Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடைபாதைக்கு கிரானைட்; குடியிருக்க இடிந்த வீடுகளா?

நடைபாதைக்கு கிரானைட்; குடியிருக்க இடிந்த வீடுகளா?
, சனி, 25 மே 2013 (17:26 IST)
FILE
நடைபாதைக்கு கிரானைட் கற்கள் பதிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் குடியிருக்க முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை விட, நடைபாதைகளை அழகு படுத்துவது தான் அரசின் முக்கிய கடமை என்று இத்திட்டத்தால் எண்ணத் தோன்றுகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபாதைகளுக்கு கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் மறுபுரம் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளும் பெரும்பாலானாவை சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலையில் உள்ளன.

சமீபத்தில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சியில் உள்ள 71 சாலைகளில் உள்ள நடைபாதைகளுக்கு(platform), 48.52 கி.மீ, தொலைவிற்கு, ரூ.42.75 கோடி செலவில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இப்பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தாங்களின் அத்தியாவசிய தேவையான வீடு கூட இல்லாமல் இருக்கின்றனர். தற்போது நடைபாதைக்கு கிரானைட் கற்கள் பதிப்பது அவசியம் தானா என்று தோன்றுகிறது. மேலும் இதுவரை தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட பெரும்பாலான குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. இது போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை முதலில் சரி செய்வதை விட்டுவிட்டு, நடைபாதைக்கு பெரிய அளவில் பணம் செலவு செய்து, கிரானைட் கற்கள் பதிப்பது அவசியமான ஒன்றா?

மேலும் இது போன்ற தரமற்ற வீடுகளை கட்டிய ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு என்ன தண்டனை கொடுத்துள்ளது. அவர்களின் வீடுகளை மட்டும் பெரும் செலவு செய்து அனைத்து வசதிகளுடனும், மிக உறுதியாகவும் கட்டிக்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள், மந்திரிகள் அனைவரும், இது போன்ற தரமற்ற வீடுகளில் வாழும் மக்களின் நிலையை உணர்ந்திருந்தால், இவ்வாறு அந்த கட்டடங்களின் ஆயுள் முடிவதற்குள், முழுவதும் இடிந்து நாசமாகும் நிலை ஏற்படுமா?

உதாரணமாக தமிழக அரசின் தலைமைச் செயலகமாக விழங்கும் புனித ஜார்ஜ் கோட்டை 1640 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. ஏறக்குறைய 350 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.

ஆனால் தற்போது அரசால் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் அதன் ஆயுட்காலம் முடிவதற்குள் காலாவதியாவதற்கு என்ன காரணம்?. புனித ஜார்ஜ் கோட்டை போல அவ்வளவு காலம் கூட சேதமடையாமல் இருக்குமாறு கட்டித்தர வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை. குறைந்தபட்சம் அரசின் விதிமுறைப்படி ஒரு கட்டடத்தின் ஆயுட்காலம் இவ்வளவு நாள் என்றால் அதில் முக்கால்வாசி காலமாவது கட்டடம் எந்த சேதமும் இருக்கலாம் அல்லவா?

அரசின் குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அனைத்தும் தற்போது அதன் ஆயுட்காலத்தில் அரை வயதை கடப்பதே பெரும் பாடாக உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர். இப்படியெல்லாம் பிரச்சனைகள் இருக்கும் போது, தற்போது நடைமேடைகளுக்கு கிரானைட் கற்கள் பதிப்பது அவசியமா?

மக்கள் நடப்பதற்காக நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கிறார்கள், ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையான அரசின் குடியிருப்புகள் மட்டும் இடிந்து, பாலடைந்து, மக்கள் குடியிருக்க தகுதியற்றதாக இருப்பது எந்த விதத்தில் சரியான ஒன்று.

அரசு நடைபாதைக்கு கிரானைட் பதிக்கட்டும், டைல்ஸ் பதிக்கட்டும், ஏன் தங்கத்திலேயே இழைக்கட்டும், ஆனால் அதற்கு முன்பாக இடிந்து குடியிருக்க தகுதியற்ற அரசின் குடியிருப்புகளுக்கு ஒரு மாற்று வழி செய்திருக்கலாம், அப்படிப்பட்ட கட்டடங்களை கட்டி மக்களையும், அரசையும் ஏமாற்றும் கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு தக்க பாடமும் புகட்டியிருக்கலாம். அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களின் குறைகளை நிறைவேற்றும் என்று நம்புவோம்.

என்னதான் நாம் சமாதானம் கூறிக் கொண்டாலும், இந்த நடைபாதை கிரானைட் திட்டம், "தகரத்திற்கு தங்க முலாம் பூசுவதே" என்பதில் மாற்றமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil