Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணை மனு நிராகரிப்பு நீதியின் பாற்பட்ட செயலல்ல

கா.அய்யநாதன்

கருணை மனு நிராகரிப்பு நீதியின் பாற்பட்ட செயலல்ல
, புதன், 31 ஆகஸ்ட் 2011 (17:54 IST)
FILE
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்த பிறகு இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

பேரறிவாளனும், முருகனும், சாந்தனும் அனுப்பிய கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்று செய்திகள் கூறினாலும், அவர்களின் ‘கருணை மனுக்களை நிராகரிக்குமாறு’ உள்துறை அமைச்சகம் உறுதியாக அளித்த பரிந்துரையை ஏற்றே - அரசமைப்புச் சட்டப்படி வேறு வழியில்லை என்கிற காரணத்தினால் - இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். எனவே, கருணை மனுக்களை மத்திய காங்கிரஸ் அரசு நிராகரித்துவிட்டது என்றோ அல்லது உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது என்றோதான் கூற வேண்டும்.

இந்த மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது தமிழின உணர்வாளர்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் பெருத்த ஏமாற்றத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவிற்கு எதிர்ப்பு உருவாகக் காரணம், ஒன்று, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்த மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனை, அவர்கள் செய்ததாக சட்டப்படி நிரூபிக்கப்பட்ட குற்றத்தோடு ஒப்பிடுகையில் மிக அதிகமானது என்பதும், இரண்டு, கருணை மனுக்களை 11 ஆண்டுக்காலம் கிடப்பில் வைத்திருந்த பிறகு இப்போது அதனை ஏற்காமல் நிராகரித்திருப்பதாகும்.

இரண்டாவது காரணம், நியாய ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் கொண்டதாகும். ஏனெனில், இராஜீவ் கொலையில் இவர்களின் பங்கு இருந்தது என்பது இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டப் பிறகு, அதனை உடனேயோ அல்லது கருணை மனு அனுப்பப்பட்ட ஒரிரு ஆண்டுகளிலேயோ நிறைவேற்றப்பட்டிருக்கமானால், அந்த வடு இன்று ஆறிப்போய், வரலாற்றின் நீதியற்ற மரண பக்கங்களில் ஒன்றாக ஆகியிருக்குமே தவிர, பெரிய சர்ச்சையாகியிருக்காது.

ஆனால், தங்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட 1999ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2000வது ஆண்டில் குடியரசுத் தலைவருக்கு இவர்கள் கருணை மனுக்களை அனுப்பியிருந்தனர். 11 ஆண்டுகள் கிடப்பில் வைததுவிட்டு, இப்போது கருணை மனுக்களை நிராகரித்திருக்கிற நிலையில், அவர்கள் கிட்டத்தட்ட ஒரு ஆயுள் தண்டனையையே அனுபவித்துள்ளார்கள் என்றாகிறது. ஆயுள் தண்டனை என்பதற்கு கால அளவு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லையென்றாலும், 14 ஆண்டுகள் என்பது ஒரு வரையறையாக கொள்ளப்பட்டு, அதற்குள் அந்தக் கைதியின் நடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு முன் விடுதலை செய்யப்படுவதும் உண்டு.

இதுதான் இந்தியா முழுவதும் - சில விலக்குகள் தவிர - பொதுவாக கடைபிடிக்கப்படும் சிறைமுறையாக உள்ளது. எனவே, 11 ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட ஆயுள் தண்டனைதான். இதற்குப் பிறகு, இப்போது கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதால், இவர்களைத் தூக்கில் போட்டுக் கொன்றால், அது ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனை வழங்கியதாக ஆகாதா? என்பதே சட்ட ரீதியான கேள்வியாகும்.

கருணை மனுக்களின் மீது இறுதி முடிவு எடுக்க மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்வதை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஏற்கத்தக்கதே என்று கூறியுள்ளது. ஆனால், அதற்கும் மேலான காலத்திற்குக் கருணை மனுக்களின் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததுள்ளது மட்டுமின்றி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் அறிவித்துள்ளது. இதற்கு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை எடுத்துக்காட்டாக அளிக்கலாம்.

webdunia
PTI
1.சவாய் சிங் - எதிர் - இராஜஸ்தான் அரசு வழக்கு, 1987; 2. டி.வி.வாதீஸ்வரன் - எதிர் - தமிழ்நாடு அரசு வழக்கு, 1983; 3. ஷேர் சிங் உள்ளிட்டவர்கள் - எதிர் - பஞ்சாப் அரசு, 1983 ஆகிய வழக்குகளில், கருணை மனுக்களின் மீது மத்திய, மாநில அரசுகள் தாமதாகமாக முடிவெடுக்கும்போது, மரண தண்டனையை எதிர்பார்த்திருக்கும் கைதி, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 21இன் கீழ் வாழ்வுரிமை கோரி சட்ட நிவாரணம் பெறுவதை உறுதி செய்துள்ளது மட்டுமின்றி, அரசமைப்புப் பிரிவு 226இன் கீழ் நீதிமன்றத்திற்கு உரிய அதிகாரத்தின் கீழ் - மேற்கண்ட வழக்குகளில் - மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உள்ளது.

இவ்வாறு கருணை மனுக்களின் மீது தாமதமாக எதிர் முடிவு எடுக்கப்படுவதனால் மரண தண்டனைக் கைதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும் பாதிப்பையும் உச்ச நீதிமன்றம் மிக ஆழமாக சுட்டிக்காட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக:

கருணை மனுவின் மீது பல ஆண்டுகள் தாமதித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் போக்கை இரண்டு ஆண்டுகளுக்கு (2009) முன்னர், ஜெகதீஷ் - எதிர் - மத்தியப் பிரதேச அரசு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்ச்சித்தது.

“மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள கொடூரத்தையும், அதனால் ஏற்படும் வலியைப் போன்றதே, அதனை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில் ஏற்படும் மனிதத் தன்மையையே பாதிக்கும் தாமதமாகும். மரண தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதனை நிறைவேற்றும் நாள் வரையிலான காலத்தில் தண்டிக்கப்பட்ட அந்த மனிதனை அது கொடூரமாக வதைக்கிறது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா?

எதற்காக இவ்வளவு தாமதித்து இந்த துயரத்தை அளிக்க வேண்டும்? இதற்கான பதில் தங்களுக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தாமதத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையையும் எடுத்துக் கூறியுள்ளனர். “மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகள் போல், அவர்களின் குடும்பத்தினரும், மனைவியும், பிள்ளைகளும், சகோதரர்களும், சகோதரிகளும் என்ன ஆகுமோ என்ற நிலையற்ற மன நிலையில் அதே துயரத்தை அனுபவித்து வந்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களை ஏன் இப்படி மோசமான வகையில் நடத்திட வேண்டும் என்பதே எங்களது கேள்வியாகும்” என்று கூறியுள்ளனர்.

எனவேதான், கருணை மனுக்களின் மீது பல ஆண்டுகள் தாமதித்து எதிர் முடிவு எடுப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்பதில்லை. அது சரி, இதையெல்லாம் மத்திய அரசு, குறிப்பாக, கருணை மனுவை நிராகரிக்குமாறு பரிந்துரை செய்த உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியாதா? நிச்சயம் தெரியும். இருந்தாலும், தங்கள் தலைவரின் கொலை வழக்கில் சட்டத்தின் பாற்ப்பட்டோ அல்லது நியாயத்தின் பாற்ப்பட்டோ முடிவெடுப்பதை விட, அந்த வேலையை நீதிமன்றத்திற்கு தட்டி விட்டுள்ளது அவ்வளவுதான்! நீதிமன்றம் இவர்களின் கருணை மனு நிராகரிப்பு நியாயமற்றது என்று முடிவு செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தால், ‘அது நீதிமன்றத்தின் முடிவு, நாங்கள் என்ன செய்வது’ என்று கூறிவிடலாம் அல்லா? இரண்டு மாநில மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நதி நீர் மற்றும் அணைப் பிரச்சனைகளிலேயே எந்த முடிவும் எடுக்காமல், நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று இருக்கும் மத்திய அரசுக்கு இந்த வழியெல்லாம் தெரியாதா என்ன?

webdunia
FILE
எனவே, இந்த மூவரும், இதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட அஃப்சல் குரு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டா தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் புல்லர் ஆகியோரும் மாநில உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடி தண்டனை குறைப்பு பெறும் வாய்ப்பு உள்ளது.

இப்படிப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய மற்றொரு விடயம், உச்ச நீதிமன்றத்தால் ‘அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டிய தண்டன’ என்று வரையறை செய்யப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்டவர், அந்த அளவிற்கு கடுமையானதாக கருதப்படும் குற்றத்தைச் செய்துள்ளாரா என்கிற வினாவிற்கு விடை தேட வேண்டியதும் அவசியமாகிறது.

எடுத்துக்காட்டாக, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இப்போது கருணை மறுக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய எவரும் அந்தக் கொலை நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்றவர்கள் அல்லர் என்பது வழக்கு விசாரணையிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தியை கொல்லப் பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டை இயக்க 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது மட்டுமே பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டக் குற்றம். அதனை அவர் வாங்கிக் கொடுத்ததாக அவர் வாயாலேயே அளிக்கப்பட்ட (அவரை துன்புறுத்தி பெறப்பட்ட) வாக்குமூலத்தைக் கொண்டு அவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். அது உண்மையென்றே ஏற்று நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. வழங்கப்பட்ட தண்டனை மரணம்! ஏற்க முடிகிறதா? இந்த பேட்டரியை பேரறிவாளன் அல்ல, வேறு எவர் வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம், எனவே கொலைக்கான முக்கிய செயல் அதுவல்ல. இருந்தும், இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றால், அது குற்றத்திற்கு நிகரான தண்டனை அல்ல. இதனை இப்படி ஒரு வாதத்தின் மூலம் நிறுவலாம்: கொலைக்கு உதவியவருக்கே மரண தண்டனை என்றால், கொலை செய்தவருக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? இரட்டை மரண தண்டனையா? எனவே, ஒருவர் இழைத்த குற்றத்திற்குத் தண்டனை என்பதிலும், அந்த தண்டனைக்கான நியாயம் இருக்க வேண்டும்.

இந்தப் பார்வை நமது நாட்டின் நீதிமன்றங்களில் காணாத ஒன்றாக உள்ளது. எடுத்துக்காட்டாக: நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்ததாக மட்டுமே குற்றம் சாற்றப்பட்ட அஃப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்த இந்திய உச்ச நீதிமன்றம், அதற்கான நியாயத்தைப் பற்றிப் பேசும்போது, ‘இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவருக்காவது மரண தண்டனை விதிப்பதன் மூலம் இந்த தேசத்தின் மனசாட்சியை நாங்கள் திருப்தி செய்ய முயன்றுள்ளோம்’ என்று கூறியது! என்ன விநோதம் இது? தேசத்தின் மனசாட்சியை திருப்தி செய்ய ஒருவரைக் கொல்ல வேண்டுமா? இது நீதி சார்ந்த சரியான பார்வையா? இதே பார்வைதான் இராஜீவ் கொலையில் ஏதாவது ஒரு விதத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாற்றிற்கு ஆளாக்கப்பட்ட இந்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்க அடிப்படையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, மரண தண்டனை என்பது ஒரு அதிகபட்ச தண்டனையாக இருக்கும்வரை, அது தண்டனைக்குறிய நீதி நோக்கமான ‘தண்டனை மனிதனை மாற்றவே, மாய்க்க அல்ல’ என்பது நிறைவேற்ற முடியாத கனவாகவே இருக்கும்.

webdunia
FILE
இராஜீவ் கொலை வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டோரின் ‘விதி’ இன்று தமிழக அரசின் கையில் உள்ளது. அரசமைப்புப் பிரிவு 161இன் கீழ் மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதன் மூலம், அவர்களுக்கு மறுக்கப்பட்ட நியாயத்தை தண்டனை குறைப்பின் மூலம் நிறைவு செய்யலாம் என்பதே மனிதாபிமானமிக்க செயலாக இருக்கும்.

வாழ்வுரிமையை பறிக்கும் எந்த தண்டனையும் தண்டனையல்ல, அது கொலையே.

Share this Story:

Follow Webdunia tamil