Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவின் அத்துமீறலும் இந்தியாவின் சீற்றமும்

சீனாவின் அத்துமீறலும் இந்தியாவின் சீற்றமும்
, செவ்வாய், 18 ஜனவரி 2011 (18:03 IST)
FILE
“தங்களுடைய முன்னேற்றத்தை ‘அமைதியான எழுச்சி’ (Peaceful rise) என்று கூறிக்கொண்டாலும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படும் உள்நோக்கத்தை வைத்தே சீனா மதிப்பிடப்படும” என்று கூறி, அண்டை நாடான சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பொதிந்துள்ள திட்டங்களைத் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம் என்பதை மிக நேர்த்தியாக புரிய வைத்துள்ளாரஇந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ்.

இந்திய - சீனா உறவு குறித்து புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆற்றிய உரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த அளவிற்கு கசந்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில், “ போட்டியும் ஒத்துழைப்பும் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை பேச்சுவார்த்தையிலும் மூலமும், இராஜதந்திர ரீதியிலும் தீர்த்துக்கொள்ளும் சம நிலை இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவின் உணர்வுகளை தாங்கள் மதிக்கிறோம் என்பதை சீனா உணர்த்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய அண்டை நாடு என்பது மட்டுமன்றி, உலகப் பொருளாதாரத்தில் ஏற்றமிகு பங்கு வகிக்கும் நாடாக இருக்கும் சீனா, இந்தியாவுடனான தனது தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள ஒரு வழி(சமாதான)ப் பாதையை என்றைக்கும் நாடியதில்லை என்பதையே அதன் சமீபத்திய இரண்டு நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன.

webdunia
FILE
ஒன்று, ஜம்மு - காஷ்மீரின் அங்கமான லே பகுதியில், இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் சாலை போடும் பணியை, சீன இராணுவம் நேரடியாக தலையிட்டு நிறுத்தியது. மற்றொன்று, முதலில் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கும், இப்போது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரை பதித்து அதனை கடவுச் சீட்டில் இணைத்து வழங்கியதாகும்.

இந்த இரண்டுமே, ‘இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைத் தகராறை பேச்சுவார்த்தையின் மூலம் இணக்கமாகத் தீர்த்துக் கொள்வத’ என்கிற ஒப்புக் கொண்ட நடைமுறைக்கு எதிரானது ஆகும்.

webdunia
FILE
எல்லைத் தகராறு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 14 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பரிமாறிக்கொள்ளப்படும் விவரங்களை இதுவரையில் இரு நாடுகளுமே வெளியிடவில்லை. இறுதித் தீர்வு எட்டப்படும் வரை விவரங்களை வெளியிடுவது தேவையற்றது என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை, இரு நாடுகளின் உயர் மட்ட பிரதிநிதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட பணிக் குழுக்களுக்கு (Joint Working Group) இடையே நடத்தப்பட்டதாகும். இந்தியக் குழுவிற்கு (கடைசியாக நடந்தத பேச்சுவார்த்தையில்) தேசப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனும், சீன குழுவிற்கு அந்நாட்டு அயலுறவு துணை அமைச்சர் தாய் பிங்குவாவும் தலைமை வகித்தனர்.

கடைசியாக நடந்த 14வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் இருந்து எல்லையை குறிக்கும் வரை படம் பரிமாறப்பட்டுள்ளது. அதற்கு சீனா பதில் வரைபடம் தரும் போது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இப்படி இரு அரசுகளின் உயர் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது, எல்லையில் தங்களுடைய ‘எண்ணத்திற்கு ஏற்ப’ ஆளுமையை செலுத்தி நேரடியாக தகராறை உருவாக்குவது எவ்வாறு ஏற்றுக்கொள்ளத் தக்க நடவடிக்கையாக இருக்க முடியும்?

ஜம்மு - காஷ்மீரை பொறுத்தவரை, அது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு பேசி வருகின்றன. அது எந்த அளவிற்கு சரியானது என்பது விவாதத்திற்குரியது என்றாலும், அப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தாங்கள் அங்கீகரிக்க முடியாது என்பதுபோல், அதற்கான எந்த அடிப்படையும் இன்றி, தனிக் காகிதத்தில் விசா வழங்குவது என்பது திட்டமிட்டே சீண்டுவது என்பதாகும். இப்படிப்பட்ட இரட்டை அணுகுமுறையைத்தான் நிருபமா ராவ் மிக டிப்ளமேடிக்காக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய சீனா எல்லைப் பிரச்சனை என்பதே, சீனாவால் திபெத் ஆககிரமிக்கப்பட்டதை இந்தியா ஏற்றுக்கொ்ண்டதால் வந்த வினையாகும். ஒரு பக்கம் திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று ஏற்றுக்கொண்டுவிட்டு, பிறகு திபெத்தியர்களின் நியாயமான அரசியல் உரிமை போராட்டத்தை முன்னெடுத்துவரும் அவர்களின் ஏகோபித்த தலைவர் தலாய் லாமாவிற்கு அடைக்கலமும் கொடுத்துவிட்டு, அவரை அரசியல் செய்யாதே என்றும் தடையும் போட்டுள்ளது இந்திய அரசு!

webdunia
FILE
திபெத்தை சீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான், இன்றைக்கு அது அருணாச்சல பிரதேசத்தை திபெத்தின் தென்பகுதி என்று சீனா அதிகாரப்பூர்வமாகவே கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் பரிமாறப்பட்ட விவரங்களின் படி, அருணாச்சல பிரதேசத்தின் ஒரு மாவட்டமான தவாங்-கை சீனப் பகுதியாக விட்டுத் தந்துவிட்டால், தங்களுடைய தென் பகுதி (இந்தியாவின் கிழக்குப் பகுதி) எல்லைப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளத் தயார் என்று சீனா கூறியிருந்தது. ஆனால் இப்போது மொத்த மாநிலத்தையும் திபெத்தின் தென்பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடுகிறது!

திபெத்தின், திபெத்தியர்களின் தலைவராக உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலாய் லாமா, அருணாச்சலத்தை இந்தியாவின் அங்கம் என்றே அங்கீகரித்திருக்கிறார். எனவே, இது வரலாற்று ரீதியாக தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனை என்கிற நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை தொடரும் என்று இரு நாடுகளும் அறிவித்துள்ள நிலையில், தனிக் காகிதத்தில் விசா வழங்கி பிரச்சனையை உண்டாக்க சீனா ஏன் முற்பட வேண்டும்?

அப்படியானால், நிருபமா ராவ் கூறுவதுபோல் சீனத் தலைமையின் உள்நோக்கமென்ன என்கிற கேள்வி எழுகிறது. அது இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பானது - அதாவது போரை உருவாக்கும் தன்மை கொண்டாதாகிறது. இது எல்லை வாழ் மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது.

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டிய எல்லைக்கோடு பிரச்சனையை, முரட்டுத்தனமான மேலாதிக்கத்துடன் தீர்த்துக்கொள்ள சீனா முற்படுமானால், உடனடியாக இல்லாவிட்டாலும், ஒரு குறுகிய எதிர்காலத்தில் இவ்விரு நாடுகளும் போரை சந்தித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிடும். இதுவரை சீனாவின் வலித்த கரங்களின் விளையாட்டை இந்திய தரப்பு அமைதியாக கையாண்டு வந்துள்ளது. ஆனால் இது இப்படியே தொடரும் என்று கூற முடியாது. ஏனெனில் சீனத்திற்கு இணையாக என்ற கூற முடியாவிட்டாலும், இந்தியாவும் அணு ஆயுத வல்லரசே. “சீனா அடித்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது” என்று ஏற்கனவே வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் ஒவ்வொரு நாடும் பொருளாதார சிக்கல்களில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கான தீர்வை அண்டை நாடுகளுடன் இணைந்தே - பொருளாதார, வர்த்தக உறவுகளின் மூலம் - தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இரண்டாவது உலகப் போர் வரை பல நாடுகள் கையாண்ட யுக்தியான, தங்களுடைய நாட்டின் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு காண போரை நாடுவது என்கிற திசை திருப்பலில் இன்றைக்கு எந்த ஒரு சக்தி மிக்க நாடு ஈடுபட்டாலும் அது எதிர்வினையாகிவிடும்.

நியாயத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வுகளை நோக்கி நாடுகள் முன் செல்ல வேண்டும். அதைத் தவிர்த்து போர் பாதையை தேர்வு செய்தால் - அது எப்படிப்பட்ட வல்லரசாக இருந்தாலும் - அந்தப் பாதையை தேர்வு செய்யும் நாட்டை அதன் பொருளாதாரமே அழித்துவிடும். இதுதான் இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனிக்கு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil