Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமருடன் மோதும் பிரணாப்!

பிரதமருடன் மோதும் பிரணாப்!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக்குழு முன் ஆஜராக தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கை மட்டம் தட்டும் வகையில்,அதற்கெல்லாம் அவசியமில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடையே நிலவும் மோதல்களை அம்பலமாக்கியுள்ளது.
PTI

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சிகள் செய்த அமளியால், நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அடுத்து கூடவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரையாவது உருப்படியாக நடத்த வேண்டும் என்று பிரதமர் விரும்பினார்.

இந்நிலையில்தான், கடந்த டிசம்பர் 20 ஆம் தேதியன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர், 2ஜி விவகாரத்தில் எந்த கணக்குகளும் மறைக்கப்படவில்லை என்றும்,இது தொடர்பாக பொதுக் கணக்குக்குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஏனெனில் இதுவரை பிரதமர் பதவியில் இருந்த ஒருவர் பொதுக் கணக்கு குழு முன்னர் ஆஜரானதில்லை. அவ்வாறு பிரதமரை ஆஜராகுமாறு கூறும் அதிகாரமும் அதற்கு கிடையாது. அதையும் மீறி பிரதமரே முன்வந்து இக்குழு முன் ஆஜரானால் வரலாற்றில் அதுவே முதல் முறையாக இருக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் ஆதாயம் ஏதும் அடையவில்லை என்றபோதிலும், முறைகேடுகள் நடப்பது கண்முன் தெரிந்தும், அதனை தடுத்து நிறுத்தாமல் கையாலாகாதவராக அவர் இருந்துவிட்டார் என்ற குற்றச்சாற்றின் வீரியத்தை குறைக்கும் விதமாகவே, மன்மோகன் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது தம் மீது களங்கம் இல்லை என்று நிரூபிக்க பிரதமர் துடிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறினர்.
webdunia
PIB

அது ஒருபுறம் இருக்க, பொதுக் கணக்கு குழுவிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரதமரை அழைக்க அதன் தலைவரான பா.ஜனதாவை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியே தயங்கினார். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். அத்துடன் சபாநாயகரின் முடிவுக்கே இதனை விட்டுவிட ஜோஷி நினைப்பதாக தகவல் வெளியாக, அவர் சார்ந்துள்ள பா.ஜனதா கட்சியே அவர் மீது கடுப்பாகிவிட்டது.

கூடவே ஸ்பெட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பா.ஜனதா வலியுறுத்திக் கொண்டிருக்கையில், ஜோஷி அதனை ஆதரிக்கவில்லை. அத்துடன் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக முந்தைய பா.ஜனதா ஆட்சி காலத்தில் இருந்து நடத்தப்பட்ட ஒதுக்கீடு தொடர்பாகவும் விசாரணை நடத்த அவர் தயாராகி வருகிறார்.

இந்த தகவல்களெல்லாம் பா.ஜனதா மேலிடத்தை செம கடுப்பாக்க, மக்களவை பா.ஜனதா தலைவரான சுஷ்மா ஸ்வராஜோ," பொதுக்கணக்கு குழு விசாரணை முழுமையாக இருக்க முடியாது. இந்த குழுவால் கணக்குகளில் நடந்த தவறுகளை மட்டும் தான் பார்க்க முடியுமே தவிர எல்லாவற்றையும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாது" என்று வெளிப்படையாகவே ஜோஷியின் செயல்பாடுகளை சாடினார்.

இந்நிலையில்தான் பா.ஜனதாவில் ஏற்பட்ட இந்த கலகம், அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கும் தாவியது.

பிரதமர் என்னவோ மன்மோகன் சிங் தான் என்றாலும், சமயங்களில் பிரணாப் முகர்ஜிதான் அப்பதவியில் இருக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படும் விதமாக ஆட்சி மற்றும் கட்சி விவகாரங்களில் அவரது கைதான் ஓங்கி காணப்படுகிறது. கூடவே கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் "பிரச்சனை தீர்ப்பாளராக" பிரணாப்பைத்தான் காங்கிரஸ் முன்னிறுத்துகிறது.
webdunia
PIB

இதனால்தானோ என்னவோ, பிரதமரையே மட்டம் தட்டும் விதமாக அல்லது ஆதிக்கம் செலுத்தும் விதமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பொது கணக்குக்குழு முன் பிரதமர் ஆஜராகவெல்லாம் அவசியமில்லை என்று பிரணாப் முகர்ஜி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியது, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடையே நிலவும் கருத்துவேறுபாடுகளை பட்டவர்த்தனமாக அடையாளம் காட்டியது.

"பொது கணக்குக் குழுவிடம் ஆஜராவதாக பிரதமர் காங்கிரசிடம் பரிசீலிக்காமல் தெரிவித்துவிட்டார். என்னிடம் அவர் கேட்டிருந்தால், நான் இதை மறுத்திருப்பேன். சட்டப்படி, பொது கணக்குகளை பிரதமர் மக்களவையில் மட்டுமே தெரிவிக்க முடியும். பொது கணக்குக்குழுவிடம் அல்ல.

நாடாளுமன்ற குழு முன் பிரதமர் ஆஜராக கூடாது என்பதற்கு காரணம், பிரதமர் மக்களவைக்கும் அதில் இருக்கும் 543 உறுப்பினர்களுக்கும் மட்டுமே பதிலளிக்க வேண்டும். குறைந்தது 272 மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பிரதமர் ஆக முடியும். இத்தனை உறுப்பினர்கள் பிரதமர் முன் இருக்கின்றனர். ஆகையால் மக்களவைக்கு அவர் பதிலளிக்கலாமே தவிர ஒரு குழுவிற்கு மட்டுமல்ல" என்றெல்லாம் பிரணாப் மேலும் காட்டம் காட்ட, டெல்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது இதுதான் "ஹாட் டாபிக்" காக பரபரப்பாக பேசப்படுகிறது.

அதே சமயம் தாம் இவ்வாறு கூறுவதினால், தமக்கு பிரதமருடன் கருத்து வேறுபாடு என்று அர்த்தமல்ல என்றும் பிரணாப் மழுப்பியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவது உண்மைதான் என்று காங்கிரஸ் வட்டாரங்களே ஒப்புக்கொள்வதாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், "பொதுக் கணக்கு குழு முன்னர் ஆஜராவதென்று பிரதமர் எடுத்த முடிவு குறித்து தமக்கு தெரியாது என்று பிரணாப் கூறுவது, மூத்த தலைவர்களிடையே நிலவு தகவல் பரிமாற்ற இடைவெளியையே காட்டுகிறது. இது முற்றிலும் உண்மையற்றது என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது" என்று கூறினார்.
webdunia
FILE

பா.ஜனதா பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத்தோ, "மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் உள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமரின் கருத்துடன் ஒத்துப்போகவில்லையென்றால், பின் எந்த அடிப்படையில் அவர் பொதுக் கணக்கு குழு முன்னர் ஆஜராக தயாராக உள்ளதாக தெரிவித்தார் என்பதை இந்த நாடு அறிந்துகொள்ள விரும்புகிறது" என்றார்.

அதேப்போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவும், இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒற்றுமையாகத்தான் இயங்குகிறதா என்றும் சந்தேகம் வெளியிட்டார்.

திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி, அடுத்ததாக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தை உண்டு பண்ணியுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரம், இன்னும் யார் யாரிடையே மோதலை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை!

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil