Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசின் பாராமுகம்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2006

ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்து மீறி தாக்கி வருவது ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஏதோ சாலை விபத்து போல ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கின்ற செய்தி சிறு சிறு இடைவெளிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் வலுவடைந்து வரும் நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுவிடாமல் எச்சரிக்கையாக மீன்பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படியே, தமிழக மீனவர்களும் சர்வதேச கடற்பகுதியிலும், கச்சத் தீவை ஒட்டியுள்ள, நமக்கு மீன்பிடிக்க உரிமை உள்ள கடற்பகுதிகளிலும் மீன்பிடித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் ஆந்ரூஸ் என்ற மீனவர் குண்டடிப்பட்டு ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, அவர்களின் வலைகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பறித்துக் கொண்டது மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், இறால்களையும் பிடுங்கி கடலில் எறிந்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளது.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அவருடைய ஒவ்வொரு கடிதத்திலும் இடம்பெறுகிறது.

அதுமட்டுமின்றி, இலங்கைக்கு நாம் அளித்த கச்சத் தீவு பகுதியில், நமக்குள்ள மீன்பிடி உரிமையை நிலைநிறுத்துமாறும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்துள்ளார். இப்பொழுதும் அதைத்தான் முதலமைச்சர் ஜெயலலிதா செய்துள்ளார்.

கச்சத் தீவை குத்தகைக்கு எடுத்து நமது மீனவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தாலும், அதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து எந்த பதிலும் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.

நமது கடலோர பகுதிகளை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவற்படையும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவில்லை. ஆனால், தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதற்கு அர்த்தம் என்ன?

கச்சத் தீவை சுற்றி மீன்பிடிக்கும் உரிமையும், கச்சத் தீவில் சென்று ஓய்வெடுக்கும் உரிமையும் தமிழக (இந்திய) மீனவர்களுக்கு உண்டு என்பது உண்மையானால், அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படை நமது மீனவர்களை தாக்குவது ஏன்? அதனை தடுத்து நிறுத்த மத்திய அரசு தயங்குவதும் ஏன்?

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இந்திய - இலங்கை கடற்பகுதியில், புலிகளின் ஊடுருவல் ஏற்படக்கூடாது என்பதற்காக கடலோர காவற்படை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், ஒரு முறை கூட நமது மீனவர்களை தாக்க அத்துமீறி நுழையும் இலங்கை கடற்படை கண்காணிப்புப் படகுகளை வழிமறித்து எச்சரித்ததாகவோ அல்லது நமது மீனவர்களை காத்ததாகவோ எந்தச் செய்தியும் இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் செய்தியாளர்களுக்கு கடலோர காவற்படையின் சாரங் கப்பலில் பேட்டி அளித்த வைஸ் அட்மிரல் அருண் குமார் சிங், இந்திய - இலங்கை கடல் எல்லையில் நமது கப்பற்படையின் பெரும் கப்பல் ஒன்றும், கடலோர காவற்படையின் கப்பல் ஒன்றும், கண்காணிப்பு விமானமும் காப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று கூறினார்.

அப்பொழுது அவரிடம் இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது குறித்து அந்நாட்டு கப்பற்படையினருடன் பேசி வருவதாக பதிலளித்தார் அருண் குமார் சிங்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியும், சௌராஷ்ர கடலோரப் பகுதியும்தான் மிக சிக்கலான இரண்டு கடலோரப் பகுதிகள் என்று குறிப்பிட்ட அருண் குமார், கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடிக்கும் மீனவர்களை, எச்சரித்து அனுப்பலாம். அல்லது பிடித்துக் கொண்டு போய் சிறையில் அடைக்கலாமே தவிர, அவர்களை தாக்குவது விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறினார்.

சௌராஷ்டரா கடலோரப் பகுதி, இந்திய-பாகிஸ்தான் கடற்பகுதியில் மிக நெருக்கமாக உள்ள கடலோரப் பகுதியாகும். சௌராஷ்டிராப் பகுதி மீனவர்கள் கடலாடும்போது எல்லையறியாமல் வழிதவறி செல்லும்போதெல்லாம் அவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்து சிறையில் அடைத்தனரேத் தவிர, ஒருவரையும் சுட்டுக் கொன்றதில்லை.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அளவிற்கு பகைமை நிலவியபோதும், அத்து மீறி மீன்பிடித்ததாகக் கூறப்பட்ட பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படையினரோ அல்லது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினரோ சுட்டுக் கொன்றதாக எந்த செய்தியும் நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால், கத்தரிக்காய் அளவிற்கு இருக்கும் இலங்கை நாட்டின் கடற்படை, தமிழ்நாட்டின் மீனவர்கள் மீது ஒவ்வொரு முறையும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவதும், அவர்களின் வலைகளை அறுத்து எரிவதும், படகுகளை சிதைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் நமது முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி கண்டனக் குரல் எழுப்புகிறார். ஆனால் மத்திய அரசு மௌனமாகவே உள்ளது. இந்த நிலை நீடிக்க அனுமதித்தால், மத்திய அரசின் போக்கை சந்தேகிக்கும் எண்ணம் தமிழர்கள் மத்தியில் உருவாகும்.

காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல் படை என்ன செய்திகிறது என்று தெரியவில்லை. ஒரு தொலைபேசியின் மூலம் இலங்கை அரசை கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் அடிபடும்போதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் கண்டனக் குரல் எழுந்து அடங்கி விடுகிறது.

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் இப்பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

இல்லையென்றால் எல்லாமே கண்துடைப்புத்தான் என்று கருத வேண்டிவரும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments