Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனை: கருணையும் அற்ப அரசியலும்

கா.அய்யநாதன்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (19:21 IST)
TNG
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவு சென்ற பிறகு, அதனை தடுத்து நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவி்ற்கு முக்கியத்துவம் வாய்ந்தது தமிழக சட்டப் பேரவையில் குடியரசுத் தலைவர் கருணை காட்ட வேண்டும் என்று கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானமும் ஆகும்.

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு அல்லது பலருக்கு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுவதே இதுவரை உள்ளது. இந்த நிலையில், ஒரு மாநில மக்களின், அரசியல் கட்சிகளின் பொதுவான ஒன்றுபட்ட கருத்தின் அடிப்படையில், மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்டி மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டத் தீர்மானம், மனித வாழ்வுரிமை போராட்டத்தில் ஒரு புதிய திருப்பமாகும்.

ஆயினும் இது சர்சையாகியும் உள்ளது. காரணம், இப்படி ஒரு மாநில சட்டப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதையே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை மத்திய அமைச்சரவை அல்லது உள்துறை அமைச்சகம் முடிவு செய்வதற்கு, அதற்கான சட்ட அடிப்படை உள்ளதா என்பதை விட, ஒரு மாநில மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தீர்மானத்தை எப்படி கையாள்வது என்பது மத்திய அரசு முன் உள்ள மிகப் பெரிய வினாவாகும். இதற்கு சட்ட அடிப்படை இல்லையென்று கூறி சாதாரணமாக நிராகரித்துவிட முடியாது. அதே நேரத்தில் இதுவே முன்மாதிரியாகிவிட்டால், அதன் பிறகு குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 72இன் கீழ் கருணை மனு பரிசீலனை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் இறுதியானதல்ல என்று ஆகிவிடும் நிலை உள்ளது. எனவே தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், மனிதாபிமான பார்வையில் ஒரு பெரும் திருப்பம் என்றாலும், அது அரசமைப்புச் சட்ட ரீதியான வினாவையும் எழுப்புகிறது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களை கருணை காட்டி விடுவிக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை தமிழக முதல்வர் - அரசமைப்புச் சட்டப் பிரிவு 257 (1)யைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு 1991ஆம் ஆண்டு அனுப்பியிருந்த அறிக்கையை எடுத்துக்கூறி ஒரு விளக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அரசமைப்புச் சட்டப் பிரிவு 161இன் கீழ் தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே (1999ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது) முடிவு எடுக்கப்பட்டுவிட்டதால், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த நிலையில் மீண்டும் அப்பிரிவை பயன்படுத்த முடியாது என்பதே முதல்வரின் விளக்கமாகும்.

TNG
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாத நிலையிலேயே, “தமிழக மக்களின் உணர்வுகளையும், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்த ு ” மூன்று பேருக்கும் கருணை காட்டுமாற ு குடியரசுத் தலைவரை கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றினார். எனவே இதன் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரையே சார்ந்துள்ளது.

ஆனால், தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, “தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன்னதைக் கெட்ட்டியாகப் பிடித்துக்கொண்டு காலம் கடத்தாமல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும ்” என்று கூறியுள்ளார்.

மூன்று பேரையும் காப்பாற்ற சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்த பின்னர ், அதே நாளில் சென்னை உயர் நீதிமன்றமும் தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்துவிட்ட பிறகு, “காலம் கடத்தாமல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும ்” என்று கோருவது அர்த்தமற்றதாகும்.

அரசமைப்பு சட்டப் பிரிவு 161இன் கீழ் மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், 1999ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்ததற்குப் பின்னர்தானே, குடியரசுத் தலைவருக்கு மரண தணடனை கைதிகள் கருணை மனுக்களை அனுப்பினார்கள்? அரசமைப்புப் பிரிவு 161 அளிக்கும் அதிகாரம் என்பது ஆட்சி மாற்றத்திற்கும் மனமாற்றத்திற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு முறையும் புத்துயிர் பெறுமா என்ன?

அதுமட்டுமல்ல, 1999இல் தனது அமைச்சரவை இந்த மூன்று பேரின் கருணை மனுக்களை நிராகரித்ததற்குக் காரணம், “அப்போது நாட்டு மக்கள் எல்லோரும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் மீது எதிர்ப்புக் கருத்தினைக் கொண்டிருந்தனர ்” என்று கருணாநிதி கூறுகின்றார். இதனை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அதன் பிறகு, கடந்த ஆண்டு வரை 20 ஆண்டுகளாக, பேரறிவாளன் எழுதிய கடிதம், இந்த நாட்டின் தலைசிறந்த நீதிபதிகளில் ஒருவராகக் கருதப்படும் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஆகியோர் முதல்வராக இருந்த கருணாநிதிக்கு நேரடியாகவே கடிதம், தமிழ்நாட்டில் மரண தண்டனைக்கு எதிராக நடந்த கருத்தரங்குகள், போராட்டங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, ஏன் மத்திய அரசிடம் கூறி, கருணை மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி பரிந்துரைக்கவில்லை?

இந்த வினாவிற்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அளித்த பதில், “அந்தக் குடும்பமும் ஒருவரை இழந்துள்ளது, எனவே இதில் சோனியா காந்திதான் முடிவு செய்ய வேண்டும ்” என்று கூறினார். இப்படி சோனியாவின் பெயரைக் கூறி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தவர்தான், தமிழக சட்டப் பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல்வரைப் பார்த்து ‘தட்டிக் கழிக்கிறார ் ’ என்ற ு குறை கூறுகிறார்.

FILE
தான் முதல்வராக இருந்தபோது கருணை மனுக்களை அனுப்பி இருவரை மரண தண்டனையில் இருந்தும் காத்ததாக கருணாநிதி மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த புலவர் கலியபொருமாள், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட விவரமும் ஒன்றாகும்.

புலவர் கலியபொருமாள் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்ற பொதுவுடைமைவாதிகள், அதனை அப்போது குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பி வைத்தனர், அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு அல்ல!

1969 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி ஒரு தலைசிறந்த தொழிற்சங்கவாதியாவார். அவரைச் சந்தித்த தொழிற்சங்கவாதிகள் சிலர், புலவர் கலியபெருமாளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலளித்த வி.வி.கிரி, புலவர் கலியபெருமாளை எனக்கு ஒரு கருணை மனு அனுப்புமாறு சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் அப்படி கருணை மனு அனுப்ப மறுத்துவிடுகிறார் புலவர் கலியபெருமாள்.

இதனை தொழிற்சங்கவாதிகள் வி.வி.கிரியிடம் கூற, அவர், மக்களிடம் கையெழுத்துப் பெற்று அவர் சார்பாக நீங்கள் அனுப்புங்கள் என்று ஆலோசனை கூற, அதன்படியே ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்று அனுப்பியும் வைத்தனர். புலவர் கலியபெருமாளுக்கு குடியரசுத் தலைவர் கருணை காட்டி தண்டனைக் குறைப்பு செய்வார் என்று தெரிந்தவுடன், தமிழக அமைச்சரவையைக் கூட்டி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அமைச்சரவை முடிவு செய்து அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. ஆக, கருணாநிதியன் அன்றைய நடவடிக்கை, அரசியல் பெருமை பெற முண்டியடித்துக்கொண்டு எடுத்த முடிவுதானே தவிர, கருணையின் பாற்பட்டதல்ல.

இந்த உண்மையை அப்படியே மறைத்து, தானே முன்னெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாக இப்போது அறிக்கை விடுக்கிறார். “புலவர் கலியபெருமாள் மீது பொய் வழக்குப் போட்டு தண்டனை வாங்கித் தந்ததும் கருணாநிதிதான். பிறகு, அவருடைய தண்டனையைக் குறைக்குமாறு ஆளுநருக்குச் சொன்னதும் கருணாநிதிதான ்” என்று அந்த நிகழ்வை முழுவதும் அறிந்தவர் கூறுகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக, 5வது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி, அப்போது இந்த மூவரின் மரண தண்டனையை குறைக்குமாறு வந்த கோரிக்கைகளையெல்லாம் - தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் கூட்டணி தர்மத்தோடு - நிராகரித்து வந்தவர், இப்போதுள்ள முதல்வரின் நேர்த்தியான நடவடிக்கையையும் தவறான புரிதலுக்கு உட்படுத்த முனைந்திருப்பது தரமற்ற மனப்போக்காகும்.

எந்த ஒரு குற்றச்செயலிற்கும் தண்டனை இருக்க வேண்டும், ஆனால் அது குற்றவாளியை மனிதனாக மாற்றுவதற்காக இருக்க வேண்டுமே தவிர, அவனை மாய்த்துவிடுவதாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட தண்டனை எதுவாயினும், அவை யாவும் சட்டப்பூர்வமான கொலை என்றே ஆகும் என்ற அடிப்படையிலேயே மரணத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் இயக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்த தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம், சட்டத்தைத் தாண்டிய மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments