விலை கூடினாலும் பட்டாசு விற்பனை படுஜோர்!
, புதன், 7 நவம்பர் 2007 (11:03 IST)
பட்டாசு விலை கூடினாலும் மக்களிடையே வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பட்டாசு வியாபாரி ஒருவர் கூறுகிறார்.தீபாவளி வந்து விட்டாலே மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோசமாக இருக்கும் நேரம் பட்டாசு வெடிக்கும் நேரம்தான்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் களை கட்டிவிட்டது பட்டாசு விற்பனை. பட்டாசு கடைகளில் பெரியவர்கள் வந்துதான் பட்டாசு வாங்குவார்கள், ஆனால் குழந்தைகளும் கூட வந்து வாங்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் சில இடங்களில் விற்பனை மந்தமாக உள்ளது. தி.நகரில் பட்டாசு கடைகளை காண முடியவில்லை. புரசைவாக்கத்தில் ஒரு சில கடைகளே உள்ளன. தற்போது மிகவும் களை கட்டி இருப்பது பிராட்வேதான். அங்கு அனைத்து தரப்பு மக்களும் கடைகளில் பட்டாசுகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது. மற்ற இடங்களில் இன்னும் சில நாட்களில் விற்பனை களை கட்டி விடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.சென்னையில் சாலைகளின் ஓரங்களில் பட்டாசுகளை விற்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பட்டாசுகளை விற்பனை செய்யும் போது தகுந்த பாதுகாப்புடன் விற்பனை மையத்தை அமைக்க வேண்டும் என்று நீதி மன்றம் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது. இதனால் கடை வைத்தால் எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சாலையோர வியாபாரிகள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.அதனால் தான் சென்னையில் தற்போது அதிகமாகக் கடைகளைக் காண முடியவில்லை. பட்டாசு உற்பத்தி குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இது குறித்து சென்னையில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் எஸ்.முகமத் சாகிப் கூறுகையில், பட்டாசு மொத்த விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 32 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் 50 விழுக்காடு வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளது என்றார்.இது தீபாவளி நெருங்க, நெருங்க விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். இதுதவிர, பட்டாசு சப்ளையும் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பட்டாசு விலை குறைய வாய்ப்பே இல்லை என்று அவர் தெரிவித்தார்.தீபாவளி சிறப்பிதழ் முகப்பு!
குழந்தைத் தொழிலாளர்களைக் குறைப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததால், சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் பொதுவாகவே இந்த ஆண்டு உற்பத்தி குறைவாகவே இருந்தது. அதுமட்டுமின்றி இடையிடையே பெய்த மழையும் உற்பத்தியை குறைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.தற்போது, உற்பத்தி சுத்தமாக நின்றுவிட்டது. தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி இல்லை. எனவே, இருப்பதை வைத்துத்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று பிராட்வேயில் உள்ள பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.
தீபாவளிக்கு விதவிதமாக பட்டாசுகள் வந்துள்ளன. அவற்றை பார்க்கும் நமக்கே வாங்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. குழந்தைகள் பார்த்தால் சொல்லவே வேண்டாம்.சென்னையில் தற்போது விற்கப்படும் பட்டாசுகளின் வகைகளை பார்ப்போமா!பாபி கோல்டு, ஸ்டாண்டர்டு கோல்டு, சாவி கோல்டு, ஜிம்மி கோல்டு, 15 சென்டி மீட்டர் கோல்டு, 30 சென்டி மீட்டர் கோல்டு, பாபி கிராக்ளிங், மேக்னிபிசின்ட் பைவ், டிரை கலர் ஸ்பார்க்லர்ஸ், கலர் சேஞ்ச், சைலண்ட் என்ற வகை வெடிகள் 5 ரூபாயில் இருந்து 135 ரூபாய் வரை உள்ளன.
ஸ்பாரோ, லஷ்மி, பீகாக், கிருஷ்ணா, சார்லி, ஹிட்லர், ஜம்போ, டூ சவுண்ட், டூ சவுண்ட் ஜெயிண்ட், ஸ்டாண்டர்டு ஆட்டம் பாம், கேக் கிரீன், கேக் பாயில்ஸ், ஹைட்ரஜன் கிரீன் தண்டர் பாம் கிரீன், சுமோ கிரீன். சுமோ பாயில்ஸ், புல்லட் பாம் போன்ற வெடிகள் 19 ரூபாயில் இருந்து 32 ரூபாய் வரை உள்ளது.வானத்தில் வண்ண ஜாலங்களை வெளிச்சத்துடன் வெடித்துக் காட்டும் பட்டாசு வகைகள் : பூச்சட்டி ஸ்பெஷல், ஜெயிண்ட், டீலக்ஸ், கலர் பவுண்டைன், கிராக்ளிங் கிங், எமரால்டு டயமண்ட்ஸ், தி கிரேட் ஸ்பிளண்டர், டிரை கலர், மினி பவுண்டைன் பர்மிள், கோல்டு, சில்வர், கிரீன், ஹேப்பினஸ், சியர்ஸ், ஜேட் பிளவர்ஸ். ரூ.30 முதல் 165 வரை விற்கப்படுகிறது.
ராக்கெட் வகை பட்டாசுகள் : சர்வேயர், பாம், ரோகினி, சில்வர் ஜெட், ரெயின்போ, மூன் சீரீஸ், லூனார், மிஸ்ஸைல்ஸ், பாராசூட், ஏர் டிராவல்லர்ஸ், சில்வர் கோஸ்ட். இப்படி பல வகையாக பட்டாசு வகைகள் உள்ளன.
பட்டாசுகளை வாங்குங்கள் சந்தோஷமாக தீபாவளியை வெடியுங்கள் சாரி... சாரி... கொண்டாடுங்கள்!