Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிட்டிஷ் கவுன்சில் சென்னையில் துவ‌ங்கு‌ம் ஆங்கிலக் கல்வி மையம்

பிரிட்டிஷ் கவுன்சில் சென்னையில் துவ‌ங்கு‌ம் ஆங்கிலக் கல்வி மையம்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (18:45 IST)
ஆங்கில மொழியில் வல்லமை பெறுவதற்கான கல்வி மையம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் விரைவில் சென்னையில் துவங்க திட்டமிட்டுள்ளது.

தொழில் மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய நலன்களுக்காக இங்கு ஆங்கில மொழி வகுப்புகள் நடைபெறும். பாடத் திட்டங்கள் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் காலக் கட்டத்திற்கான பதிவுகள் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வகுப்புகள் 4ஆம் தேதி துவங்குகின்றன.

ரெகஸ் சிட்டி சென்டரில் முதலில் 3 வகுப்பறைகளை திறக்கவுள்ளது. அண்ணாசாலையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் வளாகம் புணரமைக்கப்பட்டு வருவதால் அதுவரை இங்கு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த ஆங்கில வகுப்புகளுக்காக இந்தியாவிலிருந்து 12 ஆசிரியர்களும், பிரிட்டனிலிருந்து 3 கல்வியியல் துறை மேலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கென்றே உயர்கல்வி தகுதி பெற்றவர்கள். அதாவது செய்தல் வழி கற்றல் என்ற புதிய முறைகளின் படி பாடம் நடத்தப்படும்.

3 பெரும் பிரிவுகளின் கீழ் இந்த மையத்தில் ஆங்கிலக் கல்வி அளிக்கப்படுகிறது.

1. ஆங்கில பரிணாமம் (English Evolution): இதில் ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் வாசித்தல், இலக்கணம் அருஞ்சொற்பொருள் ஆகியவை கற்றுத் தரப்படும்.

2. ஆங்கில எக்சிகியூட்டிவ் (English Executive): இந்தப் பிரிவின் கீழ் பணியிடத்தில் ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வது குறித்த பாடங்கள் இடம்பெறும்.

3. ஆங்கில தாக்கம் (English Impact): நேர்முகத் தேர்வுகள், குழு விவாதங்கள், மற்றும் மேடைப் பேச்சு ஆகியவற்றில் தன்னம்பிக்கை பெறத் துடிப்பவர்களுக்கு இந்த பாடத்திட்டம் உதவும்.

பதிவு செய்யப்படுவதற்கு முன் அனைத்து மாணவ‌ர்களுக்கும் தேர்வு நடைபெறும். அதாவது அவரவ‌ர்களுக்கு பொருத்தமான பிரிவு எது என்பதை அறிய இது நடத்தப்படுகிறது. இது எழுத்து வழி தேர்வு, வாய்மொழி நேர்காணல் மற்றும் ஆசிரியருடன் ஆலோசனை அமர்வு ஆகிய வழிமுறைகளில் நடத்தப்படும்.

ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் 7 வார காலங்களுக்கு 42 மணி நேரங்கள் வகுப்புகள் நடைபெறும்.

இந்த கல்விக்கான கட்டணம் ரூ.6,500 முதல் ரூ.7.000 வரை நிர்ணயி‌க்க‌ப்பட்டுள்ளது. இந்த தொகையில் பாடப் புத்தகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் நூலக உறுப்பினர் அட்டை ஆகியவையும் உள்ளடங்கும்.

புது டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலக் கல்வி மையத்தில் ஆண்டு தோறும் 7,000 மாணவர்கள் ஆ‌ங்‌கிலம் கற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு 044 4205 0600 என்ற தொலை பேசி எண்ணை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil