Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 24: பெரியார் நினைவு நாள் - கி.வீரமணி சிறப்பு பேட்டி

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2013 (19:39 IST)
டிசம்பர் 24 பெரியாரின் 40-வது நினைவு நாளை ஒட்டி திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழின் ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் சிறப்பு பேட்டி.
FILE

பெரியார் அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் முழு வீச்சுடன் பணியாற்றினார், பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் அரசியல், பண்பாட்டு வெற்றி என்ன?

தாராளமான வெற்றி..! அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பெரியாருடைய காலத்தில் அடிப்படையான செய்தி சமூக நீதி. சமூக நீதியை பொருத்தவரை மத்திய அரசாங்கத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இல்லாமல் இருந்தது. அதற்காக போராடிக் கொண்டிருந்தோம். மாநில அரசிலும் ஓரளவுக்கு போராட்டம் இருந்தது. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வந்த போது பெரியாரிடத்தில் சென்று பேட்டி கண்டது. அப்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 49 சதவீதமாகக் கூட உயர்த்தலாம் என்று கூறினார். அதுவரை 41 இடங்கள் மட்டுமே இருந்தது. காரணம் அரசியல் சட்டத்தில் 50க்கும் கீழே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதன் விளைவாகத்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவிகிதமாக கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இது அண்ணா அவர்களின் காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதுவே கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் பெரும் சாதனையாக கருதப்பட்டது.

இந்த சமூகநீதி காரணமாகவே பெரியார் அவர்கள் அரசியல் தளத்தைவிட்டு, காங்கிரசை விட்டு வெளியே வந்தார். சுயமரியாதை இயக்கம் வந்தது. சுயமரியாதை இயக்கம் என்பதன் அரசியல் நிலை என்று சொன்னால் அதுவே சமூகநீதி தான். சமூகநீதியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். தமிழகத்தை பொருத்தவரை எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து இட ஒதுக்கீட்டில் ரூ.9000 வருமான வரம்பு என்று ஒரு வருமான வரம்பை புகுத்தி பிடிவாதமாக செயல்படுத்தினார். ஆனால் அந்த சமயத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் செல்வாக்கு மிகுந்த எம்.ஜி.ஆர். 2 இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தார். அதன்பிறகு தான் தன்னுடைய நிலைப்பாடு தவறு என்று உணர்ந்தார். ஒரு சர்வ கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த பிரச்சனையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடுதான் சரி என்று அறிவித்தார்.

1980 - 1981 லிருந்து 69 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு என்று இருந்தது. அதற்கு ஒரு ஆபத்து மண்டல் கமிஷன் தீர்ப்பிலேயே 9 நீதிபதிகளைப் போட்டு இடஒதுக்கீடு பற்றி ஒரு Constitutional bench- ஐ உருவாக்கினார்கள். தடை விதித்தார்கள். நாங்கள் அந்த ஆணையை எரித்து சாம்பல் மூட்டை மூட்டையாக அனுப்பினோம். ரங்கநாத் மிஸ்ரா என்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்து மண்டல் கமிஷன் அறிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தது. இதனாலேயே வி.பி.சிங் பதவியை விட்டு போக வேண்டியதாயிற்று. ஏனென்றால் பாஜக வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். அவர்கள் மண்டலை காரணம் காட்டி ஆதரவை வாபஸ் பெற்றனர். கமண்டலைக் காட்டி மண்டலை விட்டார்கள் என்று வி.பி.சிங் சொன்னார்கள். வி.பி.சிங் ஆட்சியில் வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு வரும் என்று செயல்பட வைத்தது திராவிடர் கழகம். இவையனைத்தும் பெரியாருக்கு பிறகான வெற்றி..! இவற்றையெல்லாம் ஆட்சி நேரடியாக செய்ததென்றாலும் இதற்கு உந்து சக்தியாக கரணையாக இருந்தது திராவிடர் கழகம்தான்.
FILE

பண்பாட்டுத்தளத்தில் தங்களின் இலக்கு மற்றும் வேலைத்திட்டம் என்ன?

பண்பாட்டுத்தளத்தை பொருத்தவரை, பண்பாட்டுத்தளம் என்பது மிகவும் அடிப்படையானது. உதாரணமாக தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு. அதை இன்றைக்கு வந்த ஆட்சி ஒரு ஆரிய உணர்வு காரணமாக மாற்றியுள்ளது. அதை மாற்றினாலும் கூட மக்கள் மனதில் இருந்து அதை சுலபமாக மாற்றிவிட முடியாது. தை முதல் நாளை நாங்கள் ஒரு பெரிய விழாவாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஏனென்றால் 60 ஆண்டு சுழற்சி என்பது அறிவியல் பூர்வமானது அல்ல. ஆபாசமான புராணக் கதையைக் கொண்டது. ஆகவே புத்தாண்டு என்பது பொங்கலிலே இருந்துதான் வருகிறது என்பது மிக முக்கியமானது.

சுயமரியாதை திருமணம் என்று எடுத்துக் கொண்டால் பெரியார் அவர்கள் நடத்தி வைத்த சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்று 1952-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள். அதே உயர்நீதிமன்றத்தில் தற்போது அளித்த தீர்ப்பில் சடங்குகளோ, சம்பிரதாயங்களோ தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள். 7 அடி எடுத்து வைக்காததால்தான் அந்த திருமணம் செல்லவில்லை என்று தீர்ப்பு எழுதினார்கள். நாரதர்ஸ்மிருதியில் இருக்கிறது. பராக்கிரமஸ்மிருதியில் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆயிரக்கணக்கில் சுயமரியாதை திருமணங்கள் நடந்தது. நல்ல வாய்ப்பாக 1967 அண்ணா ஆட்சிக்கு வந்தார். என் ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்றார். சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கினார். இது அரசியல் ரீதியாக அடைந்த வெற்றி பெரியார் காலத்தில்.

பெரியாருக்கு பிறகு பண்பாட்டு தளத்தில் ஒரு பெரிய வியப்பு என்னவென்றால் பெரியாருடைய கருத்தை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் தற்போது தீர்ப்புகளாக சொல்லி வருகின்றன. இருந்தும் வைதீக மனப்பான்மை கொண்ட சிலர் பிற்போக்குத்தனமான தீர்ப்புகளை வெளியிடுகிறார்கள். ஓரினச் சேர்க்கை குறித்த தீர்ப்பு கூட அதன் வெளிப்பாடுதான். பெரியார் சொன்னது போலவே நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மனுதர்மம் என்று தலைப்பு போட்டு கட்டுரை வந்துள்ளது.

பண்பாடு என்பது மூளைக்குள்ளே மாற்றம் உண்டாக்குவது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆண், பெண் சேர்ந்து வாழ்ந்தாலே அது திருமணம்தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கண்ணன் என்ற நீதிபதி அந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பு நிலைத்துவிட்டது. இதுதான் பெரியார் கொள்கை. 1951-ல் சுயமரியாதை திருமணங்களைத் தடை செய்த நீதிமன்றம் சப்தபதி சுற்றி வர வேண்டும் அக்னி சாட்சியாக என்று தீர்ப்பளித்த அதே நீதிமன்றம் யார் சாட்சியும் தேவையில்லை; இருவர் இணைந்து வாழ்ந்தாலே போதும் என்று கூறியுள்ளது என்று சொன்னால் அது பெரியார் கொள்கையின் வெற்றி.
FILE

பெரியார் சொன்னார், திருமணம் என்பதே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவதுதான். இன்று உள்ள சூழலுக்கு தகுந்தவாறு ஒவ்வொன்றையும் நான் பக்குவமாக கூறி வருகிறேன். நண்பர்களாக வாழ வேண்டும் என்பதுதான் சிறந்தது. ஒரு நட்பை எப்படி நாம் முறித்துக் கொள்கிறோமோ அதுபோல பிடிக்கவில்லை என்றால் விலகிச் செல்லும் வாய்ப்பு இருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்வதற்கு மிகுந்த மனப்பக்குவம் வேண்டும். அவை காலத்தைத் தாண்டிய பெரியாரின் புரட்சிகரமான கருத்துக்கள். அதை இன்றைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பாக கொடுத்துவிட்டது. பண்பாட்டு தளத்தில் பார்த்தோமானால் ஃபெர்ட்டிலிட்டி சென்டர் ( Fertility Centre) என்ற போர்டுகளை பார்க்கிறீர்கள். இதற்கு என்ன பொருள் பிரம்மாவுக்கு வேலை இல்லை என்று பொருள். விழிக்கொடை, குருதிக்கொடை, உறுப்புக்கொடை, டிரான்ஸ்ப்ளாண்டேஷன் ஆப்பரேசன்ஸ் இதெல்லாம் முப்பது முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்கும் தெரியாத விஷயம். மடாதிபதிகளே இன்றைக்கு மருத்துவமனைக்குதான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மனுதர்மத்தில் பெண்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம், உதைக்கலாம் என்று இருந்தது. இன்றைக்கு கடுஞ்சொல் பேசினாலே தண்டிக்க சட்டம் வந்துவிட்டது. இதற்கெல்லாம் பின்புலத்திலே பெருமளவு இந்த இயக்கத்தின் பணி இருக்கின்றது.

ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு ( IC Quota) பற்றி முதலில் கோரிக்கை எழுப்பியது நீங்கள்தான். அந்த கோரிக்கை சட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள்?

தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும். ஜாதியை சமப்படுத்துவதற்குதான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தர தீர்வு அல்ல. அடிக்கடி சொல்லும் உதாரணம்தான். பாலம் கட்டும் வரை டைவெர்ஷன் ரோடு; மாற்று வழி; மாற்றுவழியில் எவ்வளவு நாள் போவது என்று கேட்டால் பாலம் கட்ட எவ்வளவு நாளாகுமோ அவ்வளவு நாள். அதற்காக தெளிவாகவே ஒரு திட்டம் திராவிடர் கழகம் கொடுத்துள்ளது. எப்படி பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம்களுக்கும், தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளோமோ அதுபோல ஐ.சி. கோட்டாவுக்கும் வழங்க வேண்டும். எப்படி எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி என்று பிரித்துள்ளோமோ அந்த வரிசையில் ஐ.சி. கோட்டாவை உருவாக்கி முதலில் 5 இடங்கள், நாள்பட நாள் பட 10 இடங்கள் என கூட்டி, மற்ற கோட்டாக்களை குறைக்க வேண்டும். இந்த சலுகையை கல்வியிலும், உத்தியோகத்திலும் கொடுத்து விட்டோம் என்று சொன்னால் ஜாதியை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஜாதி தானாக போய்விடும்.

ஜாதி என்பது ஒர ு Myth (மாயை). அது ஒரு புரட்டு. மக்கள் மனதில் அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஒரு கோடு போட்டு வைத்துக் கொண்டுவிட்டார்கள். பூமத்திய ரேகை சிங்கப்பூர் பக்கத்தில் இருக்கிறது என்று நீங்கள் போய் தேடிக் கொண்டிருக்க முடியுமா? அது Legal Fiction அவ்வளவு தான். அன்று ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதை ஆதிக்கவாதிகள் எடுத்துக் கொண்டனர். தொழில்ரீதியாக பிரித்தனர். அது படி‌ப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போதெல்லாம் தன் ஜாதியில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள் குறைந்து வருகிறார்கள். Caste No Bar, Religion No Bar என்பதெல்லாம் சாதாரணமாக வந்துவிட்டது.

ஒட்டுமொத்த தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட மக்களுக்கு அரசியல் தளத்தில் வழிகாட்டும் இடமாக பெரியார் திடல் இருந்திருக்கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் பெரியார் திடலின் கடமை என்னவாக இருக்கப்போகிறது?

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இந்தியாவை காவிமயமாக்கி இந்து ராஷ்டிரம் அமைக்க என்று செயல்படுகின்ற இந்த காலகட்டத்திலே அதற்கு நேர் எதிரான கொள்கை தளத்தை உடைய ஒரு அமைப்பை இந்தியா முழுக்க நீங்கள் தேடிப் பார்த்தால் அது திராவிடர் கழகம் தான். மோடி என்பவரை அறிவித்தவுடன் கொஞ்சம் வேகமாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு. ஏன் என்று சொன்னால் அவர்களுடைய வேகமான பிரச்சாரம். Money Power, Muscle Power, Media Power அவர்களிடம் உள்ளது. அதையெல்லாம் Mind Power மூலம் நாங்கள் வீழ்த்துவோம். ஆனால் தற்போது இந்த புரட்டுகளெல்லாம் நாங்கள் நினைத்ததை விட வேகமாக உடைகிறது. மோடியின் தோல்விக்கு நாம் அதிகம் வேலை செய்வதை விட அவர் அதிகமாக பேசினாலே போதும். ஒவ்வொரு கூட்டத்திலேயும் அவர் வேகமாக பேச பேச டெல்லி போலதான் ஆகும்.
FILE

த‌மி‌ழீழ விடுதலை‌ப் புலிகள் தமிழ்நாட்டில் முதன்முதலில் அணுகியது திராவிடர் இயக்கத்தையா? தமிழ் தேசிய இயக்கத்தையா?

திராவிடர் கழகத்தை.! எல்லோரும்தான் தன்னை திராவிடர் இயக்கம் என்கிறார்கள். பாஜகவுடன் சேரும் வைகோ கூட திராவிடர் இயக்கம் என்றுதான் சொல்கிறார். அதனால் தெளிவாக திராவிடர் கழகம்தான் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். முதலில் அவர்களுக்கு தெரிந்த இயக்கம் திராவிடர் கழகம். தெரிந்த இடம் பெரியார் திடல். புலிகளினுடைய முதல் கண்காட்சியே பெரியார் திடலில்தான். அதுமட்டுமில்லை பிரபாகரன் எங்கும் கிடைக்கவில்லை என்றால் பெரியார் திடலில் கேளுங்கள் என்று எம்.ஜி.ஆரே இங்குதான் ஆள் அனுப்பினார். ஆசிரியர் வீரமணியை கேட்டு பாருங்கள் என்று.

அப்போது ஒரு நெருக்கடி இருந்தது. ராஜீவ் காந்தியை சந்திக்க ஜெயவர்தனே பெங்களூருக்கு வந்தார். அப்போது எம்.ஜி.ஆர், விடுதலை ஆசிரியரை பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று கேட்டு பாருங்கள். உடனே அனுப்பியாக வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அதற்கு நான் அவர் இங்கு இல்லை; வந்தால் சொல்கிறேன்; நான் சொன்னால் கட்டுப்படுவார் என்றேன். அதேபோல் வந்தார் பிரபாகரன். சொன்னேன் கட்டுப்பட்டார். இதுபோல எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. இதையெல்லாம் விரிவாக பேசி நான் எ‌ன்ன செய்யப் போகிறேன். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்களிடையே ஓடிக்கொண்டிருக்கும் ரேஸில் பங்கேற்க நான் விரும்பவில்லை. கொள்கையளவில் ஆதரித்தோம்; இன்றும் கொள்கையளவில் ஆதரிக்கிறோம் அவ்வளவுதான்.

புலிகளுக்கு திராவிடர் கழகம் செய்த உதவிகள் குறித்து?

ஒவ்வொரு ஊரிலும் நிதியளிப்பு. எனது மூத்த மகன் திருமணம் அழைப்பிதழே போடாமல் நடத்தினோம் பெரியார் நினைவிடத்தில். நினைவிடத்தில் யாரும் திருமணம் நடத்த மாட்டார்கள். அது பெரிய புரட்சி. நினைவிடம் என்பதை வைதீக மொழியில் சொன்னால் சமாதி. வந்தவர்களே இங்குதான் திருமணமா? என்று கேட்டார்கள். இதில் என்ன தவறு. இதை விட முக்கியமான இடம் எங்கு உள்ளது என்று சொன்னோம். அப்போது புலிகள் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் அனைவருக்கும் உணவளித்தோம். திராவிடர் கழகம் எல்லா இடங்களிலும், எல்லா விதமான உதவிகளையும் செய்து வந்தது. பிறகுதான் மற்றவர்கள் வந்தார்கள். கண்காட்சி திராவிடர் கழகம் சார்பாக எல்லா இடங்களிலும் நடந்தது. நாங்கள் ஒரே அமைப்பைதான் நாங்கள் அடையாளம் கண்டோம். மற்ற அமைப்புகள் மீது எங்களுக்கு கோபம் கிடையாது. இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்கண் அடையாளப்படுத்துதல் அவ்வளவுதான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்பிரச்சனை ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. மதவாத அமைப்புகள் வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மீண்டும் ஈழப்பிரச்சனையை வைத்து வரும் தேர்தலை அணுகுவது சரியாக இருக்குமா?

முதலில் எங்களுக்கு மதவாத எதிர்ப்புதான். ஈழப்பிரச்சனையில் நாங்கள் ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறோம். எந்த ஆட்சியமைந்தாலும் இந்த வெளியுறவுக் கொள்கை இருந்தால் பயன்படாது. மதவாத ஆட்சி வந்தால் இந்த வெளியுறவுக் கொள்கை மாறிவிடும் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இந்தியா ஒரு பன்முகத் தன்மையுள்ள நாடு. இதில் பல மாநிலங்கள் எல்லை மாநிலங்கள். எனவே வெளியுறவுக் கொள்கை அமைக்கும்போது அந்தந்த மாநிலங்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது பலருக்கு புரியாது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே அங்கு காங்கிரஸ் அமைப்பு இருந்தது. அந்த காலகட்டத்திலேயே தோட்டத் தொழிலாளர்கள் ஒரு பக்கம்; யாழ்ப்பாணத் தமிழர்கள் இன்னோரு பக்கம்; கொழும்பில் குடியேறியவர்கள் - வியாபாரிகள் என்று மூன்று வகையினர் இருந்தார்கள். அந்த மூன்று வகையினரையும் பாதுகாக்க நேரு பிரதமராக இருந்த காலத்தில் யார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்களோ அவர்களிடம் கலந்து கொண்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். வெளியுறவுத்துறை கொள்கைகள் அந்த மாநிலத்தை கலந்து கொண்டு செய்ய வேண்டும்.

உதாரணமாக பங்களாதேஷ் பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று சொன்னால் மேற்கு வங்காளம், அசாமில் இருப்பவர்களுடைய கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் மத்திய அரசு உண்மையாக ஆளுவதற்கு மக்கள் கிடையாது. மாநில அரசுக்குதான் மக்கள் இருக்கிறார்கள். மத்திய அரசு என்பது ஒரு Abstract Concept. ஆனால் சட்டம், பவர் வைத்துக் கொண்டு பெரிதாக காட்டிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments