Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்டியோபொரோசிஸ்-இந்தியாவில் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிப்பு

ஆஸ்டியோபொரோசிஸ்-இந்தியாவில் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிப்பு
, வியாழன், 20 அக்டோபர் 2011 (15:05 IST)
FILE
உலக ஆஸ்டியோபொரோசிஸ் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 3 கோடியே 60 லட்சம் பேர் இந்த நோய்க்கு 2013ஆம் ஆண்டு வாக்கில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்டியோபொரோசிஸ் என்பதற்கு உலகச் சுகாதார மையம் கொடுக்கும் விளக்கம் இதோ: எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பது என்று கூறுகிறது உலகச் சுகாதார மையம்.

இது பெரும்பாலும் மாதவிடாய் என்ற ஒன்று முடிந்தபிறகு பெண்களை அதிகம் பாதிக்கிறது. ஆண்களில் வயதானவரகளை இந்த எலும்புத் தேய்மான நோய் பாதிக்கிறது.

இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது.

இந்தியாவில் நகர்ப்புறப்பகுதிகளில் வாழும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரி ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருக்கிறது.

கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று டாக்டர் அசோக் குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குறிப்பாக புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸிற்கு பிரதான காரணம் என்கிறார் இவர்.

பெண்களுக்குக் குறிப்பாக மாதவிடாய் முடிந்த பிறகும் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் நிலைமைகளை ஊக்குவிக்கிறது.

மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது.

ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிலிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம்.

வெறும் கால்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, மற்றும் சூரிய ஒளியை தவிர்த்து வீட்டுக் குள்ளேயே அடைந்து கிடப்பதும் இதற்கு பெரும் காரணமாகும்.

எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.

குறிப்பாக குழைந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள். இது அபாயமானதாகும். குளிர்பானங்களில் பாஸ்பேட் சத்து அதிகம். பாஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கால்சியம் சத்து கடுமையாக குறையும்.

உடற்பயிற்சி செய்யச் செய்ய கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எலும்புத் தேய்மான நோய் பற்றி அருகிலிருக்கும் மருத்துவர்களை கலந்தாலோசித்து அதனை வரு முன் காப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil