Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாகரன் மறைந்திருக்கிறாரா? மறைந்துவிட்டாரா? - கொளத்தூர் மணி சிறப்புப் பேட்டி

பிரபாகரன் மறைந்திருக்கிறாரா? மறைந்துவிட்டாரா? - கொளத்தூர் மணி சிறப்புப் பேட்டி

வீரமணி பன்னீர்செல்வம்

, செவ்வாய், 9 டிசம்பர் 2014 (18:24 IST)
பிரபாகரன் பிறந்தநாள் விழா - மாவீரர் தின நிகழ்வுகளுக்காக சுவிட்சர்லாந்து சென்று வந்திருக்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. அதேசமயம், பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடியதற்காக தி.வி.க.வின் 'பெரியார் முழக்கம்' பத்திரிக்கையின் செய்தியாளர் உமாபதி காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், கொளத்தூர் மணியை வெப்துனியாவுக்காக நேர்காணல் நடத்தினோம். அதன் விவரம் வருமாறு:-

1. 1989-இல் ஈழத்திற்கு சென்று வந்ததற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னால் வெளிநாடு (சுவிட்சர்லாந்து) சென்று வந்துள்ளீர்கள், உங்களுடைய பயண அனுபவம் எப்படி இருந்தது?
 
இந்த ஆண்டு பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்று வந்தேன்.
 
2014 செப்டம்பர் வரை எனக்குக் கடவுச்சீட்டு கொடுக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடவுச்சீட்டு வழங்கியுள்ளனர் என்பதை வேண்டுமானால் காரணமாகச் சொல்லலாம்.
 
2009 போருக்குப் பின்னால், ஈழ மக்கள் நம்பிக்கை இழந்திருப்பார்களோ என்று பொதுவாக எண்ணுவதற்கு பதிலாக, சர்வதேச அரசியலில் தங்களுக்கான விடுதலையைப் பெற முடியும் என்றும், தங்கள் மீது இனப்படுகொலை நடத்தியவர்களைத் தண்டிக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும் இருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.
 
2. தற்போதைய சூழலில் ஈழ மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
 
ஈழத் தாயகத்தில் வாழும் மக்கள், தங்களது மனதுக்குள் நம்பிக்கையோடு இருந்தாலும், அதை வெளிப்படுத்த முடியாதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
 
இன்னும் 6 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சியானாலும், பள்ளி நிகழ்ச்சியானாலும் இராணுவத்திடம் அனுமதி வாங்கித்தான் நடத்தவே முடியும் என்கிற கட்டுப்பாடு; பல காரணங்களைச் சொல்லி அவர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுகிற போக்கு; அளவுக்கு மீறி சிங்களர்கள் அங்கு குடியமர்த்தப்படுவது; பலபேர் திடீரென்று காணாமல் போவது; கைது செய்யப்பட்ட போர் கைதிகள் பற்றி இன்று வரை எந்தத் தகவலும் கிடைக்காதது - என பல்வேறு சிக்கல்கள் அங்கு நிலவுகிறது.
 
மேலும் அடுத்த பக்கம்...

ஈழத் தாயகத்தில் இருக்கின்ற தமிழர்களைப் பொறுத்தவரை, எவ்வளவு மனக்குமுறல் இருந்தாலும் தங்களால் எதையும் வெளிப்படுத்த முடியாத சூழல் அங்கு நிலவுகிறது.
 
புலம்பெயர்ந்த தமிழர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள்தான் அம்மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தங்கள் நாட்டு அரசுகளின் மூலம் ஈழப்பிரச்சனையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். அங்கேயே பிறந்து, அங்கேயே கல்வி பெற்ற இளைய சமுதாயம், அங்கிருக்கின்ற அரசியல் சூழலையும், சர்வதேச அரசியலையும் புரிந்து வைத்துள்ளவர்களாக இருப்பதால்தான் பல்வேறு செய்திகளை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல முடிகிறது.
 
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது போட்டிருந்த தடையை நீக்குவதற்கு வழக்குத் தொடுத்த லதன் சுந்தரலிங்கம், ராஜன் சிறிதரன் போன்றவர்கள் அங்கேயே பிறந்து, வளர்ந்த இளைஞர்கள் தான். அவர்களுடைய முயற்சியால்தான் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது.
 
புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் போராட்டங்களை, அந்த நாடுகள் புரிந்து கொண்டு அவர்களுடைய உணர்வுகளை மதிக்கக் கூடியவர்களாக இருக்கின்றன. அல்லது தடையேதும் சொல்லாமல் இருக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கும் தடை இருந்தது. ஆனால் அங்கு பிரபாகரன் படத்தை எடுத்துச் செல்ல முடிகிறது. புலிக்கொடி ஏந்திச் செல்ல முடிகிறது. பிரபாகரன் பற்றி, தமிழீழம் பற்றிப் பேச முடிகிறது. ஆனால் இந்தியாவில் இவை அனைத்தும் தடுக்கப்படுகிறது. எனவே அந்நாடுகளில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
 
3. பிரபாகரன் பிறந்த நாள் விழா - மாவீரர் தின நிகழ்வுகளை ஒட்டி உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ’முழக்கம்’ உமாபதி என்பவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளீர்கள்?
webdunia
காவல்துறை இதுபோன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது இது முதல்முறை அல்ல. ஒரு தொடர்ச்சியான நிகழ்வுதான். என்றாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரும்போதெல்லாம் காவல்துறை கட்டவிழ்த்துவிட்டவர்களாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
 
பொதுவாகவே காவல் துறையினருக்கு, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திய அதிகாரிகளுக்கு இருந்த ஆணவப்போக்கு இருந்து கொண்டிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்; சட்டங்கள் இருக்கிறது என்பதை பொருட்படுத்தாத சூழல்தான் நிலவுகிறது.
 
பொதுவாக காவல் துறையினர் சமூக விரோதிகளுடன் தொடர்புடையவர்களாகத் தான் இருக்கிறார்கள். சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகச் செயல்படும் சமூகப் போராளிகளை, எதிரிகளாகப் சித்தரிப்பது மாதிரியான போக்குதான் காவல்துறையின் நடைமுறையாக இருப்பதாகத் தான் நான் பார்க்கிறேன்.
 
எங்கள் தோழர் ‘முழக்கம்’ உமாபதி தாக்கப்படுவதற்கு முன்பே மதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தினக் கூட்ட அனுமதிக்கான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக மாவீரர் தினம் கொண்டாடுவதோ, புலிகளை ஆதரித்துப் பேசுவதோ தவறு ஆகாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
அதற்கு பின்னாலும் காவல்துறை தடுக்கிறதென்றால், அவர்கள் நீதிமன்றத்தையும் மதிக்கத் தயாராக இல்லை என்றுதான் தோன்றுகிறது. உமாபதியைத் தாக்கியவுடன் தோழர்கள் அங்கு போனார்கள். மருத்துவமனையில் சேர்த்தார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். மனித உரிமை ஆணையத்தை அணுகியிருக்கிறோம்.
 
தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த வாரம் தமிழகம் தழுவிய அளவில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். அதேபோல் இன்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 
இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெறும்போது அந்தந்தப் பகுதிகளில் உள்ள இயக்கங்களும், பொதுமக்களும் காவல் துறையினரின் அடாவடி செயல்களுக்கு எதிராக திரண்டுப் போராட வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.
 
மேலும் அடுத்த பக்கம்...

4. மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருவதாகப் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், அக்கட்சிக்கு நேர் எதிர் கொள்கைகளை உடைய உங்கள் இயக்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
 
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளது. மதவெறி இயக்கத்துக்கு ஒரு இடமும், ஜாதிவெறி இயக்கத்துக்கு இன்னொரு இடமும் கிடைத்துள்ளதை நான் சங்கடமாகத் தான் பார்க்கிறேன். கடந்த முறை பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை என்கின்ற போதிலும் பாடத்திட்டங்களை திருத்துவது போன்ற அவர்கள் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தார்கள். தற்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளனர். ஆனாலும், அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் அளித்துள்ளனர். காரணம், அவர்களின் இந்துத்துவா திட்டங்களை நிறைவேற்றும்போது குறுக்கிடா வண்ணம் அமைதிப்படுத்துவதற்கான உத்தியாகவே இதை நான் கருதுகிறேன். ஆகவே, பாஜகவைப் பொறுத்தவரை அவர்களுடைய வேலையை அவர்கள் செய்துகொண்டே தான் இருப்பார்கள்.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வளர்ந்திருப்பதாகப் பேசப்படுவதைக் கூட நாங்கள் ஒரு கெட்ட வாய்ப்பாகத் தான் கருதுகிறோம். இருப்பினும், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, “அவர்கள் நம்மவர்களும் அல்ல; நல்லவர்களும் அல்ல!” என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் கூட்டணியில் இருந்தவர்களும் கூட கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருத்துவர்களை எதிரிகளாகக் காட்டி வளர்ந்திருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. என்றாலும், பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளைப் பற்றி, ஆர்.எஸ்.எஸ்.-இன் அடாவடித்தனங்களைப் பற்றி மக்களிடம் பல வழிகளில் எடுத்துச் செல்வோம். குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை முக்கியக் கடமையாகக் கருதுகிறோம்.
 
5. ஈழத்திற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் ’வைகோ’ போன்ற தமிழகத் தலைவர்கள், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும்; மீண்டும் வருவார் என்றும் பேசி வருகிறார்கள். இவ்விஷயத்தில், பிரபாகரனுக்கும், புலிகள் இயக்கத்துக்கும் நெருக்கமானவர் என்று அறியப்படுகிற உங்களின் கருத்து என்ன?
webdunia
என்னைப் பொறுத்தவரை நான் பலமுறை சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். பிரபாகரன் இருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும்தான் இருக்கிறது. ஆதாரங்கள் இல்லாமல் நான் எதுவும் சொல்ல முடியாது.
 
வைகோ அவர்கள் பேசுவது கூட வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்ற யூகம்தான் என்று நான் கருதுகிறேன். யூகங்களின் அடிப்படையில் நான் பேச விரும்பவில்லை.
 
பிரபாகரன் மறைந்திருக்கிறாரா? இல்லை மறைந்துவிட்டாரா? என்பது கூடத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், விடுதலைக் கிடைக்கும் வரை அங்குப் போராட்டம் நடக்கும். அவர் எழுப்பிய விடுதலை வேட்கை அணையாது. தமிழீழம் மலரும்!...

நேர்காணல் & எழுத்தாக்கம்: வீரமணி பன்னீர்செல்வம்
பிழைதிருத்தம்: லெனின் அகத்தியநாடன்

Share this Story:

Follow Webdunia tamil