Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.அறிக்கையும் இந்தியக் குழுவின் பயணமும்

கா. அய்யநாதன்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (20:08 IST)
FILE
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது இந்திய அரசு காத்து வரும் மெளனம ், “அது சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிற்கிறது என்பதையே காட்டுகிறத ு ” என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக வந்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கொழும்புவில் இருந்து வெளிவரும் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று பேசியுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள “இந்திய அரசுக் குழுவின் பயணம் ஐ.நா.நிபுணர் குழு தொடர்பானது அல் ல ” என்றும் கூறியிருக்கிறார்!

இந்தியக் குழுவின் பயண நோக்கம், “இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் பற்றியதுதானே தவிர, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை தொடர்பானது அல் ல” என்று ராஜபக்ச கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் பற்றி விவாதிக்க அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோ அல்லது அவரது செயலராகவுள்ள நிருபமா ராவ் ஆகியோர் வந்தால் போதுமே, அதற்கு இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் வரவேண்டுமா? அல்லது இவர்கள் இருவரோடு பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாரும் வரவேண்டுமா?

இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் தொடர்பான பிரச்சனையென்றால் நிதித் துறை செயலர் வரலாம் அல்லது அதையும் விட முக்கியம் என்றால் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரலாம், ஆனால் இவர்கள் யாரும் வராமல் இந்திய அரசின் செயலர்கள் இருவரும், தேச பாதுகாப்பு ஆலோசகரும் வருவதற்கான காரணம் என்ன?

இந்த வினாவிற்கும் மறைக்காமல் பதிலளித்துள்ளார் ராஜபக்ச. “கொழும்பு வரும் இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட குழு, சிறிலங்காவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, அதிபரின் செயலர் லலித் வீரதுங்கா ஆகியோர் கொண்ட குழுவைச் சந்திக்கும ்” என்று கூறியுள்ளார்.
இந்திய அரசின் மூவர் குழுவும், சிறிலங்க அரசின் மூவர் குழுவும் சந்திப்பது என்றால், அதற்கு ஒரு பின்னணி இருக்க வேண்டுமல்லவா? அந்தப் பின்னணி என்னவென்பதை ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரை நன்கு கவனித்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.

போரை நடத்தி முடித்த குழுக்களின் சந்திப்பு

ஏனென்றால் அந்தப் போரை இறுதி வரை நடத்தியதே இந்த இரு குழுக்கள்தான்! இந்திய அரசின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருந்த - இப்போது மேற்கு வங்க மாநிய ஆளுநராக இருக்கின்ற - எம்.கே.நாராயணன், அப்போது அயலுறவு செயலராக இருந்த - இப்போது தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்ற - சிவ் சங்கர் மேனன், அன்றைக்கு பாதுகாப்புச் செயலராக இருந்த விஜய் சிங் ஆகிய மூவரும், இன்றைக்கு ராஜபக்ச குறிப்பிடும் அந்த மூவருடன் ஒவ்வொரு நாளும் கலந்து ஆலோசித்தே போரை நடத்தி முடித்தவர்கள்!

இதனை போர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியது மட்டுமின்றி...

FILE
சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் ( defence.lk) கோத்தபய ராஜபக்சவே எழுதியிருந்தார். “நாங்கள் மூவரும், அவர்கள் மூவருடன் ஒவ்வொரு நாளும் ஆலோசனை நடத்தியே இந்தப் போரை இறுதி வரை நடத்தினோம ்” என்று.

அன்று போர் நடந்தபோது இந்திய அரசுக் குழுவில் இருந்த விஜய் சிங்கிற்கு பதிலாக இப்போது பாதுகாப்புச் செயலராக இருக்கும் பிரதீப் சிங் உள்ளார். அன்றைக்கு அயலுறவுச் செயலராக இருந்த சிவ் சங்கர் மேனன், இன்றைக்கு தேசப் பாதுகாப்பு ஆலோசகராக தொடருகிறார். அவருடைய இடத்தை இப்போது அயலுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ் நிரப்பியுள்ளார் என்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

தமிழருக்கு எதிரான இனப் படுகொலைப் போர் நடத்தப்பட்டபோது ஒவ்வொரு நாளும் பேசி போரை நடத்தியவர்கள் இன்று மீண்டும் சந்திக்கப்போகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், இவர்கள் இணைந்து நடத்திய போரில், போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், இறுதிக்கட்ட போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும், மருத்துவமனைகள் மீது தெரிந்து குறிவைத்து தாக்குதல் - அதுவும் தொடர்ந்து நடத்தப்பட்டது என்றும், போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும், மருந்துப் பொருட்களும் சென்று சேராமல் தடுக்கப்பட்டுள்ளது என்பதும், பாதுகாப்பு வளையம் என்று கூறி அழைத்து அங்கு தஞ்சமடைந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீது கண்மூடித்தனமாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், சிறிலங்க அரச படைகளின் தாக்குதலே பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு இன்றைக்கு அறிக்கை தந்துள்ளது.

இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற குற்றங்களுக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்துப் பொறுப்பாக்கி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரையின் படி பன்னாட்டு அளவில் சுதந்திரமான ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதல் ஐரோப்பிய ஒன்றியம் வரை கூக்குரல் எழுப்பியுள்ளதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போரை நடத்திய அந்த இரு குழுக்களும் மீண்டும் சந்திக்கின்றன!

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர ்’ என்று கூறி, தமிழினத்தையே அழிக்கும் ஒரு போரை ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு நடத்திய இந்திய, சிறிலங்க அரசுக் குழுக்கள், அந்த படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொறுப்பாக்க வேண்டும் என்ற நிபுணர் குழு பரிந்துரையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி ஆராயவே சந்திக்கின்றனர். இரு நாடுகளின் அரசுகளையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கூடிய நிலை நிபுணர் குழு பரிந்துரையால் உருவாகியுள்ளது. அந்த அழுத்தமே அதிபர் ராஜபக்ச கூறும் ‘இரு தரப்பு உறவில் உள்ள பிரச்சன ை ’ என்ற மழுப்பலான வார்த்தைகள் ஆகும்.

ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் சிறிலங்க அரசு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே, நிபுணர் குழு அறிக்கையை பெற்றவுடனேயே அதனை சிறிலங்க அரசிற்கு வழங்கினார் பான் கி மூன். சிறிலங்க அரசு பதில் எதுவும் தந்திருந்தால் அதனையும் சேர்த்தே வெளியிட இருந்ததாகவும் பான் கி மூன் அலுவலக பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் கூறியிருந்தார். ஆனால் இதுநாள் வரை சிறிலங்க அரசு பதில் தரவில்லை, மாறாக, ஐ.நா.அறிக்கைக்கு எதிராக சிங்களர்களை தூண்டி விடுகிறது. அரசுக்கு ஆதரவாக நிற்குமாறு தமிழர்களை மிரட்டுகிறது.

இக்கட்டில் சிக்கிக்கொண்ட இந்திய அரசோ மெளனம் காக்கிறது. அந்த மெளனத்தின் பொருள் எங்களை ஆதரிப்பது என்பதே என்கிறார் ராஜபக்ச. இந்திய அரசுக்கு வேறு வழி ஏது? படுகொலையில் பங்காளியாகிவிட்டு, சட்டம் துரத்தும்போது ஓடி விட முடியுமா? இலங்கைப் பங்காளிதான் விட்டுவிடுவாரா? அதுதான் போர் முடிந்த உடனேயே கூறினாரே ராஜப்கச, “நான் இந்தியாவின் போரைத்தான் நடத்தினேன ்” என்று! அதற்கு இன்று வரை பதில் சொல்லாமல் மெளனம் காத்தது இந்திய அரசு. இன்றைக்கு பதில் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது.

அதற்குத்தான் கூட்டாளியோடு கூடி ஆலோசிக்க கொழும்பு செல்கிறது இந்திய அரசுக் குழு. செல்லட்டும், பேசட்டும், பேசிய பிறகு தங்கள் நிலையை கட்டாயம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் அல்லவா? அன்று தெரியும் இதுவரை மறைத்த உண்மை முகம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments