Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா?

இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா?
, வெள்ளி, 3 செப்டம்பர் 2010 (18:16 IST)
FILE
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக, அஇஅதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, “இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது.
இலங்கை நமது நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பதில் கூறியுள்ளார்.

இந்தியாவின் அயலுறவு அமைச்சராகவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீ்ண்ட கால நிலையை வெளிப்படுத்துகிறது என்பதையும், தமிழர்களின் (அது இந்தியத் தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் ஆனாலும்) நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக நினைக்கிறது என்பதும் தமிழர்களுக்கோ அல்லது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கோ தெரியாதது அல்ல.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் (இதன் மூலம்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது) முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம் என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளாரே அதுதான் வேடிக்கையாகவுள்ளது!

இரகசியமாக செய்யப்பட்ட ஒப்பந்தம்!

1974ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்திக்கும், அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான (தமிழ்நாட்டின் சேதுபது அரசாட்சியின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்த) கச்சத் தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்றே (disputed island) கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.

கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது, அப்போது பேசிய தமிழக உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.மூக்கையாத் தேவர், விஸ்வநாதன் ஆகியோர் கச்சத் தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிப் பேசினர். ஆனால், அதற்கு உரிய பதில் தராமல் இந்திரா காந்தி அரசு தட்டிக் கழித்தது.

webdunia
FILE
ஏனென்றால் கச்சத் தீவு நமது நாட்டின் ஒரு பகுதி என்றால், அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் வேறொரு நாட்டிற்குத் தாரை வார்த்திட முடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதைத் தவிர்க்கவே - அதாவது இரகசியமாக வைத்து ஒப்பந்தம் போட்டு இலங்கைக்கு கொடுத்துவிடவதற்காகவே - கச்சத் தீவு இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்டத் தீவு என்று மத்திய அரசு நிலையெடுத்தது. (இத்றகான ஒத்திகை 1956ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வந்திருப்பது பின்னர் தெரிந்து வரலாறு).

தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் இரகசியமாக பேசி, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ‘முறையாக செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம’ என்கிறார் அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா!

அதுமட்டுமல்ல, எல்லைக் கோடு வரைவில் கூட ஒரு மோசடி செய்துதான் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்கரைகளில் இருந்து சம தூரத்தில் புள்ளிகளை வைத்து, அந்தப் புள்ளிகை இணைத்து கோடு போட்டு எல்லை நிர்ணயம் செய்து கொள்வது என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு கச்சத் தீவை இலங்கையின் கடல் எல்லைக்குள் வருவதற்கு ஏற்றார்போல் கோட்டை இழுத்து போட்டார்கள் என்று இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா கூறியுள்ளார்! இப்படியெல்லாம் மோசடி செய்து கொடுக்கப்பட்டதுதான் கச்சத் தீவு.

கச்சத் தீவு அரபிக் கடல் பகுதியில் இருந்து, அங்கு கர்நாடக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை இருந்திருந்தால், இப்படி பேசுவாரா கிருஷ்ணா? தமிழன் உரிமை இருந்தால் என்ன, போனால் என்ன?

‘பாதுகாப்புக் காரணத்திற்காகவே கொடுக்கப்பட்டது’

webdunia
FILE
1971ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நடைபெற்ற போரின்போது, தனது விமான தளங்களை பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடந்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அப்படிப்பட்ட நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இலங்கையை நட்பு நாடாக்கிக் கொள்ள கச்சத் தீவை கொடுத்து இந்த ஒப்பந்தத்தை இந்திரா காந்தி போட்டதாகக் கூறினார்கள். இதுதான் அதற்கான அடிப்படை என்றால், அதே காரணத்தைக் கூறி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று தமிழ்நாட்டின் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை டெல்லியால் பதில் தர முடியவில்லை.

அதற்கு பதிலளித்தால், அது ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய கட்டாயம் டெல்லிக்கு உருவாக்கிவிடும். 1962 போரில் சீன ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதியையும், இப்போது சீனா கேட்கும் அருணாச்சல பிரதேசத்தையும் தூக்கி கொடுத்துவிட்டு சீனாவின் நட்பைப் பெறலாமே? உலகின் மிக உயரமான போர்க்களம் என்றழைக்கப்படும் சியாச்சின் பனி மலைப் பகுதியை பாகிஸ்தானிற்கு கொடுத்துவிட்டு, அதோடு சேர்த்து ஜம்மு-காஷ்மீரையும் கொடுத்துவிட்டு அந்நாட்டின் நட்புறவையும் பெறலாமே என்றெல்லாம் கேள்வி எழுமல்லவா? அதனால்தான் டெல்லி பதில் கூறவில்லை.

அதுமட்டுமல்ல, 1974இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவை ஒட்டிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உள்ளது என்று அன்றைய அயலுறவு அமைச்சர் சுவரண் சிங் கூறினார். அந்த உரிமையை 1976ஆம் ஆண்டு இந்திய அயலுறவுச் செயலரும், இலங்கை அயலுறவுச் செயலரும் செய்துகொண்ட கடித பரிமாற்றத்தில் டெல்லி அரசு விட்டுத் தந்துவிட்டது. இதைத்தான் திமுக உறுப்பினர் பாலுவும், அஇஅதிமுக உறுப்பினர் தம்பித்துரையும் கேள்வியாக எழுப்பி, கச்சத் தீவை கொடுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தமிழக மீனவர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து அனுபவித்துவந்த பாரம்பரிய மீன் பிடி உரிமையை அவர்களின் சம்மதமின்றியும், தமிழக அரசின் ஒப்புதலின்றியும் எவ்வாறு விட்டுக் கொடுத்தீர்கள் என்பதற்கு கிருஷ்ணாவிடம் பதில் இல்லை. ஆனால் ‘முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம’ என்று கூறுகிறார்.

இலங்கை நட்பு நாடா?

“இலங்கை நட்பு நாடென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார். எப்படி அது நட்பு நாடென்று விளக்கவில்லை!

இந்தியாவிற்கும் சீனாவிற்கு எல்லைப் பிரச்சனையில் இருந்து பல பிரச்சனைகள் உள்ளன. இன்றளவும் சீனத்துடனான உறவு கேள்விக்குறியதாகத்தான் இருக்கிறது. அந்த சீனத்துடன் சிறிலங்க அரசு நட்பு பாராட்டி வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்கு இந்தியா உதவியிருக்காவிட்டால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சவும், அவருடைய மந்திரி பட்டாளங்களும் கூறுகின்றன. ஆனால் தங்களுடைய நட்பு நாடு என்று அவர்கள் சீனாவைத்தானே குறிப்பிடுகிறார்கள்? இந்தியா எனது சகோதர நாடு, அதாவது பங்காளி என்கிறார் ராஜபக்ச!

இந்தியப் பெருங்கடலில் தனது கட்டுப்பாட்டை கொண்டுவர நீண்ட காலம் முயற்சித்த சீன நாட்டிற்கு அம்மன்தோட்டத்தில் (சிங்கள மொழியில் ஹம்பன்தோட்டா) துறைமுகம் வசதியையும் அளித்து, அதனை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளது சிறிலங்க அரசு. இது இந்தியாவிற்கு ஏற்புடையதா என்ன? இப்படி ஒரு ஒப்பந்தம் நடந்தவுடன் இந்தியாவின் கடற்படை எந்த அளவிற்கு பதற்றப்பட்டது என்பது தெரியாதா?

போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கொழும்பு சென்ற அன்றைய அயலுறவு அமைச்சரிடம், வடக்கின் மேம்பாட்டுப் பணிகள் முழுவதும் இந்தியாவிற்கு்ததான் வழங்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். இப்போது நடப்பது என்ன? அங்குள்ள உள்கட்டமைப்புப் பணிகள் பல சீன அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி (ஜெயலலிதா அறிக்கை விடவில்லையா?). முல்லைத் தீவு கடற்பகுதில் மீன் பிடி உரிமை சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு பாதுகாப்பா? அச்சுறுத்தலா? யாரை ஏமாற்றுகிறது டெல்லி அரசு?

இந்தியாவிற்கு பாகிஸ்தான் பகை நாடு, ஆனால் சிறிலங்காவிற்கு நட்பு நாடு! இதையும் டெல்லி ஏற்கிறதா? அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது இலங்கைக்கு? இன்றைக்கு இந்தியாவிடன் உள்ள அதி நவீன ஏவுகணைகள் இலங்கைப் பகுதியில் இருந்து எழும் அச்சுறுத்தலை நொடியில் சிதைக்க வல்லனவாயிற்றே? டீகோ கார்சியா வரை தாக்கும் திறன் கொண்ட இந்தியாவிற்கு இலங்கை அச்சுறுத்தலாகிவிடுமா?

எல்லாம் ஏமாற்றுச் சொற்கள். இந்தியாவின் பெரு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து தங்கள் வணிக நலனை பெருக்கிக் கொள்ள ராஜபக்ச அரசு அனுமதிக்கிறது. அதை வைத்து அந்நாட்டை இந்தியாவின் நட்பு நாடு என்று கிருஷ்ணா கூறுகிறாரோ? அப்படியென்றால் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

ஏனென்றால் பெரு நிறுவனங்களின் நலனைத்தானே நாட்டு நலனாகவே பார்க்கிறது மன்மோகன் சிங் அரசு. இல்லையென்றால் பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டிவிட்டு, அங்குள்ள வளங்களை வேதாந்தா, டாட்டா, ஜிண்டால், பாஸ்கோ என்று பெரு நிறுவனங்களுக்கு வழங்க முடியுமா? எனவே இந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடுதான்.

Share this Story:

Follow Webdunia tamil