Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தகுதி தேர்வு; இடஒதுக்கீட்டில் முறைகேடு

Webdunia
சனி, 22 ஜூன் 2013 (20:46 IST)
FILE
தமிழகத்தில் ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்புவதற்காக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளது போல இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்வதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது.

தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில்( TEACHER ELIGIBILITY TEST) ‘தகுதி மதிப்பெண்களில்’ இட ஒதுக்கீடே வழங்கப்படவில்லை. அதாவது, வகுப்புவாரியான தனித்தனியான ‘தகுதி மதிப்பெண்கள்’ நிர்ணயம் செய்யப்படவில்லை.

தேர்வாணையம் வெளியிட்டுள்ள தேர்ச்சிப்பட்டியலில், இடம்பெற்றிருந்த மாணவர்களது பெயருக்குப் பக்கத்தில், அவர்கள் விண்ணப்பத்தில், குறிப்பிடப்பட்டுள்ள 'சாதிப்பிரிவு' குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும், முற்பட்ட வகுப்பினரை( FC) மட்டும் ' GT' (General turn) என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது மிகப்பெரிய சட்டமோசடியாகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், GT என்பது சாதி, இனம் சார்ந்தது அல்ல. உயர் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, அதில் இடம்பெற முடியும். எனவே, இதில் இடம் பெற்றுள்ளவர்களைவிட, இடஒதுக்கீட்டில் இடம்பெறும் மற்ற அனைவருமே, இடஒதுக்கீட்டு விதிகளின்படி, குறைவான மதிப்பெண்களையே பெற்றிருப்பார்கள்.

அதுவும், வேலைவாய்ப்பிற்கென வகுப்பு வாரியான காலிப் பணியிட விவரங்களைக் கொண்ட, தனி அறிவிக்கை வெளியிடாமலே 19000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது இன்னும் மிகப்பெரிய மோசடியாகும்.

மிகவும் மோசடியான முறையில், வெறும் தகுதித் தேர்வான TET- யிலிருந்து ( NET, SET போன்றது) நேரடியாக, பணி நியமனத்திற்கான கலந்தாய்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தயாரிக்கக்கூடாது. இதன் மூலம் மிகவும் மோசடியான முறையில் TET தேர்வை, வேலைவாய்ப்பிற்கென நடத்தப்பட்ட TRB நேரடிப் போட்டித் தேர்வு என்பது போன்று தோற்றம் பெறச் செய்திருக்கிறார்கள்.

இப்படி மோசடியாகத் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இன்னும் மோசடியாக, மீண்டும் உயர் சாதியினரை மட்டும் GT எனக் குறிப்பிட்டு, தேர்வு பெற்ற அனைத்து உயர்ஜாதியினருக்கும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய வேலைவாய்ப்புகளை சட்ட விரோதமான முறையில் பிடுங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு அடிப்படை என்று சொல்லிவிட்டு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தவர்களை எல்லாம், SC, BC என்றும் ஒதுக்கிவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றி பெற்ற உயர்ஜாதியினரை மட்டும் GT என்று குறிப்பிட்டு, வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வெளியே தெரியாமல் இருக்க, முறையாக அறிவிக்கப்படவேண்டிய, வகுப்புவாரியான ‘கட் ஆஃப்’ தேதி அறிவிக்கப்படவில்லை. அதோடு, எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில், வழக்கமாக வெளியிடும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட பொதுப்பட்டியலையும் திரு.சுர்ஜித் சௌத்திரி வெளியிடவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் தனித்தனியாகத் தெரிந்துகொள்ளும் வண்ணம், இணையதளத்தில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, மதிப்பெண்களே இல்லாமல், மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி எப்படி தயாரிக்க முடியும் என்று தெரியவில்லை. அதிலும் பிறப்பால் உயர்ஜாதியினரை மட்டும் GT எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி குறிப்பிடக் கூடாது என உயர்நீதிமன்றம் 01.10.2012 அன்று இதே போன்று ஏற்கெனவே தயார் செய்து வெளியிடப்பட்டிருந்த முதுநிலை ஆசிரியர் பட்டியலை முழுமையாக இரத்து செய்ய உத்தரவிட்டிருந்தும், மீண்டும் அடுத்த ஒன்றரை மாதத்தில் அதே மோசடியைத் துணிச்சலாகச் செய்து, 19000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 19000 ஆசிரியர் பணியிடங்களுக்கும் முறைப்படி வெளியிட வேண்டிய, ‘கட் ஆப்’ மதிப்பெண்களையே வெளியிடவில்லை.

முதுநிலை ஆசிரியர்கள் பட்டியலைப் பொறுத்தவரை, உயர்சாதியினரை மட்டும், GT எனக் குறிப்பிட்டு, இதே சௌத்திரி, கடந்த 27.07.2012 அன்று வெளியிட்ட, ஒரு பட்டியலை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு வேறு வழியின்றி முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கென ‘கட் ஆப்’ மதிப்பெண்களை முறைப்படி வெளியிட்ட பிறகும், அதில் ‘GT’ ‘கட் ஆப்’க்கு மேல் பெற்ற, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் GT பிரிவில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட அத்தனை மோசடிகளையும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக இருக்கும் திரு.சுர்ஜித் சௌத்ரி திட்டமிட்டே செய்திருக்கிறார். அவரை உடனடியாக நீக்கிவிட்டு, அவர்மீது திட்டமிட்ட சதி செய்ததாக கிரிமினல் வழக்குத் தொடுக்கப்படவேண்டும்.

சமூகநீதியை முற்றிலும் புறக்கணித்து நிரப்பப்பட்டிருக்கும், இந்நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்து, முறையான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வில்’ முதல் அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் முறையான ‘கட் ஆஃப்’ பட்டியல்கள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

இதற்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா ஒட்டு மொத்தமாக 69 சதவிகிதம் இடஒதுக்கீடு என்ற நிலையை அனைத்து எதிப்புகளையும் மீறி அமல்படுத்தினார். அதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல்வர் ஜெயலலிதாவிற்கு "சமூகநீதி காத்த வீராங்கணை" என்ற பெயரை சூட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் அதே அதிமுக ஆட்சியில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் இடஒதுக்கீட்டில் வரலாறு காணாத அளவிற்கு மோசடி நிகழ்ந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. இந்த முறைகேட்டை கழைந்து தமிழக அரசு மீண்டும் இடஒதுக்கீட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments