Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு' - உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு

'சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு' - உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு
சென்னை , புதன், 16 செப்டம்பர் 2009 (12:38 IST)
"சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு'' என்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம், ‌தீட்சிதர்களின் மனுவை ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ‌ீட்சிதர்கள் நிர்வகித்து வந்தார்கள். பலமுறைகேடுகள் நடந்து வருவதால் கோ‌யில் நிர்வாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டன. இதைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை நிர்வகிப்பதற்கு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு 1987இல் உத்தரவிட்டது.

இ‌ந்த உ‌த்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை இந்து சமய அறநிலையத்துறை ஆணைய‌ர் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ில் தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றனர். இதனால் செயல் அதிகாரியை நியமிக்க முடியவில்லை.

இந்த வழக்கை ‌விசா‌ரி‌த்த நீதிபதி ஆர்.பானுமதி, செயல் அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த பிப்ரவரி மாதம் 2ஆ‌ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து அன்று இரவே நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை அரசு நியமித்தது. தற்போது இக்கோ‌யில் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.

நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை செயல் அதிகாரி செயல்பட இடைக்கால தடை வழங்க வேண்டும் என்றும், ‌ீட்சிதர்கள் சங்கச் செயலர் உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்தார். ''சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அ‌ந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. தீட்சிதர்கள் நிர்வாகம் மீது கூறப்பட்ட குற்றச்சா‌ற்றுகள் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும், அப்படியிருக்க இந்த சூழ்நிலையில் நிர்வாகத்தை அரசு எடுக்க முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் கே.ரவிராஜபாண்டியன், டி.ராஜா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ராமசாமி ஆஜராகி வாதாடுகையில், ''நடராஜர் கோ‌யில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என்றும், இக்கோ‌யில் சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் முறைகேடுகள் நடந்ததால் இக்கோ‌யிலை நிர்வகிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

இந்த மே‌ல் முறை‌யீ‌ட்டு மனுவை ‌நிராக‌ரி‌த்த நீதிபதிகள், செயல் அதிகாரியை நியமித்து நடராஜர் கோ‌யிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்தனர்.

மேலு‌‌ம் ‌நீ‌திப‌திக‌ள் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌‌ல் கூறியிருப்பதாவது: கோ‌யிலுக்கு சொந்தமான வளமான 400 ஏக்கர் நிலத்திலும் மற்றும் அசையா சொத்துக்களிலும் அதிக முறைகேடுகள் நடந்திருப்பதால் நிர்வாகத்தை சீர்படுத்துவதற்காகவே செயல் அதிகாரி நியமிக்கப்பட்டார். செயல் அதிகாரியும் கோ‌யிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கோ‌யிலுக்கு சொந்தமான நிலங்களுக்கு வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. வசூலிக்கப்படவும் இல்லை. தீட்சிதர்கள் தங்கள் கடமையை புறக்கணித்துள்ளனர் என்ற முடிவுக்கு வந்ததால்தான் அரசு செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

செயல் அதிகாரி நியமனத்தில் ‌நீ‌திம‌ன்ற‌ம் தலையிட்டால் அது வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமிக்க கோ‌யிலின் பாதுகாப்பில் இருந்து நீதிமன்றம் தவறியதாக அமைந்துவிடும். இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்கும் இந்த கோ‌யில் சிதைந்து விடும். சிதம்பரம் நடராஜர் கோ‌யில் தமது மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது என்றும், அரசியல் சட்டம் 26-வது பிரிவின் கீழ் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் மே‌ல் முறை‌யீ‌ட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை.

இந்த கோ‌யில் தீட்சிதர்களாலோ, அல்லது அவரது மூதாதையார்களாலோ கட்டப்படவில்லை. ஆகவே, அரசியல் சட்டம் 26-வது பிரிவின்கீழ் தீட்சிதர்கள் பாதுகாப்பு கோரமுடியாது. வரலாற்று ரீதியான ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சிதம்பரம் நடராஜர் கோ‌யில் சோழர், பாண்டியர், விஜயநகர பேரரசர்களால் 10 முதல் 13ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. சைவர்களும், வைணவர்களும் சேர்ந்து வழிபட்டுள்ளனர். ஆகவே, இந்த கோ‌யில் எங்களுக்குரியது என்று தீட்சிதர்கள் உரிமை கோரமுடியாது.

மேலும் சில அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 400 ஏக்கர் விளை நிலங்கள், காணிக்கைகள், தங்க நகைகளுக்கோ, உண்டியல் வசூலுக்கோ, நன்கொடைக்கோ எந்த கணக்கையும் தீட்சிதர்கள் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்து சமய அறநிலையத்துறை சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டது.

400 ஏக்கர் நிலத்தை கண்டறியவும், கட்டளைகளை கண்டறியவும், வருவாயை உரியமுறையில் வசூல் செய்யவேண்டும் என்பதற்காக செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கோ‌யிலை உரிய முறையில் பராமரித்திருந்தால் பணக்கார கோ‌யில்களான திருப்பதி, பழனி கோ‌யிலுக்கு இணையாக வளர்ந்திருக்கும்.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோ‌யிலை புதுப்பிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் ரூ.50 கோடி திட்டத்தை வகுத்து இந்து சமய அறநிலையத்துறை 13-வது நிதிக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது முறையாக நிர்வகிக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது. பாரம்பரியமிக்க வரலாற்று புகழ்வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோ‌யிலை திறமையாக நிர்வகிக்க செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.

செயல் அதிகாரியை நியமிப்பதால் தீட்சிதர்களின் கடமை, உரிமை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. காரணம், இந்து சமய அறநிலையத்துறை ஆணைய‌ர் பிறப்பித்த உத்தரவில், செயல் அதிகாரியின் கடமை, தீட்சிதர்களின் கடமை ஆகியவை தெளிவுபட வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. செயல் அதிகாரி நியமனத்தால் எந்த தீட்சிதரும் வெளியேற்றப்படவில்லை. ஆகவே, இந்த மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு ‌நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது. சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவும் ‌நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது. நீதிபதி ஆர்.பானுமதி வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு ‌நீ‌திப‌திக‌ள் அ‌ளி‌த்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil