Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு: சட்ட திருத்தம் மட்டுமே காப்பாற்றும்

ஜல்லிக்கட்டு: சட்ட திருத்தம் மட்டுமே காப்பாற்றும்
, புதன், 2 பிப்ரவரி 2011 (19:41 IST)
FILE
“இத்தனை முன் நடவடிக்கைகள் எடுத்தும், ஜல்லிக்கட்டில் ஈடுபடுவோர் உயிரிழக்கும் நிலை தொடர்ந்தால், அதனை ஏன் தடை செய்யக்கூடாது? ஒவ்வொரு ஆண்டும் இப்படி அவர்கள் உயிரிழப்பதும், காயம்படுவதையும் அனுமதிக்க முடியாது” என்று இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க் கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.இரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு எச்சரித்துள்ளது.

இவ்வழக்கில் மத்திய விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்ற வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, இநத ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது, ஜனவரி 15 முதல் 19ஆம் தேதிவரை, ஒன்பது இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 215 போட்டியாளர்களும், 214 பார்வையாளர்களும் காயமுற்றுள்ளனர் என்று கூறியுள்ளதோடு, “இப்போட்டியில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை வைத்து இந்த விளையாட்டையே காட்டுமிராண்டித்தனமானது என்று கூறலாம் என்று கூறிவிட்டு, ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டும” என்று வாதிட்டுள்ளார்.

வழக்கு எதற்கு? காளையை காப்பாற்றவா? மனிதரைக் காக்கவா?
webdunia
FILE

2008ஆம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் இந்த வழக்கைத் தொடர்ந்தபோது அது கூறிய மிக முக்கியமான காரணம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தலிற்குள்ளாகின்றன, அதனை அனுமதிக்க முடியாது என்பதே. அந்த ஒற்றை அடிப்படையில்தான் இந்த வழக்கு அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக நேர் நின்று வாதிட்டுள்ள வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, பொங்கல் பண்டிகையின் போது நடந்த 9 ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 2 பேர் உயிரிழ்ந்தனர், 215 போட்டியாளர்கள் காயமுற்றனர் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, இதில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே கூறியுள்ளார். அப்படித்தான் பல நாளிதழ்கள் - தமிழனுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டுவரும் ஒரு ஆங்கில நாளிதழைத் தவிர - செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், நீதிபதிகள் இருவரும், அந்த அடிப்படையை விட்டுவிட்டு, அதில் களமிறங்கும் காளையர்கள் உயிரிழக்கின்றனரே என்று கேட்டுவிட்டு, அதனடிப்படையில் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது அடிப்படையில் வழக்கை திசை திருப்பும் முயற்சியாகும். வழக்கின் ஒரே அடிப்படை, அதில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா? இல்லையா? என்பதுதான்.

அதற்கான விளக்கத்தை தமிழக அரசும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்திவரும் பல்வேறு கிராம அமைப்புகளின் ஒன்றிணைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் பயிற்றுவிக்கப்பட்டவை, அதற்காகவே வளர்க்கப்பட்டவை என்று விளக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்தான், சர்க்கஸில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் போல இவையும் பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் (Performing Animals) என்று விலங்குகள் நலச் சட்டத்தில் உள்ள பிரிவின்படி ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதனை கிராம மக்கள் நடத்த முடியாதபடி செய்ய நிபந்தனையும் விதிக்கப்பட்டது!

இப்போது மனிதர்கள் உயிரிழக்கிறார்கள், காயப்படுகிறார்கள், காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவி இறக்குகிறார்கள் என்று எப்படியாவது ஜல்லிக்கட்டு தடை விதித்தே அழித்துவிடும் நோக்கில்...

விலங்குகள் நல வாரியம் வழக்கை இழுக்கிறது.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு என்று கூறும்போதே, அதில் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஆகிறதே. அதனை தெரிந்தும் உணர்ந்தும் அல்லவா போட்டியாளர்கள் இறங்குகின்றனர். எனவே அதில் ஏற்படும் உயிரிழப்பை வைத்து ஜல்லிக்கட்டிற்கு தடை விதிப்பேன் என்று மிரட்டுவது எவ்வாறு நியாயமாகும்?

குத்துச் சண்டை அனுமதிக்கப்பட்ட விளையாட்டுதான். அதில் காயத்திற்கும் உயிரிழப்பிற்கும் வாய்ப்புள்ள போட்டிதானே? நீதிமன்றம் தடை செய்யுமா? சர்க்கஸில் சிங்கத்தின் வாயில் தலையை விட்டு எடுக்கிறாரே ரிங் மாஸ்டர் - அதில் அச்சுறுத்தல் இல்லையா? மிக உயரத்தில் கயிற்றில் தொங்கிக்கொண்டு பல சாகசங்களை செய்கிறார்களே, அதில் ஆபத்தில்லையா? இதையெல்லாம் காரணம் காட்டி சர்க்கஸை தடை செய்ய முடியுமா?
webdunia
FILE

ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுகின்றனர் என்று ஒரு குற்றச்சாற்று தொடர்ந்து கூறப்படுகிறது. இதனை ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். நாடு முழுவதும் குதிரைப் பந்தயம் நடத்தப்படுகிறதே, அதில் ஓடும் குதிரைகளுக்கு ‘ரம’ ஊற்றப்படுகிறதே, அதைப்பற்றி விலங்குகள் நல வாரியம் எப்போது நடவடிக்கை எடுத்துள்ளது? அதெல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத் தெரியவில்லையா?

உயிரைப் பற்றி கவலைப்பட்டால் நமது நாட்டில் சாலையில் இறங்கி நடமாட முடியுமா? எனவே உயிரிழப்பு, காயம் ஆகிய அடிப்படைகளை வைத்து தமிழரின் வீர விளையாட்டை மதிப்பிடக் கூடாது என்று நீதிபதிகளுக்கு தமிழக அரசு சார்பில் தெளிவாக்க வேண்டும்.

மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய வேலை விலங்குகள் நல வாரியத்திற்கு எதற்கு? விலங்குகளை, அவைகளை எப்படி வளர்த்து பராமரித்தாலும், அது அதன் இயற்கையான இயல்பிற்கு முரணானதே. அதில் வீட்டில் வளர்க்கும் நாயில் இருந்து மிருக காட்சி சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வன விலங்குகள் வரை அத்தனையும் விலங்குகளை துன்புறுத்துவதே. அவைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன என்றெல்லாம் கூறுவது உண்மையை மறைத்தலே.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை வைத்துக்கொண்டு தமிழனின் பாரம்பரிய விளையாட்டிற்கு தடை விதிக்க இவர்கள் 3 ஆண்டுகளாக ‘பாகீரத பிரயர்த்தனம’ செய்து கொண்டிருக்கிறார்கள். இது தமிழனின் பண்பாட்டில் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் செய்யும் அத்து மீறலே.

இதனை நீதிமன்றத்தில் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள். கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், உணவின் பெயராலும் விலங்குகள் அறுத்தும், அடித்தும் கொல்லப்படுவதை இவர்கள் ‘செண்டிமெண்ட’ என்று சாதாரணமாக வர்ணித்துவிட்டு தப்பி விடுகிறார்கள். ஆனால் ஜெய்ராம் ரமேஸ் வரை தமிழனின் வீர விளையாட்டை - எந்தத் தகுதியும் இன்றி விமர்சனம் செய்கின்றனர்.

இந்த நிலையை தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியாது, அந்த அளவிற்கு துணிவுள்ள அரசும் இப்போது இல்லை. இதற்கு ஒரே வழி, விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 28இன் கீழமத, வழிபாட்டுக் காரணங்களுக்காக விலங்குகளை உயிர் பலி கொடுப்பதற்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ, அதே பிரிவில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் சமயத்தோடு தொடர்புடையது என்று கூறி விலக்குப் பெற வேண்டும். இது ஒரு திருத்தம் மட்டுமே. இந்த திருத்தை தமிழர்கள் போராடிப் பெற வேண்டும்.

ஜல்லிக்கட்டை காப்பாற்ற இது ஒன்றே வழி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil