Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இல்லை

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இல்லை
சென்னை , வெள்ளி, 19 ஜூன் 2009 (18:06 IST)
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம் உட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி.எஸ். (M.B.B.S) இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க கடந்த 3ஆம் தேதி விண்ணப்பங்களை வினியோகிக்கும் பணி துவங்கியது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூன் 17 கடைசி நாளாகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் சேர மொத்தம் 15,500 மாணவர்கள் விண்ணப்பம் வாங்கினர். இவர்களில் 14,820 பேர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களை (1,483) ஒப்பிடும்போது, சுமார் 10 மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 12,655 மாணவர்கள் மட்டுமே M.B.B.S. படிப்பில் சேர விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் (mciindia.org) தகவல் வெளியிடப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட சில அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாததே இந்தாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 இடங்களில், 85 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் படியும், மீதமுள்ள 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் படியும் நிரப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால், தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின் கீழுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களின் எண்ணிக்கையில், 85 இடங்கள் குறைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil