Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதிய‌ற்ற ‌நிலையை எ‌ட்டுவது எப்படி? - அம்பேத்கர்

சாதிய‌ற்ற ‌நிலையை எ‌ட்டுவது எப்படி? - அம்பேத்கர்
, செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (21:29 IST)
சாதி என்பது ஒரு கருத்தியல், ஒரு மனநிலை. இதை அழிப்பதற்கான வழி இதுபற்றி இந்துக்கள் கொண்டிருக்கும் கருத்தை மாற்றுவதேயாகும். இந்துக்கள் மனிதத் தன்மையற்றவர்களாக - கொடுமதியினராக இருப்பதால்தான் சாதியைப் பின்பற்றகிறார்கள் என்று கூற முடியாது. அவர்கள் ஆழ்ந்த மத உணர்ச்சி நிரம்பியவர்களாக இருப்பதால்தான் சாதியைப் கடைப்பிடிக்கிறார்கள். சாதியின்படி நடப்பது அவர்களுடைய தவறன்று. தவறு அவர்களுடைய மதத்தில்தான் இருக்கிறது. இந்து மதம்தான் சாதிக் கருத்தை ஊட்டி வளர்க்கிறது.

FILE
ஆகவே உண்மையான எதிரி சாத்திரங்களேயாகும். ஏனெனில் சாத்திரங்கள்தாம் சாதிவழிப்பட்ட மதத்தைக் கற்பிக்கின்றன. சாத்திரங்களும் இதிகாசப் புராணங்களும் மேலானவை என்ற நம்பிக்கையைப் பொசுக்குங்கள். சாத்திரங்கள் மற்றும் வேதங்களின் அதிகாரத்தை, புனிதத்தை, தெய்வத்தன்மையை அழித்திடுங்கள். சாத்திரங்களுடன் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் விடுதலை கொடுங்கள். அதன்பிறகு அவர்கள் நீங்கள் யாரும் சொல்லாமலேயே கலப்புத் திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்துக்களுக்க இயல்பாகச் சமூகத் தலைவர்களாகவும் அறிவாளிப் பிரிவினராகவும் இருக்கின்ற பார்ப்பனர்கள், புரோகிதர்களின் அதிகாரத்தையும் தனி மரியாதையையும் அழிக்கின்ற போராட்டத்திற்குத் தலைமை ஏற்கமாட்டார்கள். ஏனெனில் வலது கையே இடது கையை முறித்திட முனையுமா? முனையாது.

ஆகவே புரோகிதம் செய்யும் உரிமை பார்ப்பனங்களுக்கே பாரம்பரியமாக இருந்து வருவதை ஒழித்து அதைச் சனநாயகப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சியடைந்து பட்டயம் பெறுகின்ற எந்தவொரு இந்துவுக்கும் புரோகிதம் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், புரோகிதர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். இப்படிச் செய்து பார்ப்பனியத்தைக் கொன்று இந்து மதத்தைக் காப்பாற்றுங்கள்.

இந்துக்களுக்கெனப் பொதுவான ஒரு மதக்கொள்கை நூல் தேவை என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். ஒழுக்க நெறிகளுக்குப் புத்துயிரூட்ட வேண்டிய தேவை இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது. இதைச் செய்யாமல் தள்ளிப்போடுவது ஆபத்தானதாகும் என்பதே அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரை அளிக்கும் சிறந்த அறிவுரையாகும். இந்தச் சமூகத்தைப் புதிய கோட்பாடுகளின் அடித்தளத்தின் மீது திருத்தியமைக்க வேண்டும்.

அந்த அடித்தளம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலான கொள்கைகளுக்கு இசைந்ததாக - சுருக்கமாகச் சனநாயகம் உடையதாக இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் நோக்கமாகும். இவ்வாறு திருத்தியமைக்க வேண்டுமானால் வாழ்வியல் பற்றிய அடிப்படையான கருத்தியல்களையும் மதிப்பீடுகளையும் மனிதர்களைப் பற்றியும் மற்றவைப் பற்றியும் கொண்டு கண்ணோட்டங்களையும் மனப் போக்குகளையும் இந்துக்கள் அடியோடு மாற்றியமைக்க வேண்டும்.

அந்த ஆய்வுக் கட்டுரையின் இறுதியில் இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகளாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு, இந்துக்களுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். "இந்துச் சமூகம் சாதியற்ற சமூகமாக மாறினால்தான் அது தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய வலிமையைப் பெறமுடியும். அத்தகைய அகவலிமையைப் பெறாதவரையில் இந்துக்களுக்கான சுயராச்சியம் என்பது அடிமை நிலையை நோக்கி எடுத்து வைக்கும் மற்றோர் அடியாகவே அமையும்."

ஜாட்-பட்-தோடக் மண்டல் கொண்டுள்ள இதே நோக்கம் நாடு தழுவியதொன்றாக இருப்பதால் அதனுடைய முயற்சிகளில் அது வெற்றிபெற வேண்டும் என்று விரும்புவதாக அம்பேத்கர் ஆய்வுக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil