Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பேஸ்புக்" கில் பொங்கி வழியும் பொய்கள்!

, வியாழன், 28 அக்டோபர் 2010 (17:58 IST)
"பேஸ்புக்" - Facebook மற்றும் "ட்விட்டர்" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவது ஃபேஷனாகிவிட்டது.

சாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அதேப்போன்று "செலிப்பிரேட்டிகள்" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை "உச்சா" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

இவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.

அதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே...?! விமானத்தில் "எக்கனாமிக்" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்!

ஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் "கதைப்பவர்கள்" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டனில் "டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், "ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே, ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் அல்லது பிற டைப் செய்யப்பட்டு அனுப்பும் முறை வழியாக பேசும்போது மிகவும் நேர்மையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நவீன போன்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் உடனடி செய்தி அனுப்பும் இமெயில்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதற்கான தடைகளை நீக்கி, மிகவும் வெளிப்படையாக பேசுவதை அனுமதிக்கும் புதுமையான வழிமுறைகள் என்று புகழப்படுகிறது.

"ஆனாலும் சில நேரங்களில் சிலருடன் நேருக்கு நேராக பேசுவதை நாம் தவிர்க்க விரும்புகையில் மேற்கூறிய ட்விட்டர், இமெயில், தொலைபேசி வழியான எஸ்எம்எஸ் போன்றவை நமக்கு கைகொடுக்கத்தான் செய்கின்றன.

குறிப்பாக நாம் தெரிவிக்கும் செய்தி அல்லது உரையாடல் உண்மை அல்லாததாக இருக்கும்போது, அதனை எளிதில் தெரிவிக்க முடிகிறது. சாதாரணமாக இத்தகைய உரையாடலின்போது ஏற்படுகிற படபடப்பு, பதற்றம் போன்றவை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்போவதில்லை.

ஒருவேளை நாம் தெரிவிக்கும் தகவல் அல்லது உரையாடல் உண்மையாகவே இருந்து அதனைக் கேட்கும் எதிராளி, வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் எதிர்கொள்ளவோ அல்லது அதனைப்பார்த்து நமக்கு ஏற்படும் அங்க அசைவுகளை கட்டுப்படுத்தவோ தேவையில்லை" என்கிறார் பிரபல மனோதத்துவ நிபுணர் வில்சன்!

எனவே அடுத்த முறை ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ உங்களுக்கு விருப்பமானவர்கள் எழுதுவதை படிக்கும்போது அப்படியே அப்பாவி கோவிந்தாக நம்பி விடாதீர்கள்!

Share this Story:

Follow Webdunia tamil