப்படும்.

எஞ்சியுள்ள தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கலாம். அவர்களுக்கு வழக்கம் போல் தொகுப்பூதியம் வழங்கப்படும். அரசு துறையில் அடுத்து காலி இடங்கள் வரும்போது இதுபோன்று சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அனைவரும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதன்பின் அவர்கள் காலமுறை ஊதியம் பெறலாம். எனவே வேலையில் இருந்து நீக்கி விடுவார்களோ என்று யாரும் பயப்படத்தேவையில்லை எ‌‌ன்று கூ‌றினா‌ர்.

ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் பணியும், புதிதாக காலி இடங்கள் ஏற்பட்டிருப்பதால் தேர்வு பட்டியல் தயாரிக்கும் பணியும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து இறுதி தேர்வு பட்டியல் ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil