Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணர்வுகளை மதிக்கும் உன்னதத் தீர்மானம்

கா.அய்யநாதன்

உணர்வுகளை மதிக்கும் உன்னதத் தீர்மானம்
, புதன், 31 ஆகஸ்ட் 2011 (17:47 IST)
FILE
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை இந்தியக் குடியரசுத் தலைவர் கருணையுடன் மறு பரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மனிதாபிமானம் கொண்டோர் வரவேற்கும் நடவடிக்கையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161இன் கீ்ழ் மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளில் இருந்து அரசியல் கட்சிகள் வரை வேண்டுகோள் விடுத்தபோது, அது அரசியல் சட்ட் ரீதியாக சாத்தியமில்லை என்று சட்டப் பேரவையிலேயே விளக்கமளித்தார் முதல்வர் ஜெயலலிதா. அவை விதியெண் 110இன் கீழ் அவர் விடுத்த அறிக்கையில், இந்திய அரசமைப்புப் பிரிவு 257 (1)இன் படி, ஒரு பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துவிட்ட நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறினார்.

இதனைக் கூட ‘தப்பித்தல் வாதம’ என்றசிலர் விமர்ச்சித்தனர். ஆயினும் தமிழ்நாட்டு மக்களிடையே, மாணவர்களிடையே, தமிழர் உரிமைக்காக போராடிவரும் கட்சிகள் ஒன்று திரண்டு மரண தண்டனைக்கு எதிராக உருவாக்கிய எதிர்ப்பை, அதன் நியாயத்தை நன்கு புரிந்துகொண்ட நிலையிலேயே தமிழக முதல்வர் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி வைத்துள்ளார். முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததால், இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்ட்ட இத்தீர்மானத்தின் வலிமையையும், தன்மையையும் குடியரசுத் தலைவர் முழுமையாகப் புரிந்துகொண்டு, இம்மூவரின் கருணை மனுவை நிராகரித்த முடிவை மறு பரிசீலனை செய்வார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

தமிழக சட்டப் பேரவையின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கே முன்னுதாரணம் ஆகும். பொதுவாக, மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் கருணை மனு இறுதியாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றால், அதன் பிறகு அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாட முடியும். அதற்கான நிதி வசதி உள்ளவர்கள் மட்டுமே தேர்ந்த வழக்குரைஞர்களை நியமித்து வாதிட முடியும். ஆனால், இந்தியா போன்றொரு நாட்டில், இப்படிப்பட்ட கடும் தண்டனை விதிக்கப்படுவோர் பலருக்கும் அந்த வாய்ப்பு இல்லாததால் தூக்குக் கயிற்றில் உயிரை விட்டுள்ளனர்.

webdunia
FILE
இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் மூவரும், கொலைச் சதியிலோ அல்லது குற்றச் செயலலிலோ நேரடியாக ஈடுபட்டவர்கள் அல்ல என்பதாலும், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் மரண தண்டனை வழங்கப்படும் அளவுடையதாகாது என்பதாலுமே, அவர்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெருமளவில் எழுந்தது.

அந்த நியாயத்தை உணர்ந்த தமிழக முதல்வர், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தையே கருணை மனுவாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும

உலகெங்கிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது. மரண தண்டனை விதிப்பதால் கடு(கொடு)மையான குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என்பது உண்மைக்குப் புறம்பானது என்பதை அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் பல நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளன. அதனால்தான் ஐ.நா.வின் மரண தண்டனை ஒழிப்பு உடன்படிக்கையில் இதுவரை 139 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. அப்படிப்பட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் இந்த மூன்று பேரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பது மட்டுமின்றி, ஒரு முன்னோடித் தீர்மானமும் ஆகும்.

மூன்று பேருக்கு மட்டுமே மனிதாபிமானத்தையும், இரக்கத்தையும் காட்டியுள்ள தமிழக சட்டப் பேரவை, மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றி, சரியான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே மனித உரிமையாளர்களின் வேண்டுதல் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil