Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டனில் ஓட்டல் வேலை செய்யும் இந்திய எம்.பி.ஏக்கள்!

லண்டனில் ஓட்டல் வேலை செய்யும் இந்திய எம்.பி.ஏக்கள்!
, திங்கள், 1 நவம்பர் 2010 (18:35 IST)
பவுண்ட்ஸில் சம்பளம்; சொகுசு காரில் பயணம்... பங்களா வீடு... என வளமான வாழ்க்கை வாழலாம் என்ற கன்வுடன் பிரிட்டனுக்கு சென்று எம்.பி.ஏ. - MBA - படித்து முடித்த ஏராளமான இந்திய இளைஞர்கள், படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாமல் ஓட்டலில் வெயிட்டர்களாக வேலை பார்த்துவருகிறர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு வேலை பார்ப்பவர்கள் பிரிட்டனிலேயே படித்த இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.ஏ. மாணவர்களும் அடக்கம்.

கடந்த 2008 ல் உலகையே உலுக்கி எடுத்த பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்திற்கு பிரிட்டனும் தப்பவில்லை.பா நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்.

இப்பொழுதான் அந்த வீழ்ச்சியின் பாதிப்பிலிருந்து பிரிட்டன் மெல்ல மீண்டு வருகிற நிலையில், பொருளாதார வீழ்ச்சி தாக்கம் மற்றும் இதர காரணங்களால் பிரிட்டனில் இன்னமும் வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 25 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்!

இந்நிலையில் அயல்நாடுகளிலிருந்து வேலை தேடி வருவோர்களுக்கு எதிராக எப்பொழுதுமே கடுமையாக பேசி வரும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் டேமியன் கிரீன், குறைந்த கல்வி தகுதியுடைய வேலைகளை தேடி அயல்நாட்டவர்கள் இங்கிலாந்துக்கு வரவேண்டாம் என்றும், அத்தகைய வேலைகளை செய்ய பிரிட்டனிலேயே பல்லாயிரக்கணக்கானோர் உள்ளதாகவும், மிக உயர் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இங்கு ஓரளவு வேலை வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தங்கள் நாடு குறைந்த கல்வி தகுதியுடையவர்களுக்கு, - கிட்டத்தட்ட கூலியாட்கள் - வேலை அளிக்கும் சந்தை கிடையாது என்றும் அவர் காட்டம் காட்டியுள்ளார்.

இந்த ரக தொழிலாளர்கள் வருவதை தடுப்பதற்குதான், கடந்த 2008 ஆம் ஆண்டில், முந்தைய தொழிலாளர் கட்சி அரசு வேலை தேடி வருபவர்களுக்கு அவர்களது திறமையின் அடிப்படையில், புள்ளிகள் அடிப்படையிலான Tier-1 கிரேடு முறையை கொண்டுவந்தது.

சிறந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே இங்கிலாந்துக்கு வரவழைப்பதற்கான ஒரு யுக்தியாகவும் இது பார்க்கப்பட்டது.

இந்நிலையில்தான் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த மற்றும் படித்து முடித்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுகொண்டிருந்த இந்திய மாணவர்களும் மேற்கூறிய Tier-1 கிரேடு முறைக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் தங்களுக்கான பணி அனுபவத்தை பெற மேலும் இரண்டாண்டுகள் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தங்களது பணி திறமைகளை அதிகரித்துக்கொள்வதோடு, அயல்நாட்டவர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற அதிகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழித்திறனுக்கு ஏற்ப, தங்களது தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆங்கில மொழித்திறன் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் குறைந்துபோன வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால்தான், இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வெளியே வந்த இந்திய எம்.பி.ஏ. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், வேலை இன்றி தவிப்பதோடு, பிழைப்பை ஓட்ட வேண்டுமே என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஓட்டல்களிலும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

இன்று லண்டனிலுள்ள ஓட்டல்களில் ஒரு சுற்று சுற்றி வந்தால், பாதிக்கும் அதிகமான் ஓட்டல்களில் இந்தியாவை சேர்ந்த எம்.பி.ஏ. முடித்த பலர் "வெயிட்டர்"களாக பணியாற்றுவதை பார்க்கலாம் என்கிறார் சுல்தானா என்ற இந்திய மாணவி.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.பி.ஏ. முடித்தவர்.வேலை கிடைக்காமல் ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றுகிறார்.

"துரதிர்ஷ்டவசமாக நான் எதிர்பார்த்ததுபோன்று எனக்கு வேலை கிடைக்கவில்லை.அதனால்தான் நான் ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றுகிறேன்.

நான் மட்டுமல்ல; என்னுடன் படித்த எனது நண்பர்கள் ஏராளனமானோரும் என்னைப்போன்றே அவர்களது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் ஓட்டல்களில் வெயிட்டர்களாக பணியாற்றுகிறார்கள்.

சிலர் இரவு நேர செக்யூரிட்டி பணியாளர்களாகவும் வேலை பார்க்கிறார்கள்" என்று துயரத்துடன் கூறுகிறார்.

ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா இனவெறியை காண்பித்து இந்திய மாணவர்களை துரத்திக்கொண்டிருக்கையில், தற்போது பிரிட்டனும் பயமுறுத்துகிறது.

எனவே டாலர்களில் சம்பளம் வாங்கும் கனவில் அயல்நாடுகளுக்கு படிக்கவும் , படித்து முடித்து பணிக்கும் செல்ல நினைப்பவர்கள், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?" என்று தங்களுக்குள் கேட்டு யோசித்துவிட்டு, அதன் பின்னர் முடிவெடுப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil