Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

'பாஜக தேர்தல் அறிக்கை' - பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!
, புதன், 9 ஏப்ரல் 2014 (12:55 IST)
வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டுவிட்டது பாரதீய ஜனதா கட்சி.
BJP election manifesto release
அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்போவதாகவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டமான 370 ஆவது பிரிவை நீக்கப் போவதாகவும், சிறுபான்மையினரின் மதச்சட்டங்களை நீக்கி, ஒரே சிவில் சட்டம் கொண்டு வரவிருப்பதாகவும் கூறும் தேர்தல் அறிக்கை - இட ஒதுக்கீடு கொள்கையிலும் கை வைத்துவிட்டது.
 
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதியடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ‘சமாதி’ கட்டிவிட்டு அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு முறையைக் கொண்டு வரப்போவதாக கூறுகிறது.

இதுகுறித்து பாஜகவின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், இட ஒதுக்கீடு முறைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள 100 மாவட்டங்களை அடையாளம் கண்டு ஏனைய மாவட்டங்களோடு தரம் உயர்த்தும் முறையைக் கொண்டு வருவதாக இட ஒதுக்கீட்டு முறை இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
 
இட ஒதுக்கீட்டுக்கான சமூகக் காரணிகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டதாகவே தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடரும்; அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
webdunia
Babri masjid demolition
இந்த அறிக்கை அதற்கு நேர்மாறாக முன் வைத்திருக்கிறது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும்போது, கோயிலைக் கட்டும் மதவெறி செயல்திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.
 
காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, அந்த பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, மக்கள் கருத்தை அறிந்த பிறகே இந்தியாவுடன் இணைப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று இந்திய அரசு உறுதி தந்தது. 370-வது சிறப்பு உரிமைச் சட்டப் பிரிவு, அவர்களின் ‘தனித்துவம்’ கருதியே அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த உரிமையையும் பறிக்கப் போவதாக தேர்தல் அறிக்கை கூறுகிறது.

பாஜக அதிகாரத்துக்கு வந்துவிடுமேயானால், நாட்டில் கலவரங்களும், குழப்பங்களும் தலைதூக்கி நிற்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
webdunia
Hindu Terrorism
மோடியை பிரதமராக்க - பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள், இந்த இந்துத்துவா செயல் திட்டங்கள் குறித்தும் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான கொள்கைகள் குறித்தும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
 
பாஜகவின் தேர்தல் அறிக்கை எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். மதவாத கருத்துகளையே பிரதிபலித்து வருகிறது. 1998 ஆம் ஆண்டு அதன் தேர்தல் அறிக்கை “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத் தத்துவம்; அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தில் சில பிரிவினரை திருப்திப்படுத்தவும், அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்றி திருப்திப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று கூறியதோடு இந்தியாவில் பன்முகத்தன்மை ஏதும் கிடையாது. “ஒரே நாடு; ஒரே மக்கள்; ஒரே தேசம்” என்று முழங்கியது.
 
இந்துத்துவ கொள்கைகளை இப்படி வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாகவே செயல்படுத்தலாம் என்று பாஜகவில் ஒரு அணி கூறுகிறது. முரளி மனோகர் ஜோஷி போன்ற கடும் போக்குக் கொண்ட பிற்போக்குவாதிகள், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணமே கட்சிக்குள் நடந்த இந்தப் போராட்டம் தான்.
 
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாய சங்கு ஊதப்பட்டுவிட்டது; இனி மக்கள் பாடு..!

Share this Story:

Follow Webdunia tamil